Published:Updated:

வேகமாக வற்றும் விக்டோரியா நீர்வீழ்ச்சி... ஆப்பிரிக்காவில் நூற்றாண்டு காணாத வறட்சி!

நீர்வீழ்ச்சியின் பெரும்பகுதி வறண்டுவிட்டது. இந்த நிலை இன்னும் சில மாதங்களுக்கு அல்லது அடுத்த ஆண்டு முழுவதுமேகூட நீடிக்கலாமென்று கணிக்கப்படுகிறது.

`தரவுகள் உணர்வுகள் அற்றவை' என்பார் யூபெர்ட் ஏஞ்செல். உண்மைதான். ஆனால், உணர்ச்சிகளுக்கு உயிர்கொடுத்து, அவற்றின் நியாயமான காரணங்களை நடைமுறையில் சாத்தியமாக்கத் தரவுகள் அவசியம். அவையே, நம் உணர்வுகளை ஆழமாகப் பாதிக்கக்கூடிய பிரச்னைகளின் முழுப் பரிமாணத்தையும் புரியவைக்கும். அதனாலேயே தரவுகள் மிகவும் முக்கியம். இப்போது ஆப்பிரிக்கக் கண்டத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள விக்டோரியா நீர்வீழ்ச்சி வறண்டுபோனதற்குக் காரணம், சராசரி வறட்சியல்ல, காலநிலை மாற்றத்தின் உந்துதலால் உண்டான நூற்றாண்டு காணாத வறட்சி என்பதை அப்படிப்பட்ட தரவுகள்தான் புரியவைத்துள்ளன.

நீர்வரத்து இருந்தபோது...
நீர்வரத்து இருந்தபோது...
Pixabay

ஆப்பிரிக்கக் கண்டத்தின் நான்காவது பெரிய நதியான ஜம்பேசி (Zambezi) நதியிலுள்ள விக்டோரியா நீர்வீழ்ச்சி ஜிம்பாப்வே, ஜாம்பியா நாடுகளின் எல்லையில் 1.7 கிலோமீட்டர் அகலத்துக்கு, 108 மீட்டர் உயரத்துக்கு அமைந்துள்ளது. அக்டோபர் 2018-ம் ஆண்டிலிருந்து சிறிது சிறிதாக வற்றத் தொடங்கிய இந்த நீர்வீழ்ச்சி இப்போது கிட்டத்தட்ட முழுமையாக வற்றிவிடும் நிலையில் வந்து நிற்கிறது. இன்னும் அழுத்தமாகச் சொல்ல வேண்டுமென்றால் தன் இருப்பைத் தக்கவைக்கப் போராடிக் கொண்டிருக்கிறது. அங்கு அப்படியொரு நீர்வீழ்ச்சியே இல்லாமல் போய்விடுமோ என்கிற அளவுக்குப் பெரிய வறட்சியை அது சந்தித்துக்கொண்டிருக்கிறது.

தெற்கு ஆப்பிரிக்காவின் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய மிகப்பெரிய சுற்றுலாத் தலம், இன்று நூற்றாண்டு காணாத வறட்சியில் சிக்கிச் சிதைந்துகொண்டிருக்கிறது. 1855-ம் ஆண்டு விக்டோரியா நீர்வீழ்ச்சியைப் பார்த்த ஐரோப்பிய ஆய்வாளர் டேவிட் லிவிங்ஸ்டன் `தேவதைகளைக் காணத் தகுந்த இடம்' என்று வர்ணித்தார். இயற்கை என்னும் தேவதையின் மொத்த அழகையும் அது தன்னகத்தே கொண்டிருந்ததால், அந்த நீர்வீழ்ச்சியை அவர் அப்படி வர்ணித்தார். அன்று அப்படியொரு அழகுக் களஞ்சியமாகத் திகழ்ந்த பகுதி, இன்று சீரழிந்து இல்லாமலாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் இப்போதைய அதிர்ச்சியளிக்கக்கூடிய உண்மை.

1957-ம் ஆண்டில், ஒவ்வொரு நொடியும் 8,700 கன மீட்டர் தண்ணீர் அதில் கொட்டிக்கொண்டிருந்தது. இன்று, அதில் நொடிக்கு 1,000 கனமீட்டர் நீர் மட்டுமே கொட்டுகின்றது.

60 ஆண்டுகளாக அதில் வந்துகொண்டிருந்த நீரின் அளவு இப்போது மிகக் குறைந்துவிட்டது. நீர்வீழ்ச்சியின் பெரும்பகுதி வறண்டுவிட்டது. இந்த நிலை இன்னும் சில மாதங்களுக்கு அல்லது அடுத்த ஆண்டு முழுவதுமேகூட நீடிக்கலாமென்று கணிக்கப்படுகிறது.

சில நாள்களுக்குமுன், பி.பி.சி-யில் வெளியான ஓர் ஆவணப்படம் இந்த நீர்வீழ்ச்சி வறண்டுகொண்டிருக்கிறது என்று பேசியபோது அதை அந்தப் பகுதியின் சுற்றுலாத் துறையிலிருக்கும் சில நிறுவனங்கள் முற்றிலுமாக மறுத்தன. அந்தக் கூற்றை ஒரு கற்பனை என்றும் நீர்வீழ்ச்சி வறண்டு போகவில்லை என்றும் கூறின. அப்போது பி.பி.சி தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த, காலநிலை அமைச்சகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் எலீஷா மோயோவும் (Elisha Moyo) அது வறண்டுகொண்டிருப்பதை உறுதி செய்தார். அவர்கள் அதையும் மறுத்ததோடு, இப்படிப் பொய்யான தகவல்களைப் பரப்புவதால், ஜிம்பாப்வே-வின் சுற்றுலாத்துறைதான் அடிபடும் என்றும் விமர்சித்தார்கள். எது உண்மை? அந்த நீர்வீழ்ச்சி வறண்டுகொண்டிருக்கிறதா!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1957-ம் ஆண்டில், ஒவ்வொரு நொடியும் 8,700 கன மீட்டர் தண்ணீர் அதில் கொட்டிக்கொண்டிருந்ததாகக் கூறுகிறார், 2019-ம் ஆண்டில் விக்டோரியா நீர்வீழ்ச்சி மீது காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்த தென்னாப்பிரிக்கப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் காட்வெல் நேமோ (Godwell Nhamo). இன்று, அதில் நொடிக்கு 1,000 கன மீட்டர் நீர் மட்டுமே கொட்டுகின்றது. ஆப்பிரிக்கக் கண்டத்தின் தெற்குப் பகுதியில் அதிகரித்துவிட்ட தட்பவெப்பநிலையே இதற்குக் காரணமென்று ஆய்வாளர்கள் காலநிலை மாற்றத்தின்மீது குற்றம் சுமத்துகிறார்கள். உதாரணத்துக்கு, 1976-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை கடந்த 40 ஆண்டுகளில் 19 ஆண்டுகள் இந்த நீர்வீழ்ச்சி வறட்சியைச் சந்தித்துவிட்டது.

டிசம்பர் 4-ம் தேதியில், மோசமாக வறண்டபிறகு...
டிசம்பர் 4-ம் தேதியில், மோசமாக வறண்டபிறகு...
காலநிலை மாற்றத்தால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடம்! - அதிர்ச்சி தரும் அறிக்கை

கடந்த 20 ஆண்டுகளில் பெய்கின்ற மழை அளவும் குறைந்துவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் தொடர்ந்து நான்கு வருடங்களுக்கெல்லாம் வறட்சி நீண்ட கொடுமைகளும் நிகழ்ந்துள்ளன. ஜிம்பாப்வேயில் அக்டோபர் மாதம்தான் மழை தொடங்கும். 1976-லிருந்து இருக்கின்ற பதிவுகள்படி, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தில் 40 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. அது படிப்படியாகக் குறைந்து இந்த ஆண்டு கொஞ்சம்கூட மழை பெய்யாமல் போனதால் இந்த அக்டோபர் மாதம் மிகுந்த வறட்சியுடனேயே கடந்தது. கடந்த 40 ஆண்டுகளில், காலநிலை மாற்றத்தால் வெப்பநிலை 1.4 டிகிரி செல்ஷியஸ் உயர்ந்துவிட்டது. இது ஆப்பிரிக்காவின் தெற்குப் பகுதியுடைய சராசரி வெப்பநிலை உயர்வு. கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத மோசமான வெப்பநிலை உயர்வாக இது கூறப்படுகிறது. ``இதற்குக் காரணம் காலநிலை மாற்றம்தான். அந்த யதார்த்தத்தை நாம் உணர வேண்டும்" என்கிறார்கள் ஜிம்பாப்வே ஆராய்ச்சியாளர்கள்.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே அந்த நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள மனா பூல்ஸ் (Mana Pools) மற்றும் ஹவாங்கே தேசியப் பூங்காவில் (Hwange National Park) 200 யானைகள் கடுமையான வறட்சி காரணமாகப் பசியாலும் தாகத்தாலும் உயிரிழந்துள்ளன. இப்போது, நூற்றுக்கணக்கான யானைகளையும் சிங்கங்களையும் அங்கிருந்து இடம் மாற்ற ஜிம்பாப்வே நாட்டின் காட்டுயிர் பாதுகாப்பு அமைப்பு நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது. உலகக் காட்டுயிர் வரலாற்றிலேயே மிகப்பெரிய இடம் மாற்றலாக இது இருக்கும்.

கிட்டத்தட்ட அனைத்து ஓடைகளும் நதிகளும் வறண்டுவிட்டன. ஜிம்பாப்வே-ஜாம்பியா எல்லையிலுள்ள கரீபா நீர்த்தேக்கம் மூன்று மீட்டருக்கும் கீழே குறைந்துவிட்டது.
வறட்சியால் இறந்த யானைகள்
வறட்சியால் இறந்த யானைகள்
africanews

நவம்பர் 28-ம் தேதி ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ஜிம்பாப்வேயைச் சேர்ந்த பெருவாரியான மக்கள் உணவுப் பாதுகாப்பின்றித் தவிப்பதாகக் குறிப்பிட்டது. அதற்குக் காரணமாக இந்த ஆண்டு போதிய உணவு உற்பத்தி இல்லாததே காரணமென்றும் கூறியது. நியூயார்க் டைம்ஸ், அக்டோபர் 1-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ஆப்பிரிக்கக் கண்டத்தின் தெற்குப் பகுதியில் 2018-ம் ஆண்டிலிருந்து நீண்டுகொண்டிருக்கும் இந்த வறட்சியில் 10.8 மில்லியன் மக்கள் உணவுப் பற்றாக்குறையில் தவிப்பதாகக் கூறுகிறது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாற்றத்துக்கான சர்வதேசக் குழுவினுடைய அறிக்கை, ஆப்பிரிக்காவின் தெற்குப் பகுதி காலநிலை மாற்றத்தால் எளிதில் பாதிக்கப்படுவதாகக் கூறுகிறது.

நமீபியா, போட்ஸ்வானா, வடக்கு ஜிம்பாப்பே மற்றும் தெற்கு ஜாம்பியா பகுதிகளில் முந்தைய நூற்றாண்டில் கிடைத்த மழை அளவு இப்போது கிடைப்பதில்லை. அதனால், விக்டோரியா நீர்வீழ்ச்சி வறண்டு, ஜிம்பாப்வே நாட்டின் மக்களையும் காட்டுயிர்களையும் பெரியளவில் பாதித்துக்கொண்டிருக்கிறது. கடந்தமாதம் அக்டோபர் 1-ம் தேதி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ``கிட்டத்தட்ட அனைத்து ஓடைகளும் நதிகளும் வறண்டுவிட்டன. ஜிம்பாப்வே-ஜாம்பியா எல்லையிலுள்ள கரீபா நீர்த்தேக்கம் மூன்று மீட்டருக்கும் கீழே குறைந்துவிட்டது. மொத்த நாடுமே மிகக் கொடிய தண்ணீர்ப் பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கின்றது" என்று குறிப்பிட்டது.

Zimbabwe
Zimbabwe
Pixabay
காலநிலை மாற்றத்தின் விளைவு... அழிந்துவரும் பூமி! #VikatanInfographics

இந்த வறட்சிக்குக் காலநிலை மாற்றம்தான் காரணமென்று காலநிலை விஞ்ஞானிகள் ஒருபுறம் சொல்லிக்கொண்டிருக்க, இன்னொருபுறம் சில விஞ்ஞானிகள் வறட்சி எத்தனையோ ஆண்டுகளாகவே வந்துகொண்டிருக்கிறது. அதில் சில நேரங்களில், மோசமான நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. அப்படியிருக்க, அதற்கு முழுக்க முழுக்கக் காலநிலை மாற்றத்தையே குற்றஞ்சாட்ட முடியாது என்று கூறுகிறார்கள்.

மோயோ, விக்டோரியா நீர்வீழ்ச்சி முற்றிலும் வறண்டுவிட்டதாகச் சொல்லவில்லை. அது வேகமாக வறண்டுகொண்டிருப்பதற்கான அறிவியல்பூர்வ ஆதாரங்களை அவர் முன்வைத்தார். அந்த ஆதாரங்களின் அடிப்படையில், ``இதே வேகத்தில் சென்றால், அந்த நீர்வீழ்ச்சி விரைவில் முற்றிலுமாக வறண்டு விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எத்தனையோ நதிகளுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. பூமியின் மற்ற பகுதிகளில் 2100-ல் ஏற்படவிருக்கின்ற வெப்பநிலை உயர்வை, ஆப்பிரிக்கக் கண்டம் அதற்கு முன்பே எட்டிவிடும் என்று எச்சரிக்கிறார்கள் காலநிலை ஆய்வாளர்கள். அப்படியிருக்க, விக்டோரியாவுக்கும் அந்த நிலை ஏற்படாது என்று நம்மால் உறுதியாகச் சொல்லமுடியாது" என்று அவர் கூறுகிறார்.

விக்டோரியா நீர்வீழ்ச்சி
விக்டோரியா நீர்வீழ்ச்சி
TravellingDane
விக்டோரியா நீர்வீழ்ச்சி, நாளையே வற்றிவிடப்போவதில்லை. சில ஆண்டுகள் ஆகலாம். ஆனால், காலநிலை மாற்றம் அதற்கான தூண்டுதலைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு