Published:Updated:

`பிரச்னையாகப் பார்க்கவில்லை; வாய்ப்பாகவே பார்க்கிறோம்'- காலநிலை மாற்றம் குறித்து ஆப்பிள் சி.இ.ஓ!

நியூயார்க்கில் நடைபெற்ற செரஸ் நிறுவனத்தின் 30-வது ஆண்டு தொடக்க விழாவில் ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் கலந்துகொண்டார்.

ஆப்பிள் டிம் குக்
ஆப்பிள் டிம் குக் ( AP )

ஆப்பிள் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் நிலைத் தன்மைக்கான முயற்சிகளைப் பாராட்டும் விதமாக அவருக்கு விருது வழங்கப்பட்டது. அந்த விருதைப் பெற்றுக்கொண்டு உரையாற்றிய டிம் குக், ``காலநிலை மாற்றம் மற்றும் அதை சமநிலைத் தன்மைக்குக் கொண்டுவர எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பை, புதுமைகளை நோக்கிப் பயணிக்கும் வெற்றிகரமான நிறுவனங்கள் முன்னெடுக்க வேண்டும். அதன் தாக்கங்களுக்கு ஏற்ப அவர்களது திட்டங்களை அமைக்கத் தவறினால் நிர்வகிக்கும் தலைவர்கள் தங்களுடைய பொறுப்புகளிலிருந்து தவற நேரிடும்" என்று கூறியுள்ளார்.

டிம் குக்
டிம் குக்

மேலும், தங்களது நிறுவனத்தின் சுற்றுச்சூழல் கொள்கைகள் மற்றும் அதன் முன்னெடுப்புகளுக்கான துணைத் தலைவர் லிசா ஜாக்சனை பாராட்டிப் பேசிய அவர், ``எங்கள் நிறுவனம் இப்போது முன்னெடுத்து வரும் நடவடிக்கைககளுக்கு லிசா ஒரு பெரும் காரணியாக இருந்துவருகிறார்" என்று கூறினார். இதற்கு முன் லிசா ஜாக்சன் அமெரிக்க அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்துடைய தலைவராக ஒபாமாவின்கீழ் பணியாற்றினார் என்பதும் 2013-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், ``காலநிலை மாற்றத்தை நாங்கள் ஒரு பிரச்னையாகப் பார்க்கவில்லை. அதைத் தாக்குப்பிடிக்கும் வகையில் புதிய ஆக்கபூர்வக் கண்டுபிடிப்புகளைக் கொண்டுவரக் கிடைத்த வாய்ப்பாகவே பார்க்கிறோம்" என்று கூறியவர், ஆப்பிள் நிறுவனம் அதன் 100% மின்சாரத் தேவைகளை எவ்வாறு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பூர்த்தி செய்துகொள்கிறது என்பதைப்பற்றியும் விரிவாக உரையாற்றினார்.

Vikatan

இந்த விருதை வழங்கிய செரஸ் நிறுவனம் சுற்றுப்புறச் சூழல் மற்றும் பொருளாதாரத் தேவைகளுக்கு நிலைத்தன்மையுடைய (Sustainable) ஆற்றல் சக்திகளை ஊக்குவிக்கும் ஒரு லாபநோக்கமற்ற நிறுவனமாகும்.