`நீங்க ஆணியே அடிக்க வேணாம்!' - மரங்களுக்காகக் குரல்கொடுக்கும் `நேச'மணிகள்

மரங்களில் ஆணி அடிக்கப்படுவதைத் தடுக்க வலியுறுத்திக் கொடுக்கப்பட்ட மனு என்ன ஆனது எனக் கேள்வி எழுப்பும் வாசகங்கள் அடங்கிய சிலேட்டைக் கையில் ஏந்திய தன்னார்வலர்கள், நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள தன்னார்வ அமைப்பினர் ஒன்றிணைந்து சாலை ஓரங்களில் உள்ள மரங்களில் விளம்பரப் பதாகைகள் வைக்க அடிக்கப்பட்டிருந்த ஆணிகளை அகற்றினர். தினமும் 50 மரங்களுக்கு குறையாமல், இளைஞர்கள், தன்னார்வலர்கள் இணைந்து, ஆணிகளை அகற்றியதன் விளைவாக, சாலையோர மரங்களில் ஆணிகளே இல்லாத தமிழகத்தின் முதல் நகராட்சியாக, தேனி நகராட்சி மாறியது.

தேனி மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் சாலையோர மரங்களில் அடிக்கப்பட்டிருந்த ஆணிகளை அகற்றிய தன்னார்வக் குழுவினர், மீண்டும் விளம்பர பதாகைகள் வைக்க மரத்தில் ஆணிகள் அடிக்கக்கூடாது என்றும், அதைத் தடுக்க தேனி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த ஆண்டு நவம்பர் 25-ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவுக்கு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
இந்நிலையில், கடந்த ஜவனரி 26-ம் தேதி நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்துக்குச் சென்ற தன்னார்வலர்கள் குழுவினர், சாலையோர மரங்களில் வணிக ரீதியாக அடிக்கப்படும் ஆணிகளால், மரங்கள் விரைவில் இறந்துவிடும் என்றும் இதனால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் எடுத்துக் கூறினர். அதன் விளைவாக, தேனி மாவட்டத்தில் உள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள், தங்கள் கிராம எல்லைக்குள் இருக்கும் சாலையோர மரங்களில் ஆணிகள் அடிக்கக் கூடாது எனக் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். அந்த தீர்மானங்களின் நகலோடு ஜனவரி 27-ம் தேதி மீண்டும் கலெக்டரிடம் மனு கொடுத்த தன்னார்வலர்கள் குழுவினர், சாலையோர மரங்களில் ஆணி அடிப்பதைத் தடை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

கொடுக்கப்பட்ட இரண்டு மனுக்களுக்கும் பதில் ஏதும் வராத நிலையில், ஆறு மாதங்களுக்குப் பின்னர், தன்னார்வலர்கள் குழுவினர் கொடுத்த மனு, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, உத்தமபாளையம் காவல்நிலையத்துக்கு அனுப்பப்பட்டது. இது தொடர்பாக எங்களால் நடவடிக்கை எடுக்க இயலாது எனக் கூறிய காவல்துறையினர், அந்த மனுவை நெடுஞ்சாலைத்துறைக்கு அனுப்பி வைத்தனர். நெடுஞ்சாலைத்துறையிடம் இருந்தும் இதுவரை எந்தப் பதிலும் இல்லை எனக் கூறும் தன்னார்வலர்கள், தாங்கள் ஆணிகளை அகற்றிய மரங்களில், மீண்டும் விளம்பர பதாகைகள் வைத்து ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், நேற்று காலை, மாவட்ட கலெக்டருக்கு விடுக்கும் கோரிக்கையை சிலேட்டில் எழுதி அதை கலெக்டர் அலுவலகம் கொண்டுவந்தனர்.
நம்மிடையே பேசிய தன்னார்வலரான செந்தில், ``இரண்டு முறை மனு கொடுத்தும் எந்தப் பலனும் இல்லை. இனியும் மனு எழுதி காகிதத்தை வீணாக்க விரும்பவில்லை. ஏனென்றால், மனு எழுத பயன்படும் காகிதம், மரத்தில் இருந்து செய்யப்படுகிறது. அதனால்தான் எங்கள் கோரிக்கைகளை சிலேட்டில் எழுதிக் கொண்டு வந்திருக்கிறோம். சமீபத்தில் எங்கள் பனை விதை நடவு முன்னெடுப்பின், நன்றி நவிலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி முத்துச்சாமி அவர்கள், சாலையோர மரங்களில் ஆணி அடிப்பது குற்றம் எனப் பேசினார். ஆனால், மாவட்ட கலெக்டரோ, இதுவரை எதுவும் பேசவில்லை.

மரமும் நம்மைப் போன்ற ஓர் உயிர்தானே. அதைக் காக்க வேண்டும் என நாங்கள் எடுத்த முயற்சிக்கு மாவட்ட நிர்வாகம் எந்த உதவியும் செய்யவில்லை. எங்களோடு களத்தில் நின்று ஆணிகளைப் பிடுங்குங்கள் என நாங்கள் கேட்கவில்லை. நாங்கள் கேட்பதெல்லாம் ஒரே ஒரு பொது அறிவிப்பு மட்டும்தான். `இனி, தேனி மாவட்ட சாலையோர மரங்களில் ஆணிகள் அடிப்பது தடை செய்யப்படுகிறது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்!’ என கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டால் போதும். நாங்கள் அதை மக்களிடம் கொண்டு சேர்த்துவிடுவோம்.
ஆனால், கிட்டத்தட்ட ஓர் ஆண்டு கடந்த பின்னும் கலெக்டர் அமைதியாக இருக்கிறார். நாங்கள் ஆணிகளைப் பிடுங்கிய மரங்களில் மீண்டும் ஆணிகள் அடிக்க ஆரம்பித்துவிட்டனர். அதனால்தான் காகிதத்தை வீணாக்காமல், சிலேட்டில் எழுதி, கவன ஈர்ப்பு கோரிக்கை வைக்கிறோம். நாங்கள் மட்டுமல்லாமல், தேனியில் உள்ள தன்னார்வலர்கள் இணைந்து, அவரவர் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு மரங்களின் தேவை குறித்து எடுத்துக்கூறி, சிலேட்டில் கோரிக்கை வாசகங்களை எழுதி அதைப் புகைப்படம் எடுத்து, கலெக்டர் மின்னஞ்சலுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இனியாவது கலெக்டர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்” என்றார்.

இது தொடர்பாக கலெக்டரை தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். அவர் முதல்வருடன் காணொலிக்காட்சி மீட்டிங்கில் இருப்பதாகக் கூறினர். கலெக்டர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறும்போது, ``தன்னார்வலர்கள் வைத்த கோரிக்கை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் முன்னரே ஆலோசித்துவிட்டார். விரைவில் நடவடிக்கை எடுப்பார்” என்றார்.