Published:Updated:

`வாரம் ஒரு சாரைப்பாம்பு; பெரிய கோழி; லைட் ஆகாது!'- பாம்புகளின் `திகில்' சர்வைவல் சொல்லும் ரத்தினம்

ரத்தினம்

``நாம இல்லாம அது இருக்கும். அது இல்லாம நாம இருக்க முடியாது. வனம் இருந்தாதான் மனுஷன் இருக்க முடியும். இந்த உயிரினங்கள் கூட வாழும்போதுதான் இன்னொரு உலகம் நமக்கு புரியுது” என்கிறார், ரத்தினம்.

`வாரம் ஒரு சாரைப்பாம்பு; பெரிய கோழி; லைட் ஆகாது!'- பாம்புகளின் `திகில்' சர்வைவல் சொல்லும் ரத்தினம்

``நாம இல்லாம அது இருக்கும். அது இல்லாம நாம இருக்க முடியாது. வனம் இருந்தாதான் மனுஷன் இருக்க முடியும். இந்த உயிரினங்கள் கூட வாழும்போதுதான் இன்னொரு உலகம் நமக்கு புரியுது” என்கிறார், ரத்தினம்.

Published:Updated:
ரத்தினம்

உயிரியல் பூங்காவின் பாம்புப் பண்ணைக்குள் நுழைந்ததில் இருந்தே கனத்த அமைதி ஒன்று நிலவியது. அமைதியான சூழலின் நடுவே காற்றில் இலைகள் உரசும் `உஸ்’ சப்தங்கள் சுற்றியிருக்கும் பாம்பின் மீதான பயத்தை நினைவூட்டிக்கொண்டே இருந்தன. தரையில் கிடக்கும் சருகுகள், கால்களை உரசினால்கூட பாம்பாக இருக்குமோ என்ற அச்சத்தில் பதறிய கணங்கள் இன்னும் நினைவிலிருந்து அகலவில்லை. இப்படியான உணர்வுகளுக்கு இடையேதான் ரத்தினம் பாம்புகளை அறிமுகப்படுத்த அழைத்துச் சென்றார்.

கண்ணாடி திரைகளுக்குப் பின்னால் உள்ள கம்பி வலைகளின் நடுவே, மிதமான வெப்பநிலையில் பானைகளுக்கு உள்ளேயும் சருகுகளுக்கு இடையேயும் ராஜ நாகங்கள் (கிங் கோப்ரா) நெளிந்துகொண்டு இருந்தன. அதனுடைய எல்லைக்குள் யாரோ வருவதை உணர்ந்ததும் மெல்ல பானை மற்றும் சருகுகளுக்கு இடையில் இருந்து தலையைத் தூக்கிப் பார்த்தது. ``ஏ, குட்டி..! டோய்..! கோபமா இருக்கியா? என்னடா செல்லம்..!” என்று ரத்தினம் கொஞ்சத் தொடங்கியதும் பெண் ராஜநாகம் தலையை இன்னும் கொஞ்சம் மேலே தூக்கி நாக்கை வெளியே நீட்டியபடி அவரைப் பார்த்துக்கொண்டிருந்தது.

ராஜ நாகம்
ராஜ நாகம்

``அங்க ஒருத்தன் பாக்குறான் பாரு!” என்று ஆண் ராஜநாகத்தைக் காட்டி அதையும் கொஞ்சம் கொஞ்சுகிறார். சுமார் 18 அடிக்கும் மேல் இருக்கும் அந்த ராஜநாகம் படமெடுத்தபடி நிற்க எதிரில் சில அடி தூரங்களில் தடுப்பு எதுவுமின்றி அவர் கொஞ்சிக்கொண்டிருக்கிறார். இருவருக்கும் இடையில் நிகழ்ந்துகொண்டிருந்த அழகான உரையாடலைத் தாண்டி அருகில் இருந்தவனின் இதயம் ஃபாஸ்ட் பீட்டில் ராப் பாடிக்கொண்டிருந்தது. ``ஒண்ணுமே செய்யாது தம்பி” என்றவரிடம் `நீங்கள் என்ன சொன்னாலும் கேட்குமா?’ என்றேன். ``பாம்புகளுக்குக் காது கிடையாது. பூமியில் விழும் அதிர்வுகளையும் மணங்களையும் வைத்து எல்லாவற்றையும் அறிந்துகொள்ளும். நாக்கை வச்சுதான் நுகரும். மற்றபடி மகுடி ஊதுறது எல்லாம் சும்மா” என்று சிரிக்கிறார். ``நம்முடைய அசைவுகளை வைத்து தலையைத் திருப்பும் அவ்வளவுதான்” என்றபடி ராஜநாகத்தை கவனிக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வேலிகளுக்கு வெளியே வந்து, மீண்டும் அதனிடம் பேசத் தொடங்குகிறார். ``வா டா.. வா!” என அழைத்து கையை வைத்து அவர் செய்கை செய்ய, `உஸ்ஸ்ஸ்..’ என்று இரண்டு அடி தூரம் எழும்பி வேகமாக அருகில் வந்தது. கைகளையும் கால்களையும் நடுங்க வைத்த அந்தத் தருணங்ளை எப்படி மறக்க முடியும். ``வாரத்துக்கு ஒருமுறை சாரைப்பாம்பை உணவாகக் கொடுப்போம். உயிருடன் கொடுத்தால்தான் சாப்பிடும். ரொம்ப விரும்பிச் சாப்பிடும்” என்று கொஞ்சிக்கொண்டே வெளியே வந்தார். `வாரத்துக்கு ஒன்று போதுமா?’ என்று கேட்டதற்கு, ``காட்டுல அதுக்கு உணவு கிடைக்க ஒரு மாதம் ஆகும், இரண்டு மாதம் ஆகும். அதனால, வாரத்துக்கு ஒரு பெரிய பாம்பு போதுமானதுதான்” என்றார்.

``ராஜ நாகத்தைப் பாதுகாப்பது ரொம்ப கஷ்டம். நம்ம ஊரு கிளைமேட்டுக்குலாம் தாங்காது. சீக்கிரம் செத்துரும். ரொம்ப கவனமா இருக்கணும். ரொம்ப சாந்தமானது, பாசமானது, கூச்ச சுபாவம் உடையது. நம்ம போனா அமைதியா இருக்கும். வேற யாராவது போனா ஒளிஞ்சிக்கும். பெண் ரொம்ப ஆக்ரோஷமானது. இனப்பெருக்கமும் ரொம்ப கஷ்டமா இருக்கும். சரியா ஒத்துப்போகலனா பெண், ஆணைக் கடிச்சுக் கொன்று விடும். ஆனால், மனுஷங்க ராஜ நாகம் கடிச்சு செத்ததா ரெக்கார்டு இல்ல” என்ற ரத்தினம் மற்ற பாம்புகள் இருக்கும் இடத்துக்கும் அழைத்துச்சென்றார்.

பாம்பு
பாம்பு
Vandalur Zoo

விஷப்பாம்புகளைப் பற்றிக் கேட்டபோது, ``கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டைப் பாம்பு, நல்ல பாம்பு போன்ற சிலவகைகள்தான் உண்டு. இந்தமாதிரி பாம்புகளுக்கு எலி, கோழிக்குஞ்சு, தவளைகளைச் சாப்பிடக் கொடுப்போம். பெரிய மலைபாம்புகளுக்குப் பெரிய கோழி சாப்பிடக் கொடுப்போம். லைட்டுலாம் போட்டா கதிவீச்சு பாதிப்பால செத்துரும். எந்த அளவில் இயற்கையான சூழலைக் கொடுக்கிறோம் என்பது முக்கியம். அப்போதுதான் அதிகமான நாள்கள் பாம்புகள் உயிர்வாழும். நாம நினைக்கிறது மாதிரி இதெல்லாம் எளிதான விஷயம் இல்ல. மலைப்பாம்புலயே நிறைய வகை இருக்கு. எல்லாத்துக்கும் சின்ன வேறுபாடுகள் இருக்கும்” என்றவர் கண்ணாடிக் கூண்டுகளில் கிடக்கும் ஒவ்வொரு பாம்பையும் காண்பித்தார்.

`எந்தப் பாம்பை பராமரிக்கிறது ரொம்ப கஷ்டம்’ என்று கேட்டேன். ``எதுவுமே கஷ்டம் இல்ல தம்பி. கண்ணாடி கிளீன் பண்ண, அதுங்களோட வேஸ்ட கிளீன் பண்ண டெய்லி போறேன். நினைச்சிருந்த எப்பவோ என்னைக் கொன்றிருக்கலாம். ஆனால், உள்ள போனால், எதாவது சாப்பிட தருவான்னு பாசமா கிட்ட வரும். நம்ம எதுவும் பண்ணாத வரை அது நம்மள எதுவும் செய்யாது. எல்லாருமே சாப்பாட்டுக்காகத்தானே வாழுறோம். அதுங்களும் உயிருதான. மற்றபடி மனிதர்களைக் கொல்லும் நோக்கம் எல்லாம் அதுங்களுக்குக் கிடையாது” என்றார் அமைதியுடன். இந்தா, பச்சைப் பாம்பு கிடக்கு என்று அதைக் குறிப்பிட்டு, ``கண்ண கொத்தணும்னு அதுக்கு எண்ணமில்ல.. அங்க இங்க நாம் பார்க்கும்போது வண்டு மாதிரி கருவிழி இருக்குனு கொத்தும்” என்றார்.

திடீரென்று, அரங்கில் பார்வையாளர் ஒருவர் ரத்தினத்திடம் வந்து கோபமாக, ``ஏன் தாத்தா, அதுக்குக் கோழிக்குஞ்சு போட்ருகீங்க. பாவமில்லயா அது. பாம்பு அத சாப்பிடுது” என்றார். ``ஆஹா.. ஒண்ணை சாப்பிட்டுதான இன்னொண்ணு உயிர்வாழும்” என்று சொல்லி.. ``நீ மீன் சாப்பிடுவியா?” என்று சிரித்தார். தொடர்ந்து நம்மிடம், ``பாம்புகள் நைட்டுதான் அதிகமாக சுறுசுறுப்புடன் இருக்கும். அப்போ, இன்னும் மூவிங் அதிகமா இருக்கும்” என்றார். `இவ்வளவு நாள் பாம்புகூட இருந்துருக்கீங்களே உங்கள அது கடிச்சதே இல்லயா?’ என்று ஆச்சர்யமாகக் கேட்டேன்.

``கண்ணாடி துடைக்க ஒரு தடவ உள்ள போனேன். நல்ல பாம்பு படுத்து இருந்துச்சு. கால் தட்டி பேலன்ஸ் மிஸ் ஆயிடுச்சு. பாம்பு மேல கைய வச்சிட்டேன். விரல்ல கடிச்சு, அதோட பல்லு விரல் நகக்குருத்துல மாட்டிக்கிச்சு. வெளிய வந்து புடிச்சு இழுத்து வெளிய போட்டேன். அப்பவும் பயம் இல்ல. ஒண்ணும் செய்யாதுனு நம்பிக்கை. ஆனால், விரல் பாதிய எடுக்க வேண்டிய நிலைமை வந்துச்சு. கோபம்லா இல்ல, தப்பு நம்மமேலதான. இதே மாதிரி நைட்டு ஒருநாள் இங்க படுத்துச்சு இருக்கும்போது காட்டுப் பாம்பு என் மேல ஊர்ந்து போயிருக்கு. இப்படிலாம் இருந்து பயமே இல்லாமப் போச்சு. முட்டை போடும்போது, குட்டி போடும்போது கொஞ்சம் கவனமா இருக்கணும்” என்று பெருமூச்சுடன் கூறினார்.

ரத்தினம்
ரத்தினம்

``வீட்டுல இருக்குறவங்கதான் ஆரம்பத்துல பயந்தாங்க'' என்றவர், ``பாம்புமேல ஒரு வாசனை இருக்கும். அது நமக்கே பிடிக்காது. நம்ம மேல அதுபடும். அப்போ வீட்டுல உள்ளவங்க பக்கத்துல வர மாட்டாங்க. இப்போ அவங்களுக்குப் பழகிடுச்சு” `நல்ல பாம்ப அடிச்சா பழி வாங்கும்னு சொல்லுவாங்களே! அது உண்மையா..’ என்றதற்கு சிறிது நேரம் சிரித்தார். ``கண்ணுல மாட்டுனா அது எதுவும் செய்யாமலேயே நாம அடிப்போம். தப்பிச்சோம்.. பிழைச்சோம்னு அதுவும் ஓடும். இதுல எங்க இருந்து திரும்ப வந்து பழி வாங்குறது?” என்று கேட்டார். ``விவசாயிகளின் நண்பன் என்றால் பாம்புதான். வயலில் எலிகள் மற்றும் தவளைகளைக் கொன்று தின்னும். இப்படி பாம்பால நன்மைகள் அதிகம். அதுங்க இடத்துல நம்ம இருந்துட்டு. பாம்பு வருதுனா? என்ன அர்த்தம்” என்று உணர்ச்சிவசப்படுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், ``நாம இல்லாம அது இருக்கும். அது இல்லாம நாம இருக்க முடியாது. வனம் இருந்தாதான் மனுஷன் இருக்க முடியும். இந்த உயிரினங்கள் கூட வாழும்போதுதான் இன்னொரு உலகம் நமக்கு புரியுது. ஒரு மரத்தை வெட்டணும்னு நினைச்சாலே, இப்போதெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு. மரத்தை நட்டு வளர்க்குறேன். நாம இருக்கமோ? இல்லயோ? மரம் இருக்கட்டும். இந்த உலகத்துல எல்லாத்துக்கும் இடம் இருக்கு. ஒன்றை ஒன்று சார்ந்து இருந்தால்தான் வாழ முடியும். அந்த வகையில் பாம்புக்கும் இடம் உண்டு. நிறைய பாம்பு வந்துச்சுனா காட்டுல விடப்போவோம். விட்டுட்டுத் திரும்பவர மனசே இருக்காது” என்று கலங்கிய கண்களுடன் பாம்புக்கும் தனக்குமான உறவைக் குறித்து நெகிழ்ந்தார், ரத்தினம்.