Published:Updated:

வட இந்தியாவிலிருந்து தென்காசிக்கு வரும் வெண்கழுத்து நாரைகள்! என்ன காரணம் தெரியுமா?

புல்வெளியில் வெண்கழுத்து நாரை ( புகைப்பட உதவி: பிரபு )

பன்னாட்டு இயற்கை வள பாதுகாப்பு நிறுவனத்தின் செம்பட்டியலில் வெண்கழுத்து நாரையானது கூடிய விரைவில் அழிவுக்குள்ளாகக்கூடிய இனமாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்விட அழிப்பு மற்றும் வேட்டையாடுதலால் இப்பறவைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

வட இந்தியாவிலிருந்து தென்காசிக்கு வரும் வெண்கழுத்து நாரைகள்! என்ன காரணம் தெரியுமா?

பன்னாட்டு இயற்கை வள பாதுகாப்பு நிறுவனத்தின் செம்பட்டியலில் வெண்கழுத்து நாரையானது கூடிய விரைவில் அழிவுக்குள்ளாகக்கூடிய இனமாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்விட அழிப்பு மற்றும் வேட்டையாடுதலால் இப்பறவைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

Published:Updated:
புல்வெளியில் வெண்கழுத்து நாரை ( புகைப்பட உதவி: பிரபு )

பறவை சூழ் உலகு - 7

டந்த வாரங்களில் சங்குவளை நாரை மற்றும் நத்தைக் குத்தி நாரைக் குறித்து பார்த்தோம். இவை இரண்டும் நம் தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படக்கூடியவை மற்றும் நம்மூர் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்பவை. இந்த முறை நாம் காண இருக்கும் வெண்கழுத்து நாரையானது வட இந்திய பகுதிகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு வலசை வரக்கூடிய நாரை இனமாகும். இவை தமிழ்நாட்டில் இனப்பெருக்கம் செய்வதில்லை.

`சிகோனிடே' குடும்பத்தைச் சேர்ந்த இந்நாரையின் அறிவியல் பெயர் `சிசினியா எபிஸ்காப்பஸ்' என்பதாகும். ஆங்கிலத்தில் இதை Woolly-necked Stork அல்லது White-necked Stork என்றழைப்பார்கள். நெல் வயல்கள், சதுப்பு நிலங்கள், புல்வெளிகள் மற்றும் நீர் குறைவாக அல்லது வற்றிக் கொண்டிருக்கும் குளங்களில் காணப்படும். மெதுவாக நடந்து திரிந்துகொண்டிருக்கும் நாரை இனம். மீன், தவளை, நண்டு, நத்தை, பாம்பு மற்றும் பூச்சிகளை உண்ணும்.

புல்வெளியில் வெண்கழுத்து நாரை
புல்வெளியில் வெண்கழுத்து நாரை
புகைப்பட உதவி: பிரபு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உருவத்தில் பெரிய நாரை, உறுதியான அலகு மற்றும் நீண்ட கால்களைக் கொண்டிருக்கும். உடல் கறுப்பு நிறத்தில் இருக்கும். தலை உச்சியில் உள்ள கறுப்பு வண்ணம் தொப்பி வைத்தது போல் தோற்றமளிக்கும். பெயருக்கேற்றாற்போல் கழுத்துப் பகுதி முழுவதும் வெண்மையான நிறத்தில் இருக்கும். இது பார்ப்பதற்கு வெள்ளை நிறக் கம்பளி அல்லது தேங்காய்ப்பூ துண்டு போல தோன்றும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தப் பறவைகளை நானும் என் மனைவி முத்துவும் 2013-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சிக்கு அருகில் உள்ள கரம்பை என்னும் ஊரில் பார்த்தோம். அந்த ஊரில் உள்ள நெல் வயல்களில் நண்பகல் வேளையில் உணவு தேடிக்கொண்டிருந்தன. நான்கு பறவைகள் ஒன்றாக மேய்ந்துகொண்டிருந்தன. அந்தப் பறவைகளைப் பார்த்தவுடன் அவ்வளவு மகிழ்ச்சி. மீண்டும் அடுத்தடுத்த நாள்களில் அதே நேரத்தில் அந்த வயலுக்குச் சென்று வெண்கழுத்து நாரைகளைப் பார்க்க காத்திருந்தேன். ஆனால், பார்க்க இயலவில்லை. அதற்குப் பின் ஓராண்டு கழித்து நானும் கல்லிடைக்குறிச்சி அபுபக்கர் என்பவரும் தென்காசி மாவட்டம் வாகைக்குளத்தில் பறவைகளை காணச் சென்றபோது ஆம்பூருக்கு அருகில் உள்ள தொடர்வண்டி தண்டவாளத்தை யொட்டிய புல்தரைகளில் மேய்ந்துகொண்டிருந்தன.

குளக்கரையில் வெண்கழுத்து நாரை
குளக்கரையில் வெண்கழுத்து நாரை
புகைப்பட உதவி: சங்கர் சுப்பிரமணியன்

பறவைகள் சிறிய கேமராவில் படம்பிடித்தார் அபுபக்கர். அதற்குப் பின் கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் கூடன்குளம் அணுமின் நிலையம் அருகில் உள்ள குளத்தில் என் மனைவி மற்றும் குழந்தைகளுடன் காண வாய்ப்பு கிட்டியது. பின்னர், பிப்ரவரி மாதத்தில் கூடன்குளம் அருகில் உள்ள செட்டிகுளத்தில் பார்த்தேன். கடைசியாக மார்ச் மாதத்தில் நண்பர் தணிகைவேல், விநோத் சதாசிவம் மற்றும் பால்மதி ஆகியோருடன் தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரத்தில் பார்த்தேன். ஒரு மதிய வேளையில் மூன்று பறவைகள் புல்வெளியில் அசையாது ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அது என்னமோ தெரியவில்லை, இந்தப் பறவையைப் பார்த்த ஆண்டு, மாதங்கள், இடங்கள் மற்றும் யாருடன் சேர்ந்து பார்த்தேன் என்பவை அப்படியே நினைவில் உள்ளன. ஒவ்வொரு முறையும் இந்தப் பறவையைப் பார்க்கும்போது அவ்வளவு மகிழ்ச்சி. என் மனைவி முத்துவுக்கும் இந்தப் பறவை மீது அவ்வளவு பிரியம், இந்த முறை கூடன்குளத்தில் இந்தப் பறவையைப் பார்த்தபோது என் மகன் தரணிதரனிடம் நீ வயிற்றுக்குள் இருந்தபோது இந்தப் பறவையை நானும் அப்பாவும் கல்லிடைக்குறிச்சியில் பார்த்தோம் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். வளர்ந்து வரும் காட்டுயிர் எழுத்தாளர் தம்பி ரமண கைலாஷ் கடந்த ஆண்டு தேக்கடிக்குச் சென்று அங்கு கூடுகட்டியிருந்த வெண்கழுத்து நாரைகளைப் புகைப்படம் எடுத்துக் காண்பித்தார். புகைப்படத்தைப் பார்த்தவுடன் அங்கு சென்று பார்வையிட வேண்டும் என்ற ஆர்வம் வந்துள்ளது.

பன்னாட்டு இயற்கை வள பாதுகாப்பு நிறுவனத்தின் செம்பட்டியலில் வெண்கழுத்து நாரையானது கூடிய விரைவில் அழிவுக்குள்ளாகக்கூடிய இனமாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்விட அழிப்பு மற்றும் வேட்டையாடுதலால் இப்பறவைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பன்னெடுங்காலமாக வெண்கழுத்து நாரைகள் இப்புவியில் வாழ்ந்து வருகின்றன. புலிகளுடன் இணைந்து காட்டுப் பகுதியிலும் இந்நாரைகள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. இந்த வெண்கழுத்து நாரை போன்ற பறவைகளின் வாழ்விடங்களைப் பாதுகாத்து அவை வாழ்வதற்கேற்றச் சூழலை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism