Published:Updated:

நந்தவனமான மயானம், பசுமையாகும் ஊர்... விருதுநகரில் பசுமை பரப்பும் `விழுதுகள்' குழு!

பா.கவின்

சிறார்கள், இளைஞர்கள், முதியவர்கள் மூன்று தலைமுறையினரும் இணைந்து சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Virudhai Viludhugal Organization
Virudhai Viludhugal Organization

அரசு எப்போது செய்கிறதோ செய்யட்டும். அதற்குள் நாங்களே எங்கள் ஊரை சீர்செய்துவிடுகிறோம் எனப் பல ஊர்களில் இளைஞர்கள் தாமாக முன்வந்து மரம் நடுவது, நீர்நிலைகளைத் தூர்வாருவது, சுத்தம் செய்வது போன்ற சமூக சேவைகளைச் செய்துவருகின்றனர். அப்படி விருதுநகரில் ஓர் அமைப்பு இயங்கிவருகிறது. `விருதை விழுதுகள்' என்ற அமைப்புதான் அது.

விருதுநகர் என்னும் இந்த கந்தக பூமியின் வெம்மையைத் தவிர்க்க விருதை விழுதுகள், தங்களின் நெடிய, கடின உழைப்பை உரமிட்டு மரக்கன்றுகளை நட்டுவருகிறார்கள். பிள்ளை பெற்றால் மட்டும் போதுமா... பேணி வளர்க்கவும் வேண்டுமல்லவா? அதுபோலவே நட்டால் மட்டும் போதுமா... அவை முழு மரமாக மாறி பயன்தரும் வரை பார்த்துக்கொள்வதெல்லாம் யாராம்? இதையும் கவனத்தில் வைத்து மரங்களுக்குப் பாதுகாப்புக் கவசம் அணிவிப்பதிலிருந்து, தினந்தோறும் பராமரிப்பது வரை மரங்களைக் குழந்தைகளைப் போல பார்த்துக்கொள்கின்றனர் இந்த அமைப்பினர்.

ஊருக்கு உள்ளேயும் வெளியேயும் ஏராளமான மரக்கன்றுகள் நட்டு அவற்றை செவ்வனே பராமரித்து வருகின்றனர். இதைப் பலரும்தான் செய்கிறார்களே எனத் தோன்றலாம். ஆனால், இவர்கள் மரம் நடுவதோடு மட்டுமல்லாமல் ஊரைப் பசுமையாக்க பல்வேறு புது முயற்சிகளையும் செய்துவருகின்றனர். உதாரணமாக காய்ந்துபோய்க் கிடந்த பொது மயானத்தில் மரங்கள் நட்டு, அதை நந்தவனமாக மாற்றியிருக்கிறார்கள். இந்த அமைப்பில் இளைஞர்கள் மட்டுமன்றி சிறார்கள், இளைஞர்கள், முதியவர்கள் மூன்று தலைமுறையினரும் இணைந்து சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Virudhai Viludhugal Organization
Virudhai Viludhugal Organization

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஃபேஸ்புக் நண்பர்களால் 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் `விருதை விழுதுகள்' அமைப்பு. அப்போது அனைவரும் ஓரிடத்தில் ஒன்றுகூடி, முதலில் எடுத்த முடிவே வெம்மை நிலமான விருதுநகரில் மரங்கள் பல நட்டு ஊரைப் பசுமையாக்க வேண்டும் என்பதுதான். அதன்படியே இதுவரை 1682 மரக்கன்றுகளை ஊர்முழுக்க நட்டிருக்கிறார்கள். இவையனைத்தும் ஊர் மக்களின் முழு உதவியோடு நடப்பட்டது. இப்போது அவர்களாலேயே பராமரிக்கவும் படுகிறது.

முதலில் மரங்கள் நடுவதற்கான சரியான இடத்தைக் கண்டறிவது, பின் அதற்கான பாதுகாப்பை உறுதிசெய்வது என அனைத்துப் பணிகளுமே ஊர்மக்களின் ஒத்துழைப்புடனே நடப்பதால் பணிகளும் முழுமையடைகின்றன. பாதுகாப்பும் உறுதியாகிறது. இதுபோக குழுவைச் சேர்ந்தவர்களும் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் மரங்களைப் பராமரிக்க வந்துவிடுவார்கள். இப்படி ஊர்கூடி தேர் இழுப்பதால் ஊரை பசுமையாக்கும் முயற்சியில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றனர் இவர்கள்.

`எங்க கிராமம் திரும்பவும் பசுமையாகும்!' திண்டுக்கல் கிராமத்தை மீட்டெடுக்கும் 2 ஆசிரியர்கள்

இதுதவிர ஊரிலுள்ள பயணிகளின் நிழற்குடைகளைப் பராமரித்தல், கஜா புயல், வெள்ளம் போன்ற பல பேரிடர் காலங்களில் பிற ஊர் மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்தல், கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் பயிற்சிப் பட்டறை, சிரிப்பை மறந்து போயிருக்கும் முதியோர் இல்லவாசிகளுக்கு சிரிப்பு சிகிச்சை போன்ற பிற பணிகளையும் செய்துவருகிறார்கள். மாணவர்களுக்குத் தேவையான நூலகம் அமைக்க நூல்களைச் சேகரிக்கும் பணியிலும் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இப்படி அரசாங்கம் செய்யும், அரசாங்கம் செய்யட்டும் என்றெல்லாம் காத்திருக்காமல் பல்வேறு பணிகளை தாமாக முன்வந்து செய்துகொண்டிருக்கின்றனர். மரக்கன்றுகள், வலைகள், போர்டுகள் போன்றவற்றை வாங்குவதற்கு இவ்வூரிலிலுள்ள நல்ல உள்ளங்கள் உதவுகின்றனர்.

Social Work of Virudhai Viludhugal
Social Work of Virudhai Viludhugal

சாதி மத அரசியல் பேதமின்றி பசுமையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு முன்னோக்கிச் செல்லும் விருதை விழுதுகளின் பணி நிச்சயம் பாராட்டத்தக்கது.