Published:Updated:

வண்டலூரில் 9 சிங்கங்களுக்கு கொரோனா, ஒரு சிங்கம் உயிரிழப்பு... உறுதி செய்த அதிகாரிகள்!

சிங்கம்
சிங்கம்

11 சிங்கங்களிடம் மூக்கு மற்றும் மலவாயிலிருந்து மாதிரிகள் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மத்தியப் பிரதேசத்தில், போபாலில் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு நோய் தேசிய நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் ஒரு சிங்கம் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வண்டலூர் பூங்காவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``வண்டலூர் பூங்காவிலுள்ள சிங்க உலாவிட இருப்பிடத்திலிருந்த 5 சிங்கங்கள் கடந்த மாதம் 26-ம் தேதியிலிருந்து சரியாக உணவு உண்ணவில்லை. மேலும், அவை தொடர் இருமல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. இதைத் தொடர்ந்து, வனவிலங்கு மருத்துவர்கள் அவற்றை ஆய்வு செய்து சிகிச்சை அளித்துள்ளனர்.

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா
Rasnaboy

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகத்தினுடைய கோரிக்கையை ஏற்று, மேற்படி சிகிச்சைக்காக மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் அனுப்பி வைத்தது.

இந்நிலையில், 11 சிங்கங்களிடம் மூக்கு மற்றும் மலவாயிலிருந்து மாதிரிகள் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மத்தியப் பிரதேசத்தின் போபாலில் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு நோய் தேசிய நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த மாதிரிகளின் பரிசோதனை முடிவுகளின்படி 9 சிங்கங்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டது.

பாசிட்டிவ் என்று உறுதியான சிங்கங்களை நுண்ணிய கண்காணிப்பில் வைத்து, அறிவுறுத்தப்பட்ட சிகிச்சைகளை தமிழ்நாடு கால்நடை மருத்துவக் குழுவினருடன் இணைந்து அளிக்கப்பட்டு வருகின்றன. இங்குப் பணிபுரியும் அனைத்து விலங்குக் காப்பாளர்களுக்கும் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளாது. ஒவ்வொரு சிங்க குழுவுக்கும் தனிப்பட்ட ஒரு குழுவாக விலங்கு காப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பி.பி.ஈ உபகரணங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. கால்நடை மருத்துவர்களும் களப்பணியாளர்களும் அங்குத் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கம்/ வண்டலூர் பூங்கா
சிங்கம்/ வண்டலூர் பூங்கா
Padmanabhan07

மேலும், ``நேற்று மாலை 6.15 மணிக்கு அங்கிருந்த 9 வயதான நீலா என்ற பெண் சிங்கம் உயிரிழந்துள்ளது. இந்த சிங்கம், பாதிக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே மூக்கிலிருந்து சில திரவங்களைச் சுரந்துகொண்டிருந்துள்ளது. அதற்கு உடனடியாகச் சிகிச்சை தரப்பட்டது" என்றும் வண்டலூர் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வண்டலூர் பூங்காவில் மொத்த 11 சிங்கங்கள் இருக்கின்றன. அதில் 9 சிங்கங்கள் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே ஹைதராபாத், ஹெய்பூர் பூங்காக்களில் சிங்களுக்குக் கொரோனா பாசிட்டிவ் உறுதியானதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு