Published:Updated:

அதிகரிக்கும் பசுமை ஹைட்ரஜன் ஆய்வுகள்; அடுத்த எரிபொருள் புரட்சிக்கு வழிவகுக்குமா?

பசுமை ஹைட்ரஜன் என்றால் என்ன? அது ஏன் இன்றைய சூழலில் இவ்வளவு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது?

ஹைட்ரஜன் தயாரிப்பில், பசுமையான முறையைக் கையாளுவதன் மூலம் பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைத்து, உலக நாடுகள் காலநிலை இலக்குகளை அடைய முடியும் என்று கூறப்படுகிறது. அதென்ன பசுமை ஹைட்ரஜன்?

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உதவியோடு, நீரிலிருக்கும் ஹைட்ரஜன் அணுக்களையும் ஆக்சிஜன் அணுக்களையும் பிரிப்பதன் மூலம் பசுமை ஹைட்ரஜன் தயாரிக்கப்படுகிறது. புதைபடிம எரிபொருள்களின் உதவியோடுதான் வழக்கமாக ஹைட்ரஜன் தயாரிக்கப்படுகிறது. உரங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் போன்றவற்றுக்கான முக்கியமான மூலப்பொருளாக ஹைட்ரஜன் இருக்கிறது.

ஹைட்ரஜன்
ஹைட்ரஜன்
Pixabay

ஆகவே, இந்தத் துறைகளில் நிகழும் கரிம உமிழ்வைக் கட்டுப்படுத்துவதில் பசுமை ஹைட்ரஜனுக்கு முக்கியப் பங்குண்டு. அதோடு, இரும்பு உற்பத்தியில் பயன்படுத்தப்படும் நிலக்கரிக்குப் பதிலாக இதைப் பயன்படுத்துவதன் மூலம், இரும்பு தயாரிப்பில் நிகழும் உமிழ்வையும் கட்டுப்படுத்த முடியும்.

இப்போதுவரை, நாம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை, கரிம உமிழ்வுகளற்ற தூய்மையான மின்சாரத்துக்கானது என்ற பார்வையிலேயே கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால், தொழிற்சாலைகள், போக்குவரத்துத் துறைகளில் நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைய வேண்டுமெனில், நமக்கு தூய எரிவாயு அவசியம். அதில், பசுமை ஹைட்ரஜன் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறுகிறார் ஆற்றல் மற்றும் வளங்களுக்கான நிறுவனத்தின் (TERI) முன்னாள் தலைமை இயக்குநர், அமித் குமார்,

உலகம் முழுக்கவே தீவிர பருவகால நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. காலநிலை செயல்பாடுகளைத் துரிதப்படுத்தி, நிகர பூஜ்ஜிய உமிழ்வுக்குக் கொண்டுவரவில்லை என்றால், பூமியின் வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி முதல் 2 டிகிரிக்குள்ளாகத் தக்கவைக்க முடியாது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். இந்நிலையில், பசுமை ஹைட்ரஜன் பொருளாதாரரீதியாக அதற்கானதொரு முக்கிய மூலப்பொருளாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பசுமை ஹைட்ரஜன்
பசுமை ஹைட்ரஜன்
Pixabay

இந்தியாவில், ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான திட்டங்களைக் கொண்டுவருகின்றன. செப்டம்பர் 2021-ல் கேரளா, பல ஆற்றல் உற்பத்தி நிறுவனங்களோடு கொச்சின் விமான நிலையத்திலுள்ள சூரிய மின்சாரக் கட்டமைப்பிலிருந்து பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்வதற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில், பிரதமர் தேசிய ஹைட்ரஜன் திட்டத்தை அறிவித்ததோடு, அதன்மூலம் இந்தியாவின் மாற்று ஆற்றல் இலக்குகளை அடைவதில் அது உதவும் என்றும் கூறினார்.

சரி, பசுமை ஹைட்ரஜன் என்றால் என்ன? அது ஏன் இன்றைய சூழலில் இவ்வளவு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``ஹைட்ரஜன் என்பது அடிப்படையில் ஒரு நிறமில்லாத வாயு. ஆனால், பசுமை, சாம்பல், நீலம் போன்ற நிறங்கள், ஹைட்ரஜன் எந்த முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை வகைப்படுத்துகிறது. இதில், புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் வழியே உற்பத்தி செய்யப்படுவதுதான் பசுமை ஹைட்ரஜன் என்று குறிப்பிடப்படுகிறது" என்கிறார் ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீருக்கான மன்றத்தைச் சேர்ந்த ஆற்றல் பொறியாளரான ஆஷிஷ் குஹன் பாஸ்கர்.

Steel Industry
Steel Industry
Pixabay

புதைபடிம எரிபொருள் உதவியோடு உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜனின் தேவை 2020-ம் ஆண்டில் 6 மில்லியன் டன்கள். 2050-ம் ஆண்டுக்குள் புதைபடிம எரிபொருள் மூலம் தயாரிக்கப்படும் சாம்பல் ஹைட்ரஜன் தேவை இப்போதைய தேவையைவிட ஐந்து மடங்கு அதிகமாகும் என்று ஆற்றல் மற்றும் வளங்களுக்கான நிறுவனத்தின் அறிக்கை கணிக்கிறது. இப்போது அதன் விலை, சராசரியாக ஒரு கிலோவுக்கு 221 ரூபாய் முதல் 737 ரூபாய் வரை இருக்கிறது. ஆனால், விரைவில் பசுமை ஹைட்ரஜனின் விலை கிலோவுக்கு 147 ரூபாய் வரை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிக் குறைந்துவிட்டால், 2030-ம் ஆண்டுக்குள்ளாகவே பசுமை ஹைட்ரஜனுக்கான சந்தை வளர்ந்துவிடும்.

போக்குவரத்துத் துறையில் பசுமை ஹைட்ரஜன் எரிவாயு பயன்படுத்துவதன் மூலம், கரிம உமிழ்வைக் குறைக்க முடியும். மேலும், இரும்பு மற்றும் சில வேதிம உற்பத்தியில் முக்கியமான மூலப் பொருளாக மட்டுமன்றி எரிபொருளாகவும் பயன்படுத்தலாம். மின்சார உற்பத்தியில் புதைபடிம எரிபொருள் பயன்பாட்டுக்கு மாற்றாக இது அமைவதோடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சேமிப்பிலும் இது உதவுகிறது.

உலகளாவிய பசுமை இல்ல வாயு உமிழ்வில் 7 சதவிகித இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி பங்கு வகிக்கிறது. மேம்பாலங்கள் முதல் கார்கள் வரை தயாரிப்பதில் இரும்பு பயன்படுகிறது. அப்படி உருவாக்கப்படுவன மூலம் 35 விழுக்காடு கரிம உமிழ்வுக்குப் பங்கு வகிக்கிறது.

இரும்பு உற்பத்தி
இரும்பு உற்பத்தி
Pixabay

இந்நிலையில், இரும்பு உற்பத்தியில் எரிவாயுவாகப் பயன்படுவதோடு, பசுமை ஹைட்ரஜனை அதற்கான மூலப்பொருளில் பயன்படுத்தும்போது, கரிம உமிழ்வு குறைகிறது. பசுமை ஹைட்ரஜன் சார்ந்த இரும்பு உற்பத்தி குறித்த பரிசோதனைகளை ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் மேற்கொண்டுள்ளன. டாடா ஸ்டீல் நிறுவனமும் அதில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் மிகப்பெரிய இரும்பு உற்பத்தியாளரான இந்தியாவில் இந்த பசுமை ஹைட்ரஜன் சார்ந்த இரும்பு உற்பத்தி மிகப்பெரிய அளவில் நன்மை பயக்கும். 2020-21 ஆண்டில் மட்டும் இந்தியா 10.15 மில்லியன் டன் இரும்பு ஏற்றுமதியைச் செய்துள்ளது. கரிமத் தடங்களைக் கணக்கிட்டு, ஐரோப்பிய யூனியனில் கரிம வரி நிர்ணயிக்கத் தொடங்கிவிட்டனர். ஆகவே, வரியைக் குறைக்க பசுமை ஹைட்ரஜன் மூலம் கரிமத் தடங்களைக் குறைக்கலாம்.

பசுமை ஹைட்ரஜன் பயன்பாட்டிற்கு முற்றிலுமாக மாறுவதில் இப்போதுள்ள மிகப்பெரிய சவால், அது பொருளாதாரரீதியாக இன்னும் எளிதானதாகவோ வணிகரிதியாகப் பரவலாகவோ இல்லை. வழக்கமான இரும்பைவிட, பசுமை ஹைட்ரஜன் இரும்பு இப்போது 50 சதவிகிதம் அதிகமாக இருக்கிறது. முன்பே கூறியதுபோல், அதன் விலை 2030-ம் ஆண்டுக்குள் குறையும் என்ற கணிப்பு நடைமுறையில் சாத்தியமானால், இது பரவலாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
Pixabay

இந்த மாற்றத்தைச் சாத்தியப்படுத்த மானியங்கள், ஊக்கத்தொகை போன்றவற்றை இந்திய அரசு அறிமுகப்படுத்த வேண்டும். கொள்கை முடிவுகளின் வழியே பசுமை ஹைட்ரஜன் பயன்பாட்டை எளிமைப்படுத்த வேண்டும்.

அதோடு, இந்தியாவில் இன்னமும் பசுமை ஹைட்ரஜன் உதவியோடு இரும்பு உற்பத்தியில் ஈடுபடுவது குறித்து ஆழமான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. உடனடியாக இந்த மாற்றத்தைக் கொண்டு வர முயன்றால், அதற்கு ஆகும் செலவுகளைத் தாக்குப்பிடிக்க முடியாது. ஆனால், 2030-ம் ஆண்டுக்குள் நிலக்கரி சார்ந்துள்ள இரும்பு உற்பத்தி முறையில் குறிப்பிட்ட அளவிலாவது பசுமை ஹைட்ரஜன் சார்ந்ததாக மாற்றிவிட முடியும். அதன்மூலம், சீரான மாற்றங்களையும் வளர்ச்சியையும் காலநிலை பாதுகாப்புக்கான பாதையில் கொண்டுசெல்ல முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு