Published:Updated:

மரங்கள் வளர்த்த குழந்தைகள்தானே நாம்? - ஒரு மகிழ்ச்சியான ஃப்ளாஷ்பேக்

மரத்தொட்டில்
மரத்தொட்டில்

இப்பூமியில் ஜனித்த ஒவ்வொரு குழந்தையையும் முதலில் அரவணைப்பது மரம்தான். ஒரு தாய் குழந்தையைத் தாங்கியதைக் காட்டிலும் அதிகம் நம்மைத் தாங்கியது மரத்தொட்டில்தான்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மறக்க முடியாத பருவம் குழந்தைப் பருவம். 'மீண்டும் கிடைக்காதா' என்ற ஏக்கம் நாம் அனைவருக்கும் இருக்கும். அந்தப் பருவத்தில் நமக்குத் தெரியாமல் நமக்கு உதவிய மரங்களின் பயன்களைக் காண்போம். உணவில்லாமல் ஒரு மாதம் வாழலாம், தண்ணீர் இல்லாமல் ஏழு நாள்கள் வாழலாம், ஆனால், காற்று இல்லாமல் ஒரு நிமிடம்கூட வாழ முடியாது என நாம் அனைவரும் அறிந்திருப்போம்.

நடைவண்டி
நடைவண்டி

கருவறை முதல் கல்லறை வரை தொடர்கின்ற இந்த வாழ்க்கைப் பயணத்தில், நாம் வாழ பிராண வாயுவைத் தந்து உதவுவது மரமாகும். இப்பூமியில் ஜனித்த ஒவ்வொரு குழந்தையையும் முதலில் அரவணைப்பது மரம்தான். ஒரு தாய் குழந்தையைத் தாங்கியதைக் காட்டிலும் அதிகம் நம்மைத் தாங்கியது மரத்தொட்டில்தான். ஏன் பிறந்த குழந்தையை மரத்தொட்டிலில் இடுகிறார்கள் தெரியுமா? குழந்தையின் உடல் மிகவும் மென்மையாக இருக்கும். எறும்பு, பூரான் போன்ற பூச்சிகளின் தீண்டுதல் அதிகம் இருக்கும். இடர் ஏதும் வந்தால் குழந்தைகளால் அதைச் சொல்ல முடியாது. மரத்தொட்டில் அவர்களைக் காக்கும். சேலையில் கட்டும் மரத்தூளிகளில்கூட மரக் கம்பை இடையில் வைத்து காற்றிற்காக அகலப்படுத்துவர். இன்றளவும் பல வீடுகளில் மர ஊஞ்சல் காணப்படுகிறது. தேக்கு, இலுப்பை, நாகலிங்கம், புங்கன், பூவரசு, வேம்பு முதலான மரங்களில் மரத்தொட்டில் அமைக்கப்படுகிறது.

“பச்சை இலுப்பை வெட்டி, வாக்கால் தொட்டி கட்டி, பவளக்கால் தொட்டிலிலே, பாலகனே நீ உறங்கு” இந்தத் தாலாட்டுப் பாட்டை அனைவரும் அறிந்திருப்போம். குழந்தை பிறந்தவுடன் வலிமையான இலுப்பை மரத்தால் செய்த தொட்டிலில் படுக்க வைப்பது மரபாகும். தாயின் ஒற்றை விரல் ஓவியம், குழந்தைக்கு மை வைப்பது. காத்து கருப்பு எதுவும் அண்டாமல் இருக்கவும், திருஷ்டி வராமல் இருக்கவும் மை வைப்பார்கள். அது வேங்கை மரத்தண்டில் வடியும் பிசின் ஆகும். இது மோசமான கதிர் வீச்சுகள், இடி, மின்னலில் இருந்து பாதுகாக்கும் சக்தி வாய்ந்தது. குழந்தை பிறந்து, பின்னர் தவழ்ந்து, நிற்கத் தொடங்கிய பின்பு நடை பயில்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட நடைவண்டியை நாம் ஒருபோதும் மறந்துவிட முடியாது. நடைவண்டி நகர நகர குழந்தையின் காலும் நகர ஆரம்பிக்கும். அழகாய் நடக்கப் பழகும் இதை `முக்கால் சிறுதேர்' என்று அழைப்பர். இந்த வண்டி, எந்த ஊருக்குப் போகும்?'' என்ற கேலி பேச்சுகளை நினைக்கும்போது மனதில் சிறு புன்னகை எழுகிறதில்லையா? இது பெரும்பாலும் யூகலிப்டஸ், வெப்பாலை, வேம்பு முதலான மரங்களிருந்து தயாரிக்கப்படுகிறது.

பொம்மைகள்
பொம்மைகள்

பள்ளியில் அறிவைக் கற்கும் முன்னே குடும்ப வாழ்வை அறிய உதவின மரச் சாமான் விளையாட்டுப் பொருள்கள். பெண் பிள்ளைகள் சிறுவயதில் சோறு, குழம்பு, பொரியல் என அனைத்தும் மரச் சாமான் பொருள்களில் சமைத்து விளையாடுவார்கள். அறிவை அறிமுகம் செய்யும் கோயில்... பள்ளிக்கூடம். அகரத்தை முதலில் கற்றுக் கொடுத்த சிலேட்டு மரத்தின் உபயம். “உன்னைத் தேய்த்து; என்னை வளர்த்தேன்” என்ற வரிகளுக்குச் சொந்தக்காரர்கள் காகிதம், பென்சில் மற்றும் ரப்பர். இவை அனைத்தும் மரத்தின் உபயமாகும். காகிதம் பொதுவாக மூங்கில், பிர், பைன், ஸ்பிருஸ், ஹேம்லாக், பாப்புலர், யூகலிப்டஸ் போன்ற மரங்களிலிருந்தும், பென்சில் பொதுவாக சிடார், ஜூனிப்பர் மரங்களிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது. நான் செய்த தவற்றை மறைப்பதில் நம்மைக் காட்டிலும் நம் ரப்பருக்கு அதிக பங்கு உண்டு. இது ரப்பர் (ஹிவியா ப்ரஜிலென்ஸிஸ்) மரத்திலிருந்து உருவாகிறது.

 “உடலினை உறுதி செய்”, “ஓடி விளையாடு பாப்பா”, “மாலை முழுதும் விளையாட்டு”, என்று பாரதியார் பாடி உள்ளார். உடலும் மனமும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையதால் மனமகிழ்ச்சியினால் உடல் புத்துணர்ச்சி அடைகிறது. இன்றும் விளையாட்டுகள் பற்றிய நினைவுகளைப் பேசும்போது பலரின் முகத்தில் மலரும் புன்னகை அவர்களைக் குழந்தைப் பருவத்துக்கே இட்டுச் சென்று, நினைவுகளைக் கிளறிவிடும். நினைவாற்றலை அதிகரித்தல், கை, கால் அசைவுகளை மேம்படுத்துதல், உன்னிப்பாகக் கவனிக்கும் ஆற்றலை மேம்படுத்துதல் எனப் பல பயன்கள் பழங்கால விளையாட்டுகளின்வழி கிடைக்கின்றன. கிராமங்களில் பொதுவாக விளையாடும் விளையாட்டுகளில் பல்லாங்குழி, பம்பரம், மரப்பாச்சி பொம்மை எல்லாம் மரத்தோடு இணைந்தவை ஆகும். இவை குறிப்பாக ஊசியிலை, முள்ளிலவு, தேக்கு, செம்மரம், செஞ்சந்தனம், சப்பான், யூகலிப்டஸ், வெப்பாலை, வேம்பு போன்றவற்றால் தயாரிக்கப்படுகின்றன. புளியமர நிழல், வேப்ப மர சாமி, அரச மர ஊஞ்சல், பூவரச பூ, புங்க மரயிலை சாப்பாடு, இவையெல்லாம் குழந்தைப் பருவ சொர்க்க நினைவுகளாகும். இப்படி குழந்தைகளை மனிதர்கள் மட்டுமல்லாமல் பல மரங்களும் வளர்த்திருக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு