கொரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு ஆலோசித்து மேற்கொண்ட வலுவான முடிவு ஊரடங்கு உத்தரவு. இந்த உத்தரவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தாலும் இந்தக் காலகட்டத்தில், இந்த நடவடிக்கை அவசியமான ஒன்றாகவே கருதப்படுகிறது.
இதன் தாக்கம் மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள்மீது மட்டுமன்றிச் சுற்றுச்சூழலிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அதை மெய்ப்படுத்தும்விதமாக ‘கங்கை நதி தூய்மையடைந்துவிட்டது’ என்று கூறப்படுகிறது.
மார்ச் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பெய்த மழையின் காரணமாக, கங்கை நதியின் நீர்மட்டமும் சற்று உயர்ந்திருக்கிறது. இதைக் கருத்தில் கொள்ளும்போது நதி தூய்மையானதன் அளவும் உயர்ந்திருக்கிறது.
இந்தியத் தொழில்நுட்பக் கழகப் பேராசிரியரான முனைவர் பி.கே. மிஷ்ரா ‘‘இந்தியாவின் தேசிய நதியான கங்கை, வருத்தமளிக்கும்விதமாகக் கடந்த சில ஆண்டுகளாகத் தொழிற்சாலைக் கழிவுகளால், மிக மோசமாக மாசடைந்துவருகிறது. ஆனால், கடந்த 10 நாள்களில் அந்த நிலை திடீரென்று மாறி, நதி பொலிவு பெறத் தொடங்கியிருக்கிறது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇந்த முன்னேற்றம், கொரோனா பரவலைத் தடுக்க அரசு அமல்படுத்திய ஊரடங்கு உத்தரவின் அடிப்படையில், தொழிற்சாலைகள் மூடப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட விரும்பத்தக்க விளைவு” என்று கூறியிருக்கிறார். கங்கை நதியின் பத்தில் ஒரு பங்கு மாசு தொழிற்சாலைக் கழிவுகளால்தான் ஏற்படுகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதன் விளைவாக நதியின் நிலைமை மாறி, சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது மிக முக்கியமான முன்னேற்றம். கிட்டத்தட்ட 40% முதல் 50% வரை முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இதை மெய்ப்படுத்தும் வகையில் வாரணாசியில் வசிக்கும் மக்களும் இந்த முன்னேற்றத்தை ஒப்புக்கொள்கின்றனர். இந்தியாவில் மட்டுமன்றி உலகின் பல நாடுகளில் அமல்படுத்தப்பட்ட இந்த ஊரடங்கு உத்தரவால் சுற்றுச்சூழல் மாசுபாடு கணிசமாகக் குறைந்திருக்கிறது. இந்தியாவின் பெருநகரங்களில் தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்தால் ஏற்படும் மாசுபாடு தற்போது இல்லை. காற்றின் தரம் உயர்ந்து வருவதால், இமாச்சல் பிரதேசத்திலுள்ள இமயமலைத் தொடரின் ஒரு பகுதியான தௌலாதர் சிகரம், பஞ்சாபின் ஜலந்தர் பகுதியிலிருந்து பார்க்கும்போது தெளிவாகத் தெரிகிறது.