Published:Updated:

`எங்க வீட்டுல தண்ணீர்ப் பிரச்னை கிடையாது... மின்கட்டணமும் குறைவு!' இன்ஜினீயரிங்கில் அசத்தும் டாக்டர்கள்

இவர்கள் வீட்டின் தண்ணீர்த் தேவையை மழைநீரே பூர்த்தி செய்து விடுகிறது.

டாக்டர் தம்பதிகள்
டாக்டர் தம்பதிகள்

தமிழகத்தில் வருடந்தோறும் கோடைக் காலத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டாலும் நிலைமையைச் சமாளிக்க நிலத்தடி நீரும், பருவ மழையும் உறுதுணையாக இருந்துவந்தது. ஆனால், கடந்த ஆண்டு பருவமழை பொழியாத நிலையில், பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்திருக்கிறது. இதனால் தமிழகம் முழுக்க பல இடங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. அதுவும் சில பகுதிகளில் அன்றாட தேவைக்குக்கூட தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியிருக்கின்றனர்.

மழைநீர் சேகரிப்பு
மழைநீர் சேகரிப்பு

அதே நேரம் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை உணர்ந்து மழைநீரைச் சேமித்து வைத்தவர்கள் நிலைமையைச் சமாளித்து விடுகிறார்கள். மழைநீரைச் சேகரித்து வைத்துப் பயன்படுத்தி வருகிறார் வேலூரில் வசிக்கும் மருத்துவர் கந்தசாமி சுப்பிரமணி. இவர் சி.எம்.சி. தீவிர சிகிச்சைப் பிரிவில் தலைமை மருத்துவராக பணியாற்றி வருகிறார். மழைநீர் சேகரிப்பு முறையைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக அவரது வீட்டுக்கு நேரடியாக ஒரு விசிட் அடித்தோம்.

மழைநீரைச் சேகரித்து வைக்கும் யோசனை எப்படி வந்தது ?

மழைநீர் சேகரிப்பு
மழைநீர் சேகரிப்பு

`` வேலூர் மாவட்டத்தில் வெயில் அதிகமாகவும் மழையின் அளவு குறைவாகவும் இருக்கும். இங்கு பெரிய அளவில் அணைகளும் கிடையாது. பருவ மழை சரியாகப் பெய்யாமல் போனால் ஏரிகள், குளங்கள் வறண்டே காணப்படும். மேலும், கோடைக்காலங்களில் நிலத்தடி நீரும் கீழே சென்றுவிடும். அப்போது தண்ணீர்ப் பற்றாக்குறை நிச்சயமாக ஏற்படும். அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்கச் சிரமப்பட வேண்டியிருக்கும். இது போன்ற பல விஷயங்களை யோசித்த பின்னரே மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்த முடிவு செய்தோம். கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து இதைச் செயல்படுத்தி வருகிறோம்."

எந்த முறையில் மழைநீரைச் சேகரிக்கிறீர்கள் ?

`` முதலில் மழை நீரைப் பூமிக்குள்தான் அனுப்பிக் கொண்டிருந்தோம். அதற்காகத் தனியே தொட்டி போன்ற அமைப்பை அமைத்திருந்தோம். அதன் மூலமாக நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. அதே நேரம் மழை நீரைத் தொட்டியிலும் சேமித்து வைக்கலாம் என்று முடிவெடுத்தோம். அதற்காக வீட்டில் கார் நிறுத்தும் இடத்தை தேர்வு செய்து 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியை நிலத்துக்கு அடியில் கட்டினோம்.

மழைநீர் சேகரிப்பு
மழைநீர் சேகரிப்பு

மழைநீர் வெளியேறும் அனைத்து பைப்களையும் கீழே ஒன்றாக இணைத்திருக்கிறோம். பின்னர் அந்த நீர் கருங்கற்கள், அடுப்புக் கரி மற்றும் மணல் ஆகியவை நிரப்பப்பட்டுள்ள தொட்டிக்குச் செல்கிறது. அங்கே இலைகள், திடப்பொருள் போன்றவை வடிகட்டப்பட்டுவிடும். அதன் பிறகு தண்ணீர் தொட்டிக்குள் செல்லும்".

சேமித்து வைக்கப்பட்ட தண்ணீர் வீட்டில் எந்த தேவைக்கெல்லாம் பயன்படுகிறது என்று கந்தசாமி சுப்பிரமணியின் மனைவி மருத்துவர் சத்யாவிடம் கேட்டோம்

மாடித்தோட்டம்
மாடித்தோட்டம்

``மழை நீரைச் சுத்திகரித்து அதைத்தான் சமைக்கவும் , குடிக்கவும் பயன்படுத்துகிறோம். குளியல் மற்றும் கழிப்பறை தேவைகளுக்குப் போர் நீரைப் பயன்படுத்துகிறோம். மாடியில் மாடித்தோட்டம் அமைச்சிருக்கோம். அந்தச் செடிகளுக்குச் சொட்டு நீர்ப் பாசனம் மூலம் நீர் பாய்ச்சப்படுகிறது. செடிகளுக்கு எந்தவித செயற்கை மருந்துகளையோ பயன்படுத்துவது இல்லை. சமையல் கழிவுகளைத் தான் உரமாகப் பயன்படுத்துகிறோம்."

தொட்டியில் சேரும் மழைநீர் எத்தனை நாளைக்கு போதுமானதாக இருக்கிறது ?

`` எங்கள் வீட்டில் இப்போது நான்கு பேர் இருக்கிறோம். அது மட்டுமல்லாமல் அடிக்கடி விருந்தினர்கள் வருவார்கள். எப்படிப் பார்த்தாலும் இந்தத் தண்ணீரை அதிகபட்சம் 8 மாதங்கள் வரைக்கும் பயன்படுத்துகிறோம். இப்போது பருவ மழை குறைவாக இருப்பதால் தொட்டியில் நீரின் அளவு குறைவாக இருக்கிறது. போர் தண்ணீர் இருக்குமா, இருக்காதா என்ற எண்ணம் இல்லாமல் தொலை நோக்குப் பார்வையில் நானும் என் கணவரும் யோசித்ததால் ரூ.4 லட்சம் செலவில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினோம்.

சோலார்பவர் சிஸ்டம்
சோலார்பவர் சிஸ்டம்

மொட்டை மாடியில் சோலார்பவர் சிஸ்டம் அமைத்திருக்கிறோம் அதனால் மின் கட்டணமும் மிகக் குறைவாகத்தான் வருகிறது. தற்போது தமிழகத்தில் தண்ணீர்ப் பஞ்சம் கடுமையாக உள்ளது. ஆனால், எங்களுக்கு அப்படி இல்லை. தண்ணீர் பஞ்சத்தைப் போக்க மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை மிகத் தீவிரமாக அமல்படுத்துவது நல்ல பயனைக் கொடுக்கும். அதனால் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து ஆண்டு முழுவதும் தேவையான நீர் மக்களுக்குக் கிடைக்கும்" என்றார்.