Published:Updated:

மரங்களில் தொங்கவிடப்படும் தண்ணீர் பாட்டில்கள்.. பூர்த்தியாகும் பறவைகளின் உணவு, தண்ணீர்த் தேவை!

தானியம், தண்ணீர் நிரப்பப்பட்ட பாட்டில்களுடன் இளைஞர்கள்
தானியம், தண்ணீர் நிரப்பப்பட்ட பாட்டில்களுடன் இளைஞர்கள்

தற்போதைய கோடைக்காலத்தில் பறவைகளின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் மட்டுமல்லாமல் இரைக்காக தானியங்களையும் தண்ணீர் பாட்டில்களில் நிரப்பி மரங்களில் தொங்கவிட்டு, ஊரடங்கு நாள்களைப் பயனுள்ள வகையில் கழித்து வருகின்றனர் திருச்செந்தூரைச் சேர்ந்த இளைஞர்கள்.

கொரோனா ஊரடங்கால் அனைவருமே வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறோம். கோடைக்காலம் துவங்கியிருப்பதால், பெரும்பாலான குளங்கள், கிணறுகள் தண்ணீரின்றி வற்றிக் காணப்படுகிறது. அதனால், உணவு, தண்ணீரைத் தேடி பறவைகளும் தண்ணீருக்காக பல மைல் தூரம் இடம்பெயர்ந்துச் செல்கிறது.

தொங்கவிடப்பட்டுள்ள தண்ணீர் பாட்டில்
தொங்கவிடப்பட்டுள்ள தண்ணீர் பாட்டில்

இதனால், பறவைகளின் தாகம், உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள காந்திபுரத்தைச் சேர்ந்த 15 இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பறவைகள் கூடும் பெரிய மரங்கள் மற்றும் பறவைகள் கூடு கட்டும் மரங்களின் கிளைகளில், பசியைப் போக்கவும், தாகத்தை தீர்க்கும் வகையிலும் காலி பாட்டில்களில் தண்ணீர் மற்றும் தானியங்களை நிரப்பி கட்டி வருகின்றனர். இதனால், தானியம், தண்ணீரைத் தேடி மரங்களில் அதிக எண்ணிக்கையில் பறவைகள் கூடுகின்றன என மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.

இதுகுறித்து காந்திபுரத்தைச் சேர்ந்த இளைஞர்களிடம் பேசினோம், ``கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு ஆரம்பிச்ச முதல் நாலு நாள்கள் டி.வி பார்த்தல், சீட்டு விளையாடுதல், அரட்டை அடிக்கிறதுன்னு நேரத்தைப் போக்கினோம். இந்த ஊரடங்கு நாள்களைப் பயனுள்ளதா கழிக்கணும்னு முடிவெடுத்தோம்.

பாட்டில்கள் தயார் செய்யும் பணி
பாட்டில்கள் தயார் செய்யும் பணி

வயதான முதியவர்களுக்கு ரேஷன் பொருள்கள் வாங்கிக் கொடுப்பது, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசுத் தேர்வுக்காக டியூஷன் செல்லிக் கொடுப்பது, ஊர்ப்பொது இடங்களில் வளர்ந்துநின்ற சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது, மரக்கன்றுகள் நடுவது, தண்ணீரில் வேப்பிலை மற்றும் மஞ்சள்தூளைக் கலந்து தெருக்களில் தெளிப்பதுபோன்ற செயல்களைச் செய்து வந்தோம். எங்க ஊர் வாய்க்கால், குளத்துல தண்ணி இருக்கிற நாள்கள்ல பறவைகள், மரங்கள்ல கிடந்து கூச்சல் போட்டுக்கிட்டு இருக்கும்.

பார்க்கவே அவ்ளோ அழகா இருக்கும். சிட்டுக்குருவி, அக்காகுருவி, கரிச்சான்குருவி, காக்கா, கொக்கு போன்ற பலவகை குருவிகளின் சத்தங்களும் கேட்பதற்கு இதமா இருக்கும். ஆனா, இப்போம் கொஞ்ச நாளா பறவைகள் ஜாலியா இருப்பதைப் பார்க்கமுடியல. ஏனென்றால், எங்க ஊரு குளம், வாய்க்கால்ல தண்ணியெல்லாம் வத்திப்போச்சு. பறவைகள் தண்ணியத்தேடி மட்டுமல்ல.. இரை தேடியும்தான் இடம்பெயர்ந்து போச்சுன்னு ஊர்ல உள்ள ஒரு தாத்தா சொன்னார். குளத்துப் பக்கத்துல உள்ள பெரிய அரசமரம், வாய்க்கால் பக்கத்துல உள்ள மரங்கள்ளதான் நிறைய பறவைகளைப் பார்க்க முடியும்.

தானியம், தண்ணீர் நிரப்பும் பணி
தானியம், தண்ணீர் நிரப்பும் பணி

அங்கதான் பறவைகள் கூடு கட்டியிருக்கும். முதல்கட்டமா, பெரிய மரங்கள் மற்றும் பறவைகள் கூடு கட்டி இருக்கும் 25 மரங்களை தேர்வு செஞ்சோம். ஒவ்வொருத்தரும் அவரவர் வீட்ல கிடந்த ஒருலிட்டர், 2 லிட்டர் காலியான தண்ணீர் பாட்டில்களை எடுத்துட்டு வந்தோம். மொத்தம் 50 தண்ணீர் பாட்டில்கள் சேர்ந்துச்சு. பிறகு, அந்தப் பாட்டிலில் உள்ள `லேபிள்'களையெல்லாம் அகற்றிவிட்டு, தண்ணீர் விட்டு நல்லாக் கழுவி சுத்தப்படுத்தி ஒருநாள் முழுக்க வெயில்ல காய வச்சோம்.

ஆளுக்கு கொஞ்சம் கைக்காசு போட்டு 5 கிலோ அரிசி, 5 கிலோ கம்பு, ஒரு ரோல் இரும்பு கட்டுக்கம்பியைக் கடையில வாங்கினோம். அஞ்சு பேரு வாட்டர் பாட்டில்களில் செவ்வக வடிவமா வெட்டி துளை போட்டாங்க, இன்னொரு டீம் பாட்டில்களின் இருபுறமும் கட்டுக்கம்பிய வச்சி கெட்டுனாங்க. தேர்வு செய்த மரங்களில் ஒருவர் ஏற, கீழே இருந்து மற்றொருவர் பாட்டில்கள், தானியங்கள், தண்ணிய எடுத்துக் கொடுக்க கிளைகளில் கட்டி தொங்கவிட்டோம். பசங்களை மூணு குழுக்களாகப் பிரிச்சுருக்கோம்.

பாட்டில்கள் தொங்கவிடும் பணி
பாட்டில்கள் தொங்கவிடும் பணி

தினமும் ஒவ்வொரு குழுவும் அந்தக்குழுவுக்கு ஒதுக்கப்பட்ட மரங்களில் கட்டப்பட்ட பாட்டில்களில் தண்ணீர், தானியத்தின் அளவைக் கண்காணித்து நிரப்பிக்கொண்டே இருப்போம். முதலில் ரெண்டு நாள் வரை பறவைகளைக் காணோம். அடுத்தடுத்த நாள்களில் பறவைகளின் வரத்து எண்ணிக்கை கூடிக்கிட்டிருக்கு. பழைய மாதிரி பறவைகளின் சத்தங்களைக் கேட்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்போ அணில்களும் படை எடுக்கத் தொடங்கிவிட்டன. அடுத்தகட்டமாக பறவைகளை வரவைப்பதற்காக கூடுதலா 25 மரங்களில் இதே மாதிரி தொங்கவிடலான்னு முடிவு செஞ்சுருக்கோம்” என்றனர் மகிழ்ச்சி பொங்க.

அடுத்த கட்டுரைக்கு