Published:Updated:

மலையில் விழுந்த நீர் இடி, பிரளயமான அருவிகள்... சிதைந்த பச்சமலை கிராமங்கள்..!

பசுமை கொஞ்சும் பச்சை மலையில் ஏற்பட்டுள்ள, புவியியல் மாற்றங்கள் பதற வைக்கின்றன.

பச்சமலை
பச்சமலை

கடந்த வாரம், பெரம்பலூர் மாவட்டத்தில் கன மழைக் கொட்டித்தீர்த்தது. அப்போது, பச்ச மலைப் பகுதியில் அடுத்தடுத்து நீர் இடி விழுந்தது. மலைகள் பிளந்து பாறைகள் உருண்டன. இதனால், புதிய நீர்வீழ்ச்சி உருவாக, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியிலுள்ள மலை அடிவார கிராமங்களான விஸ்வகுடி, தொண்டமாந்துறை, அய்யனார் பாளையம், வேம்படி, வே.பாலக்காடு, பூலாம்பாடி, அரசரடிக்காடு, தழுதாழை, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

விசுவக்குடி அணை, கோரையாறு உள்ளிட்ட பகுதிகள் நிரம்பி வழிகின்றன. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட மக்கள் முடங்கிக் கிடக்கிறார்கள்.

கடந்த வாரம், கடந்த 2-ம் தேதி நள்ளிரவு, கொட்டித் தீர்க்கும் மழை நடுவே பயங்கர சத்தத்துடன் பச்ச மலைப் பகுதிகளில் விழுந்த நீர் அடியின் அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை.

வையாபுரி
வையாபுரி

அய்யனார் பாளையம் சென்ற நம்மிடம் முதியவர் வையாபுரி, “எனக்கு 70 வயதாகிறது. என் வாழ்நாளில் இவ்வளவு மழையைப் பார்த்ததில்லை” என்றபடி சம்பவத்தை விளக்கினார்.

“கடந்த ஒரு வாரமாக ஊர் மக்கள், வீட்டைவிட்டு வெளியே வரல அந்த அளவுக்கு மழை. 2-ம் தேதி நள்ளிரவு, 2 மணியளவில், பயங்கர சத்தம் காதைப் பிளந்தது. அடுத்து பூமியே பிளக்கும் அளவுக்கு அதிர்வு ஏற்பட்டது. அதை நாங்கள் உணர்வதற்குள் எங்கள் கிராமமே வெள்ளம் சூழ்ந்தது.

அந்த அளவுக்குத் தண்ணீர், ஐந்து வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பொக்லைன் எந்திரங்கள் மூலம் தண்ணீர் போக வழித்தடம் ஏற்படுத்தவே, நாங்கள் தப்பித்தோம். இல்லையெனில், ஊரே அழிஞ்சிருக்கும்” என்றார் பதற்றமாக.

ராணி பேசுகையில், ``சில வருடங்களுக்கு முன்பு என் கணவர் இறந்துவிட்டார். குடும்ப வறுமையால், மகன் வெளியூரில் வேலை செய்கிறார். பச்சமலை அடிவாரத்தில் எங்களுக்குச் சொந்தமான நிலத்தில் குடிசைப் போட்டு தங்கியிருக்கும் நான், மீதி நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன்.

ராணி
ராணி

என் பேரக்குழந்தைகளை நான்தான் வளர்த்துவருகிறேன். இந்தக் கனமழையில், என்னோடு அவர்களும் சிக்கக் கொண்டார்கள். தவித்துப் போயிட்டோம். அந்தளவுக்குக் கடுமையான மழை. நள்ளிரவு விழுந்த இடிசத்தமும் பாறைகள் உருண்ட அதிர்வுகளையும் நினைத்தாலே உடம்பெல்லாம் நடுங்குகிறது. பெரிய பெரிய பாறைகள் எல்லாம் உருண்டு கிடக்கின்றன. வீடு முழுக்க வெள்ளம். இந்தச் சம்பவத்தால், ராத்திரி முழுக்க உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கிடந்தோம்.

விடியற்காலை வெளியில் வந்து பார்த்தபோது, சுற்று வட்டாரத்திலுள்ள சுமார் 400 ஏக்கருக்கும் மேலான நிலத்தில் வெள்ளம் சூழ்ந்திருந்தது. பயிரெல்லாம் அழிந்துவிட்டது. இதைப் பார்த்து பதறியபடி ஓடி வந்த தம்பி ஒருவரைப் பாம்பு கடித்துவிட்டது. சுற்றுவட்டாரம் முழுக்க, வெள்ளம் சூழ்ந்ததால், அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்கவே ஊர்க்காரர்கள் மிகவும் சிரமப்பட்டுப்போனார்கள்.

பாதிக்கப்பட்ட பகுதியைப் பார்வையிட்ட கலெக்டர், இந்த மலையில் புவியியல் ரீதியாக மாற்றம் ஏற்பட்டிருக்கு, அதுகுறித்து ஆய்வு செய்ய இருப்பதாகக் கூறினார். அந்த ஆய்வுடன், எங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள சேதங்களையும் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட எங்களுக்கு உதவி கிடைக்க வழி செய்யணும்” என்றார்.

வேம்படி பகுதியைச் சேர்ந்த புவனேஷ்வரி, ``பெரம்பலூர் மாவட்டத்தின் கடைக்கோடி ஏரியா. இங்குள்ள மலையில் நான்கு இடி விழுந்ததால், இவ்வளவு பேரழிவு ஏற்பட்டுள்ளதாம். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள சித்தேரி, அரும்பாவூா் பெரிய ஏரி, வடக்கலூா், கீழப்பெரம்பலூா் உள்ளிட்ட ஏராளமான ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. இப்படியான வெள்ளம் 30 வருடங்களுக்கு முன்பு வந்ததாகச் சொல்கிறார்கள். இவ்வளவு பாதிக்கப்பட்டு கிடக்கும் இந்தப் பகுதிகளை அதிகாரிகள் ஒருமுறைகூட வந்து பார்க்கவில்லை.

மலையில் பெரியளவுக்கு மண் சரிவு ஏற்பட்டிருக்கு. அவற்றை ஆய்வு செய்யணும். ஏன் இப்படி நடந்தது என அறிவித்தால் எல்லோருக்கும் நல்லது. காரணம் தெரியாமல், மழை நின்றும் பீதியில் கிடக்கிறோம்” என்றார்.

பச்சமலை
பச்சமலை

வே.பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ரெங்கசாமி, ``பச்சமலை மிக முக்கியமான மலை. இந்த மலைக்கு மேல், நல்லமாத்தி, நாவூர், மங்கலம், செங்காட்டுப்பட்டி உள்ளிட்ட 150 கிராமங்கள் உள்ளன. மேலும், பாதி மலை பெரம்பலூரிலும் மீதம் சேலம் மாவட்டத்திலும் வருகிறது. இதனாலேயே, மாவட்ட நிர்வாகங்களில் போட்டாபோட்டியில் அடிப்படை வசதிகளைக்கூட செய்யவில்லை. மழையில் சாலை உள்ளிட்டவை பாதிக்கப்பட்டதால், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் சிரமப்படுகிறார்கள். விவசாயம் முற்றிலும் போச்சு. அதிகாரிகள் இந்தப் பக்கம் வந்து பார்த்து நல்லவழி காட்டணும்” என்றார்.

நீர் இடி இறங்குவது எப்படி?

இதுகுறித்து வானிலை ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டோம்.

``அவ்வப்போது, மேகங்களில் ஏற்படும் அதீத அடர்த்தி காரணமாக, அளவுக்கதிகமான மழைப்பொழிவு ஏற்படுகிறது. ஏற்கெனவே, நீலகிரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இதுபோல், நீர் இடி விழுந்துள்ளது.

தற்போது, பச்சமலையில் நீர் இடிகள் விழுந்ததால் 1985, 2005 ஆண்டுகளில் பெய்த மழை அளவைவிடக் கூடுதலான மழை பெரம்பலூரில் பெய்துள்ளது. மேலும், பச்சமலை பகுதியிலேயே மலையாளப்பட்டி, கோரையாறு, சின்னமுட்லு பகுதிகளில் இப்படி நடந்துள்ளது. இதுகுறித்து முறையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்“ என்கிறார்கள்.