Published:Updated:

`சென்னை அப்பார்ட்மென்ட்களில் வெட்டப்படும் கிணறுகள்!' - என்ன பலனளிக்கும்?

இப்போது தண்ணீர்த் தேவையைச் சமாளிக்க கிணறு வெட்ட வேண்டியது அவசியம்தான். ஆனால், ஒரே இடத்தில் பல கிணறுகள் தோண்டக் கூடாது. அது தண்ணீர்ப் பயன்பாட்டை அதிகப்படுத்துவதற்கு வாய்ப்பாகவே அமையும்.

வறட்சியிலும் தண்ணீர் கொடுக்கும் கிணறு
வறட்சியிலும் தண்ணீர் கொடுக்கும் கிணறு

கோடைக்காலம் முடிந்தும் தமிழகத்தில் தண்ணீர்ப் பிரச்னை தீர்ந்தபாடில்லை. இரண்டு, மூன்று நாள்களும் பெய்த மழையும் நின்றுவிட்டது. தமிழகம் முழுவதிலும் மக்கள் தண்ணீருக்காக அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதில் தலைநகரம் சென்னை கொஞ்சம் அதிகமாகவே தத்தளிக்கிறது. இந்த நிலையில்தான் மக்களும் தன்னார்வ அமைப்புகளும் மழைநீரைச் சேமிப்பது, குளங்களைத் தூர்வாருவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இருந்தும் சென்னையில் அப்பார்ட்மென்ட்களில் நிலை கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கிறது. அதற்காகச் சென்னை அப்பார்ட்மென்ட்களில் கிணறு தோண்டி தண்ணீர் எடுத்துக்கொண்டிருக்கின்றனர் ஒரு தரப்பினர். மற்றொரு தரப்பினர் ஆழ்துளைக் கிணறுதான் சரி எனும் வாதத்தை முன்வைத்து வருகின்றனர். இவ்வாறு முரண்பாடான கருத்துகளுக்கு தீர்வு என்ன என்பது பற்றி சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜனகராஜனிடம் பேசினோம்.

கிணறு
கிணறு

"கடலோர இடங்களில் கிணறு வெட்டினால் தண்ணீர் கிடைக்கும். ஆனால் 30 அடிக்கு மேல் செல்லக் கூடாது. அதற்கு மேல் போனால் கடல்நீர் உள்ளே வந்துவிடும். அதிகபட்சமாக 20 அடிவரைக்கும்தான் நல்ல தண்ணீர் கிடைக்கும். 20க்கு மேல் போனாலே உப்புத்தன்மை கொண்ட தண்ணீர்தான் கிடைக்கும். சென்னையைப் பொறுத்தவரைக்கும் ஈ.சி.ஆர் மற்றும் ஓ.எம்.ஆர் ஆகிய பகுதிகளில்தான் கிணறு தோண்ட முடியும். ஆழ்துளைக் கிணறு என்பதே கடந்த 40 ஆண்டுக்குள்தான் அசுர வளர்ச்சி அடைந்தது. அதனால்தான் இன்று அவதிப்பட்டு வருகிறோம். பசுமைப் புரட்சி இல்லாத காலகட்டத்தில் வீடுகளிலும், விவசாய நிலங்களிலும் கிணறுகள்தான் இருந்தன. தண்ணீரும் தேவையான அளவு பயன்படுத்தப்பட்டு வந்தது. கிணற்றுக்கும், ஆழ்துளைக் கிணற்றுக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. முதலில் ஒரு விஷயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எவ்வளவு மழை பொழிந்தாலும், மழை நீரானது 40 அடிக்கு மேல் பூமிக்குள் இறங்காது. அப்படியானால் 1,000 அடி ஆழ்துளைக் கிணறு அமைத்தால் எப்படி பூமிக்குள் நீர் இறங்கும். இதனால் நிலத்தடி நீர் வளமானது நிச்சயமாகக் குறையத்தான் செய்யும். பிறகு தண்ணீர்ப் பஞ்சம் வரத்தான் செய்யும்.

ஆழ்துளைக் கிணற்றில் நேராக குழாய்களைச் செலுத்தி தண்ணீர் எடுக்கிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை. பக்கவாட்டில் குழாய்களைச் செலுத்தியும் தண்ணீர் எடுத்து வருகிறார்கள். இதைப் பெரிய நிறுவனங்கள் எடுக்கும்போது தண்ணீர்ப் பற்றாக்குறை இன்னும் அதிகமாகிறது. இப்படியே எடுத்துக்கொண்டிருந்தால் நிலத்தடியில் தண்ணீர் இருக்காது. ஆழ்துளைக் கிணற்றில் நீர் மறுசுழற்சி முறையில் சேராது. இவ்வாறு நிலத்தடி நீர் குறைவதைத்தான் 'டே ஜீரோ' என்கிறோம். கிணற்றையாவது இத்தனை அடி ஆழம் என அளந்துவிடலாம். ஆனால், ஆழ்துளைக் கிணற்றில் ஆழத்தை அளப்பது கடினமான ஒன்று.

புதிதாக வெட்டப்பட்ட கிணறு
புதிதாக வெட்டப்பட்ட கிணறு

பூமியில் பெய்யும் மழைநீரானது 40 அடி வரைக்கும்தான் கீழே இறங்கும். அதனால் கிணற்றில் தண்ணீர் ஊறிக்கொண்டிருக்கும். நமக்குத் தேவையான தண்ணீரும் கிடைத்துக் கொண்டேயிருக்கும். அதேபோல பூமிக்கு உள்ளே குறைந்த ஆழத்தில் கிடைக்கும் தண்ணீர்தான் நல்ல தண்ணீர் என்று சிலர் கருதுகிறார்கள். தண்ணீர் நல்லதா கெட்டதா என்பதை நிலப்பரப்பு மற்றும் மண்ணின் தன்மை ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு கணக்கிட வேண்டும். பத்து அடியிலேயே உப்புத் தண்ணீர் கிடைக்கும் இடங்களும் இருக்கின்றன.

இப்போது தண்ணீர்த் தேவையைச் சமாளிக்க கிணறு வெட்ட வேண்டியது அவசியம்தான். ஆனால், ஒரே இடத்தில் பல கிணறுகள் தோண்டக் கூடாது. அது தண்ணீர்ப் பயன்பாட்டை அதிகப்படுத்துவதற்கு வாய்ப்பாகவே அமையும். ஊற்று இருக்கும் இடத்தில் அருகருகே இரண்டு கிணறுகள் தோண்டும்போது, 30 நாள்களுக்கு இருக்கும் நீர், 15 நாள்களுக்கு மட்டுமே இருக்கும். எப்போதுமே கிணறு தோண்டி தண்ணீர் எடுப்பதுதான் சிறந்தது. கடந்த 1983-ம் ஆண்டு அதிகப்படியான வறட்சி இருந்தது. ஆனால், அப்போது கூட தண்ணீர்ப் பிரச்னை குறைவான அளவிலேயே இருந்தது. ஆனால், இப்போது தண்ணீர்ப் பற்றாக்குறை மோசமாக இருக்கிறது. இனி வரும் காலங்களில் வறட்சி ஏற்பட்டால் இதை விட மோசமானதாக இருக்கும்.

எல்லோருக்கும் சொல்ல வேண்டியது இதுதான்... சென்னைக்கு இனி தண்ணீர்ப் பஞ்சம் இருக்கத்தான் செய்யும்.
பேராசிரியர் ஜனகராஜன்

எல்லோருக்கும் சொல்ல வேண்டியது இதுதான்... சென்னைக்கு இனி தண்ணீர்ப் பஞ்சம் இருக்கத்தான் செய்யும். அரசு எடுக்கும் முயற்சிகள் மக்களுக்குப் பலனளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். இப்போது ரயிலில் தண்ணீர் வருவதே மிகப்பெரிய தண்ணீர்ப் பிரச்னைக்கு முக்கியச் சான்று. இனி வரும் காலங்களில் அதிகப்படியான ரயில்கள் வரலாம். ரயிலில் தண்ணீர் கொண்டு வருவது தற்காலிகமானதாக தீர்வு தரலாம். ஆனால் ஏரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வராமல் நிரந்தரத் தீர்வு கிடைக்காது. எளிதில் தீர்க்கப்பட வேண்டிய விஷயத்தை முற்ற விட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது அரசாங்கம்." என்றார், காட்டமாக.