Published:Updated:

அபாய மருந்துகளால் அழியும் பாறு கழுகுகள்..! `தமிழகத்தின் டோடோ' வீழும் கதை

இந்தியப் பாறு கழுகுகள்
இந்தியப் பாறு கழுகுகள் ( Photo: Raveendran Natarajan )

இயற்கை வரலாற்றில் டோடோ பறவைக்கு அடுத்ததாக இவ்வளவு விரைவான அழிவைச் சந்தித்த அவலம் வேறு எந்தப் பறவைக்குமே நிகழ்ந்ததில்லை.

முதுமலையில் சிறியூர் என்ற பகுதி. மூன்றாண்டுகளுக்கு முன் அங்கு சென்றிருந்தபோது, பாறு கழுகு கூடமைத்திருந்தது. அப்போது பாறு கழுகைப் பார்க்க, நேராக அந்த இடத்திற்குச் சென்றால் போதும்.. பார்த்துவிடலாம். ஆனால், இப்போது அப்படியில்லை.

சிறியூர் எல்லையிலிருந்த அந்தக் காட்டுப்பகுதியில், அது கூடு கட்டியிருந்த மரத்திற்கு அருகிலேயே, கிட்டத்தட்ட 25 அடி தூரத்திலேயே ஒரு மிகச்சிறிய மாரியம்மன் கோயில் இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குமுன் அந்தக் கோயிலை விரிவாக்கம் செய்தார்கள். அங்கு அடிக்கடி விழாக்கள் நடத்துவது, மக்கள் கூட்டம் சேர்வது என ஆள் நடமாட்டம் அதிரிக்கத் தொடங்கியது.

ஆகாய மருத்துவர்கள்
ஆகாய மருத்துவர்கள்
Raveendran Natarajan

ஒருமுறை திருவிழாவிற்கு வந்த ஒரு குழு, அங்கு சேர்ந்த குப்பைகளைச் சுத்தம் செய்கிறோம் என நெருப்பு வைக்கவே, அது பாறு கழுகு கூடு கட்டியிருந்த மரத்தையும் சேர்த்தே எரித்தது. இப்போது அந்த இடத்தில் பாறு கழுகு கூடு கட்டுவதே இல்லை. சமீபத்தில் சென்றிருந்தபோது, அந்தப் பகுதியில் அவை மூன்றாண்டுகளாகத் தென்படுவதில்லை என்பதைப் பாறு கழுகுகள் பாதுகாப்பில் ஈடுபட்டுவரும் அருளகம் அமைப்பைச் சேர்ந்த பாரதிதாசன் வேதனையோடு சொன்னார்.

நம் வழக்குமொழியில் பினந்தின்னிக் கழுகுகள் என்று அழைக்கப்படும் பாறு கழுகுகளைக் கடைசியாக எப்போது பார்த்தீர்கள்? முதலில் நாம் அதை நேரில் பார்த்துள்ளோமா என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். காக்கைகளுடைய எண்ணிக்கைக்கு நிகராக, ஆயிரக்கணக்கில் மக்களைச் சுற்றியே வாழ்ந்துகொண்டிருந்தவை இந்தப் பாறு கழுகுகள். இன்று சில நூறுகளில் தமிழகத்தின் மிகச்சில பகுதிகளில் சுமார் முந்நூறு கழுகுகளே வாழ்கின்றன. அதில் அதிகமானவை சத்தியமங்கலம் மற்றும் மாயாறு படுகையில் மட்டுமே வாழ்கின்றன.

இயற்கை வரலாற்றில் டோடோ பறவைக்கு அடுத்ததாக இவ்வளவு விரைவான அழிவைச் சந்தித்த அவலம் வேறு எந்தப் பறவைக்குமே நிகழ்ந்ததில்லை. கடந்த முப்பதே ஆண்டுகளில் 90% பாறுகள் அழிக்கப்பட்டுவிட்டன. மாடுகளுக்குக் கொடுக்கப்படும் டைக்ளோபினார்க் என்ற ஒரு வலி நிவாரணி மருந்து, இப்படியோர் அழிவுக்குக் காரணமாக வந்து நிற்குமென்று யாரும் கற்பனைகூட செய்திருக்க மாட்டார்கள்.

பாறு கழுகுகளைப் பாதுகாக்க, அவற்றுடைய உணவில் அதிக பங்கு வகிக்கும், மாடுகளின் ஆரோக்கியத்தில் நாம் கவனம் செலுத்தவேண்டும்.
பாரதிதாசன், அருளகம் இயக்குநர்

ஊர்ப்புறங்களில், இறக்கும் மாடுகளைக் காடுகளின் ஓரங்களில் அப்படியே போட்டுவிடுவார்கள். பாறு கழுகுகள் அவற்றைச் சாப்பிட்டுச் சுத்தம் செய்துவிடும். எவ்வளவு அழுகிய சடலமாக இருந்தாலும் பாறுகள் சாப்பிட்டுவிடும். தொற்று நோய்களால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் சடலங்களைச் சாப்பிட்டாலும் அவற்றுக்கு எதுவும் ஆகாது. எத்தகைய நோய்க் கிருமியாக இருந்தாலும் அவற்றைச் செரிமானம் செய்யப் போதுமான அமிலங்கள் பாறுகளின் வயிற்றில் உள்ளன. ரேபிஸ் போன்ற நோய்களால் இறக்கும் நாய்களின் சடலங்களைச் சாப்பிடும் பாறுகள் கூடவே ரேபிஸ் நோய்க்கிருமிகளையும் அழித்து நம்மைப் பாதுகாத்து வந்தன.

ஆனால், எப்படிப்பட்ட சடலத்தையும் உண்டு செரித்துவிடும் பாறு கழுகால் `டைக்ளோபினாக்' என்ற மருந்தைச் செறிக்க வைக்க முடியவில்லை.

நாடு முழுவதும் மாடுகளுக்கு அவை கொடுக்கப்பட்டுக் கொண்டேயிருக்க, அந்த மருந்தை உட்கொண்ட மாட்டு மாமிசங்களைத் தின்று, பாறு கழுகுகளும் செத்துக் கொண்டேயிருந்தன. ஆயிரக்கணக்கில் அவை செத்து விழுந்துகொண்டிருந்ததைத் தடுக்க, இந்திய அரசு அந்த மருந்தைத் தடை செய்தது. பல்வேறு தன்னார்வலர்களுடைய விடாமுயற்சியில் டைக்ளோபினாக் பயன்பாடு முற்றிலும் தடுக்கப்பட்டது. ஆனால், இன்று அசிக்ளோபினாக், கீடோப்ரோபேன், ஃப்ளூநிக்சின், நிமுசுலாய்ட்ஸ் போன்ற அதே அளவுக்கு ஆபத்தான மருந்துகள் மாடுகளுக்குக் கொடுக்கப்படுகின்றன. மருந்துகளின் பெயர்கள் மாறலாம், ஆபத்து ஒன்றுதான்.

பாறு கழுகுகளால் முற்றிலுமாகச் சாப்பிடப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட யானையின் சடலம்
பாறு கழுகுகளால் முற்றிலுமாகச் சாப்பிடப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட யானையின் சடலம்

``இந்த மருந்துகள் பெரும்பாலும் மாடுகளின் மடி வீக்கத்திற்குத்தான் கொடுக்கப்படுகின்றன. அது ஏற்படாமல் தடுக்க மிக எளிய வழிமுறைகளைத் தொடர்ச்சியாகப் பின்பற்றினாலே போதும். முக்கியமாக மாடுகளைக் கட்டிவைக்கும் கட்டுத்துறையைச் சுத்தமாக வைக்கவேண்டும். பால் கறந்தவுடனே, அதன் மடி மண்ணைத் தொட்டுவிடக்கூடாது. அப்படி நடக்கும் சமயத்தில்தான், கிருமித் தாக்குதல் அதிகமாக ஏற்பட்டு மடி வீக்கமடைகிறது. அதனால், பால் கறந்தவுடன் அவற்றுக்குக் கொஞ்சம் புற்களைப் போட்டு மேயவிடவேண்டும். மேய்ந்து முடிக்கும் நேரத்தில் பால் காம்புகள் வறண்டுவிடும், கிருமிகள் ஒட்டாது. ஒருவேளை வந்தாலும், கால்நடை வளர்ப்பவர்களே நல்லெண்ணை, வெள்ளைப் பூண்டு போன்றவற்றை வைத்துச் செய்யப்படும் நம் பாரம்பர்ய வைத்தியத்தில் சரி செய்துவிடலாம். பாறு கழுகுகளைப் பாதுகாக்க, அவற்றுடைய உணவில் அதிகப் பங்கு வகிக்கும் மாடுகளின் ஆரோக்கியத்தில் நாம் கவனம் செலுத்தவேண்டும்" என்கிறார்" கடந்த பத்து ஆண்டுகளாகப் பாறுகளின் பாதுகாப்பிற்காகச் செயல்பட்டுவரும் அருளகம் அமைப்பின் இயக்குநர் பாரதிதாசன்.

அவர்களுடைய முயற்சியால், கீடோப்ரோபேன், ஃப்ளூநிக்சின் போன்ற மருந்துகளின் பயன்பாடு இப்போது குறைந்துவருகின்றது. இருப்பினும், பாறு கழுகுகளுக்கு எமனாகச் செயல்படக்கூடிய மருந்துகளைக் கண்டுபிடித்து அவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை இன்னும் இருக்கின்றது. பாறுகளின் அழிவில் இந்த மருந்துகள் வகிக்கும் பங்குக்குச் சமமாக, இப்போது அவற்றுடைய வாழ்விடங்களும் பேராபத்தைச் சந்தித்து வருகின்றன. பாறுகள் ஒரே வீச்சில் நூறு கிலோமீட்டர் வரை பயணிக்கக்கூடியவை. அவற்றைப் பாதுகாக்க, அவை கூடு கட்டும் இடம் மட்டுமன்றி, அவை வலசை செல்கின்ற மொத்தப் பகுதியையுமே பாதுகாக்க வேண்டும்.

கூடு அமைத்திருக்கும் வெண்முதுகுப் பாறு
கூடு அமைத்திருக்கும் வெண்முதுகுப் பாறு
Raveendran Natarajan

சிறியூர் ஓர் உதாரணம் மட்டுமே. தமிழகத்தில் இப்போது வெண்முதுகுப் பாறு, கருங்கழுத்துப் பாறு, மஞ்சள்முகப் பாறு, செந்தலைப் பாறு என்ற நான்கு வகைகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் சேர்த்தே தற்போது சுமார் முந்நூறுதான் உள்ளன. காஞ்சிபுரம், கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம் போன்ற பகுதிகளில் சில மஞ்சள்முகப் பாறுகள் அவ்வப்போது தென்பட்டு வருகின்றன. அதுகுறித்த பதிவுகளை ஆரோக்கியமானதாகக் கருதினாலும் அவற்றின் பாதுகாப்பு எந்தளவுக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். பாறுகளின் வாழ்விடங்களும் வாழ்வாதாரங்களும் முழுமையாக ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுப் பாதுகாக்கப்பட வேண்டும். அழிவின் விளிம்பிலிருக்கும் இந்தப் பறவையின் பாதுகாப்பிற்கு, அவற்றுடைய வாழ்விடங்களைப் பாதுகாப்பது மிகவும் அவசியம்.

அவற்றைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அவை பற்றிய புரிதலை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவேண்டியதும் அவசியம். பெரும்பாலும் பாறுகளின் பிணம் தின்னும் உணவுப் பழக்கத்தை மையமாக வைத்து, தீய சக்தியாகவோ அபசகுணத்தின் அடையாளமாகவோதான் அவை சித்திரிக்கப்படுகின்றன.

இறந்த சடலங்களைச் சாப்பிடுவதன் மூலம் அதிலிருந்து தொற்று நோய்கள் பரவாமல் பாறுகள் தடுப்பதால், ஆய்வாளர்கள் அவற்றை `ஆகாய மருத்துவர்கள்' என்று குறிப்பிடுகிறார்கள். சுற்றுச்சூழலின் சுழற்சியில் அவற்றின் பங்கு எவ்வளவு அவசியம் என்பதைப் புரிந்துகொள்வதே, பாறுகளைப் பாதுகாப்பதற்கான முதல் படியாக இருக்கும்.

பாறு போன்ற பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களின் வாழ்விடம் குறித்த புரிதலை வனத்துறை மக்களிடம் ஏற்படுத்தவேண்டும்.

மாயாறு படுகையில் கடைசியாக நடந்த கணக்கெடுப்பில் சுமார் 38 கூடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரிக்க வேண்டுமானால், அவற்றின் கூடுகள் அமைந்துள்ள பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும். அங்கு எந்தவிதமான ஊடுருவல்களும் நிகழாதவாறு பராமரிக்கவேண்டும். அதிகத் தொந்தரவுகள் இருந்துகொண்டேயிருந்தால், அவை மன அழுத்தத்திற்கு ஆளாகி முட்டையிடுவது குறையும். அவை ஒருமுறைக்கு ஒரேயொரு முட்டைதான் இடும். அதனால், ஒருமுறை முட்டையிடாமல் தள்ளிப்போகும்போது அடுத்த ஓராண்டுக்கு அவற்றுடைய இனப்பெருக்கம் பாதிக்கிறது. இந்தக் காரணங்கள், பாறுகளின் எண்ணிக்கை உயர்விலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவற்றுடைய இனப்பெருக்க விகிதம் குறைவு என்பதால், மிக மெதுவாகத்தான் எண்ணிக்கையில் அதிகரிக்கும். அதிலும் வாழ்விடக் குறைபாடு, ஊடுருவல்கள், தொந்தரவுகள் ஏற்பட்டால், அந்த வேகம் மட்டுப்பட்டு மேலும் பிரச்னைகளைத்தான் கொண்டுவரும்.

மூன்றாண்டுகளுக்குமுன், சிறியூரில் கூடு கட்டியிருந்த பாறு கழுகும் அத்தகைய அழுத்தத்திற்கு உள்ளாகித் தன் கூட்டைக் கைவிட்டு இடம் மாறிவிட்டது. அது கைவிட்டுச் சென்ற ஆண்டில் அது முட்டையிடாததால், இனப்பெருக்க விகிதத்தில் அதை ஒரு பின்னடைவாகத்தான் கருதவேண்டும்.

வெண்முதுகுப் பாறு
வெண்முதுகுப் பாறு
BYJU
Vikatan

பாறு போன்ற பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களின் வாழ்விடம் குறித்த புரிதலை வனத்துறை மக்களிடம் ஏற்படுத்தவேண்டும். அந்தப் பகுதிகளில் தொடர் கண்காணிப்பு செய்வதன் மூலம் அதீத ஊடுருவல்களைத் தடுத்துப் பாதுகாக்க வேண்டும். நம்முடைய கேளிக்கைகள், கொண்டாட்டங்கள் அனைத்துமே மற்ற உயிரினங்களைப் பாதிக்காமல் இருக்கவேண்டும் என்பதே கொண்டாட்டங்களின்போது முதல் கொள்கையாக இருக்கவேண்டும்.

காடுகளுக்குள் செல்லவேண்டும் என்ற ஆசை பலருக்கும் ஏற்படும். அதில் தவறில்லை. அப்படிச் செல்லும்போது, அந்தக் காட்டினுடைய இலக்கணத்தைப் பின்பற்ற வேண்டும். அதுதான், பாறுகளுக்கு மட்டுமன்றி அனைத்து உயிரினங்களுக்குமே நல்லது.

அடுத்த கட்டுரைக்கு