Published:Updated:

சென்னையில் இன்று பதிவான `நிழலில்லா நாள்': உங்கள் ஊரில் எப்போது தெரியுமா?

நிழலில்லா நாள்
நிழலில்லா நாள் ( படம்: நரேஷ் / விகடன் )

சென்னையில் இன்று நிழலில்லா நாள். மதியவேளையில் சூரியன் உச்சிக்கு நேராக வருவதால், நம்முடைய நிழல் நம் காலடியிலேயே விழும். அதனால், நம் நிழலை நம்மால் பார்க்கமுடியாது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் ஒருநாள் மற்றும் ஏப்ரல் மாதத்தின் ஒருநாள் ஆகிய இரண்டு நாட்களுக்கு மதியவேளையில் சில விநாடிகளுக்கு நிழல் தெரியாது. அந்த வகையில், இந்த ஆண்டின் இரண்டாவது நிழலில்லா நாள் இன்று நிகழ்ந்தது.

இந்த நிழலில்லா நாளில், மதியவேளையில் சூரியன் உச்சிக்கு நேராக வருவதால், நம்முடைய நிழல் நம் காலடியிலேயே விழும். அதனால், நம் நிழலை சில விநாடிகளுக்கு நம்மால் பார்க்கமுடியாது. இதுவே `நிழலில்லா நாள்' என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் நிழல் இல்லாத நாள் ஏப்ரல் 24-ம் தேதியன்று வந்தது. இரண்டாவதாக இன்று (ஆகஸ்ட் 18) நிகழ்ந்தது.

பிர்லா கோளரங்கம்
பிர்லா கோளரங்கம்
படம்: நரேஷ் / விகடன்

ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வாணியம்பாடி, கடலூர், ஆம்பூர், ஆரணி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், கேளம்பாக்கம், வேலூர், ஆற்காடு, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், ஆவடி, சென்னை ஆகிய இடங்களில் இன்று நிகழ்வு மதியம் 12:13 மணியளவில் இது நிகழ்ந்தது.

ஒவ்வோர் ஆண்டும் பூமியினுடைய நிலநடுக்கோட்டிற்கு நேராக உச்சியில் சூரியன் மார்ச் 23-ம் தேதியன்று வரும். அங்கிருந்து வடக்கில் 23.5 டிகிரிக்கு நகர்ந்து ஜூன் 21-ம் தேதியில் கடக ரேகைக்கு மேலே வரும். அங்கிருந்து மீண்டும் தெற்கு நோக்கி வந்து நிலநடுக்கோட்டிற்கே செப்டம்பர் 23-ல் வரும்.

இந்தப் பயணத்தில் நிலநடுக்கோட்டிலிருந்து 23.5 டிகிரிக்கும் அங்கிருந்து மீண்டும் நிலநடுக்கோட்டிற்கும் சூரியன் பயணிக்கின்ற பாதையின் நடுவில்தான் சென்னை அமைந்துள்ளது. ஆகவே வடக்கு நோக்கிப் போகும்போது ஒருமுறையும் தெற்கு நோக்கிப் போகும் ஒருமுறையும் சென்னையின் உச்சிக்கு நேராக சூரியன் வருகிறது. வடக்கு நோக்கிச் செல்லும்போது சூரியன் சென்னையின் உச்சிக்கு நேராக ஏப்ரல் 24-ம் தேதியிலும் தெற்கு நோக்கி மீண்டும் வரும்போது ஆகஸ்ட் 18-ம் தேதியிலும் வருகிறது.

நிழலில்லா நாள்
நிழலில்லா நாள்
படம்: நரேஷ் / விகடன்

இதுகுறித்துப் பேசிய விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், ``உள்ளூர் நேரப்படி, உச்சிப்பொழுதில் சரியாக 12:13 மணிக்கு இது நிகழ்ந்தது. இன்று நாங்கள் இதைக் கண்காணிப்பதற்காக, ஒரு குச்சியை செங்குத்தாக நட்டு வைத்து, காலையிலிருந்து அதன் நிழல் எப்படி மாறி வருகிறது என்பதைக் கவனித்தோம். சூரியன் மேலேறி வர வர, நிழலும் குறுகிக் கொண்டே வரும். அப்படி வரும்போது, சரியாக 12:13 மணிக்கு, குச்சியின் நிழல் அந்தக் குச்சிக்கு உள்ளாகவே விழுந்தது. இரண்டாவதாக, ட்யூப் ஒன்றை நேராக நிறுத்தி வைத்து கவனித்தோம். அதிலும் அதுவே நிகழ்ந்தது. மற்ற நாள்களின் உச்சிப் பொழுதில் பார்த்தால், அந்த ட்யூபின் நிழல் முட்டை வடிவத்தில் இருக்கும். நிழலில்லா நாளில் மட்டும், அந்த நிழல் வட்டமாக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன்இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏனெனில், இந்த நாளில்தான் சூரியன் நேர் உச்சியில் இருக்கிறது. ஆகவே, சூரிய ஒளி பொருளின் நேர் உச்சியில் விழுவதால் அதன் நிழலும் அதற்குள்ளாகவே அடங்கிவிடுகிறது. இதைப் போலவே மற்றுமொரு முறையில், நான்கு கால்களோடு, நடுவில் வட்டமான துளையோடு இருக்கும் ஸ்டூல் ஒன்றை வைத்து கவனித்தோம். சூரிய ஒளி அந்த ஸ்டூலில் படும்போது, ஸ்டூல் முழுவதும் கீழே நிழலாகவும் நடுவிலிருக்கும் துளையின் வழியே சூரிய ஒளியும் கீழே விழுமல்லவா!

Zero Shadow Day
Zero Shadow Day
படம்: நரேஷ் / விகடன்

அந்த ஒளியின் வடிவம் மற்ற நாட்களில் பார்த்தால், முட்டை வடிவத்தில் இருக்கும். அதையே இன்று, அதாவது நிழலில்லா நாளில் பார்க்கையில் ஸ்டூலுக்குக் கீழே அந்தத் துளையின் வழியே விழும் ஒளி துல்லியமான வட்ட வடிவிலேயே இருக்கும். சூரிய ஒளி நேர் உச்சியில் இருப்பதால் இந்த வடிவம் கிடைக்கிறது. இந்த நிகழ்வு சராசரியாக உச்சிவேளையில் 10 விநாடிகள் முதல் 20 விநாடிகள் வரை நீடிக்கும்" என்று கூறினார்.

இந்திய வானியல் சமூகத்தின் (Astronomical Society of India) தரவுகள்படி, இந்த நிழலில்லா நாள் தோன்றும் தேதி பகுதிவாரியாக மாறுபடுகிறது. அதன்படி, ஆவடி, சென்னை, வேலூர், அரக்கோணம், பெங்களூரு, திருவள்ளூர், மங்களூர், ஹஸன், ஆற்காடு போன்ற பகுதிகளில் இன்று நிழலில்லா நாள் ஏற்படுகிறது.

Zero Shadow Day App
Zero Shadow Day App
நிர்மலா சீதாராமன் குறிப்பிட்ட ஆயில் பாண்டுகள்; பெட்ரோல் விலையைக் குறைக்காததற்கு இதுதான் காரணமா?

இதைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி, நெய்வேலி, பன்ருட்டி, கடலூர், முதுமலை, பவானி, சேலம், மேட்டூர், வயநாடு ஆகிய பகுதிகளில் இது ஆகஸ்ட் 22-ம் தேதியன்று நிகழ்வதாகக் குறிப்பிட்டுள்ளது. அதேபோல், கோழிக்கோடு, ஊட்டி, கோத்தகிரி, அவிநாசி, ஈரோடு, திருச்செங்கோடு, நாமக்கல், சிதம்பரம், கோயம்புத்தூர், கூடலூர், பல்லடம், திருப்பூர், மலப்புரம் ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் 23, 24 ஆகிய தேதிகளில் பார்க்கமுடியும் என்று சொல்லப்படுகிறது.

இப்படி எந்தெந்த ஊரில் எந்தெந்த தேதியில் சூரியன் நேர் உச்சிக்கு வருகிறது, நிழல் இல்லாத நாள் ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள இந்திய வானியல் சமூகம் ஆண்ட்ராய்டு செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது. அந்த செயலியில் சென்று நம் ஊரில் எப்போது நிழலில்லா நாள் ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அதன்மூலம், உங்கள் ஊருக்கு இன்னும் நிழலில்லா நாள் வரவில்லை என்றால், முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதைக் கவனிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு