Published:Updated:

"இது, நாம் பற்ற வைத்த நெருப்பு!" 160 ஆண்டுகளாக புவிவெப்பமயதாலுக்கு மனிதன் செய்தது என்ன? பகுதி -1

மனித இனம்
மனித இனம் ( Pixabay )

ஆபத்திலிருப்பது பூமியல்ல. எத்தனைப் பேரழிவுகள் வந்தாலும் அது தன்னை அடுத்தடுத்து புதுப்பித்துக் கொள்ளும். இப்போது ஆபத்திலிருப்பது மனித இனமும் மற்ற உயிரினங்களும்தான்.

சர்வதேச அரசியலிலும் சரி, பூமியின் உயிர்ச்சூழலிலும் சரி இன்றைய தீவிரப் பிரச்னையாக அனைவரும் பேசி வருவது காலநிலை மாற்றம். இந்தக் காலநிலை மாற்றம் எப்போது தூண்டப்பட்டது. இதற்கான மூலம் எங்கே தொடங்கியது?

11,500 ஆண்டுகளாக, வளிமண்டலத்தில் கரிம வாயுவின் அளவு 280 ppm, என்ற அளவிலேயே இருந்தது. சராசரி தட்பவெப்பநிலையுல் 15 டிகிரியிலேயே சீராகத்தானிருந்தது. இவையனைத்தும் தொழிற்புரட்சி தொடங்கும் வரைதான். அது தொடங்கியதிலிருந்து கரிம வாயுவின் அளவும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. ஆயிரக்கணக்கான வருடங்களாகச் சீராக இருந்த அளவு, 200 ஆண்டுகளுக்கும் குறைவான காலகட்டத்திலேயே 130 ppm உயர்ந்து 2018 ஆம் ஆண்டில் 410 ppm ஆக அதிகரித்துவிட்டது.

தொல்லுயிரிகள்
தொல்லுயிரிகள்
Pixabay

பூமி செயல்படுவதற்கான மூல இன்ஜின்தான் சூரியன். அது வெளியிடும் ஆற்றலில் 70 சதவிகிதத்தைக் கிரகித்துக்கொள்ளும் பூமி, மீதியை வளிமண்டலத்திற்கு வெளியே எதிரொலிக்கிறது. அந்த இன்ஜினைச் சார்ந்து செயல்படும் பூமி என்ற இயந்திரத்தின் வேலை இதுவாக மட்டும் இருந்திருந்தால் பூமி எப்போதோ -15 டிகிரிக்கும் குறைவாகச் சென்று உறைபனிச் சூழலில் சிக்கி எப்போதோ உயிர்கள் வாழத் தகுதியற்றுப் போயிருக்கும். அதிர்ஷ்டவசமாக, கிரகிக்கும் ஆற்றலில் கொஞ்சத்தை அகச்சிவப்புக் கதிர்களாக மறுபடியும் வெளியிடுகிறது.

கண்ணுக்குத் தெரியக்கூடிய ஒளியைப் போலன்றி இவை, பசுமை இல்ல வாயுக்களோடு எதிர்வினை புரிந்து வெப்பத்தை மீண்டும் பூமியின் நிலப்பரப்பிற்குத் திருப்பி அனுப்புகிறது. இந்தப் பசுமை இல்ல வாயுக்களின் தாக்கம்தான் பூமியின் தட்பவெப்பநிலையை 15 டிகிரியாகவே வைத்திருந்தது.

வளிமண்டலத்திலுள்ள பசுமை இல்ல வாயுக்களில் கரிம வாயுதான் 30% பங்கு வகிக்கிறது. பூமியைச் சூடாக்கும் திறன் அதற்கு அதிகமாகவே இருக்கிறது. கரிம வாயு சுமார் 100 ஆண்டுகள்வரை வளிமண்டலத்தில் நீடித்திருக்கும். ஆகவேதான், அதன் அளவு அதிகமானால் பூமியின் தட்பவெப்பநிலையிலும் பாதிப்பை உணர முடிகிறது. பல லட்சம் ஆண்டுகளாகவே எரிமலை வெடிப்புகள் அதிகமாகக் கரிம வாயுவை வெளியேற்றுகிறது.

ஆண்டுக்குச் சுமார் 0.4 பில்லியன் டன்கள் என்ற அளவில், அவை கரிம வாயுவை பல லட்சம் ஆண்டுகளாக வெளியேற்றுகின்றன. அப்படியிருந்தும் இத்தனை ஆண்டுகளாக ஏன் அவை வளிமண்டலத்தையோ பூமியையோ சூடாக்கவில்லை!
`பிரச்னையாகப் பார்க்கவில்லை; வாய்ப்பாகவே பார்க்கிறோம்'- காலநிலை மாற்றம் குறித்து ஆப்பிள் சி.இ.ஓ!

பூமியின் சூழலியல் செயல்முறைகள் பலவும் அதற்கு எதிர்வினையாற்றிச் சுற்றுச்சூழல் வெப்பமடையாமல் தற்காத்து வந்தன. 100 ஆண்டுகள் வரை நீடித்திருக்கும் கரிமத்தைக் கிரகித்து வைக்கும் 'கரிமத் தன்மயமாக்கல்' செயல்முறைகளும் அதில் அடக்கம். தாவரங்கள், பெருங்கடல் என்று பலவும் அதற்கான வேலைகளைச் செய்துகொண்டிருந்தன. இறந்து புதைந்துபோகும் உயிரினங்களும் தம்மோடு குறிப்பிட்ட அளவு கரிமத்தைச் சேர்த்தே கொண்டு சென்றன. இப்போது மனிதர்களால் தோண்டியெடுக்கப்படும் அவை, புதைபடிம எரிபொருளாகித் தாம் கிரகித்து வைத்திருந்த கரிமத்தை மொத்தமாக வெளியேற்றுகின்றன.

ஆண்டாண்டு காலமாகச் செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் நாம் பூமிக்குத் தோராயமாக 4.4 பில்லியன் வயது ஆவதாகச் சொல்கிறோம். இந்த 4.4 பில்லியன் ஆண்டுகளில் எவ்வளவு கரிமத்தைப் பூமி தனக்குள் கிரகித்திருக்கும்! ஆரம்பக்கட்டத்தில் வளிமண்டலத்தில் கரிம வாயுதான் அதிகமாக இருந்தது. அதாவது இப்போதிருப்பதைவிடச் சுமார் 10,000 மடங்கு அதிகமாக இருந்தது. 2.5 பில்லியன் ஆண்டுகளுக்குமுன் கண்டங்கள் உருவாகின. அதில் முதல் உயிரும் உருவாகியது. காலப்போக்கில் பரிணாமம் கொண்டுவந்த தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் கரிமத்தைக் கிரகித்து வளிமண்டலத்திலிருந்த அளவைக் குறைக்கத் தொடங்கின. அதன் விளைவாக 2.3 பில்லியன் ஆண்டுகளுக்குமுன் ஆக்சிஜன் அளவு அதிகமாகத் தொடங்கியது. தொழில் புரட்சிக்கு முன்பிருந்த அளவைவிட வெறும் 20 முதல் 100 மடங்கு மட்டுமே அதிகமாக இருக்கும் வகையில், கரிம அளவு 10,000 மடங்கிலிருந்து குறையத் தொடங்கியது.

பழம் பாறைகள்
பழம் பாறைகள்
Pixabay

மேலும், இரண்டு பில்லியன் ஆண்டுகள் கடந்த பிறகு, கரிமச் சுழற்சி வேகமெடுத்தது. 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், ஜுராசிக் காலகட்டத்தின் இறுதிக்கட்டத்தில் கண்டத்தகடுகள் வேகமாக நகரத் தொடங்கின. பேஞ்சியா என்ற பெருங்கண்டம் பல்வேறு கூறுகளாக உடைந்துகொண்டிருந்த நேரத்தில் கரிம அளவு மீண்டும் அதிகமாகத் தொடங்கியது. அடுத்த 100 மில்லியன் ஆண்டுகளுக்குப் பூமி மிகச் சூடான காலநிலையைக் கொண்டிருந்தது.

அடுத்த 55 ஆண்டுகளில், வேகவைத்த போண்டாவிலிருந்து வெப்பம் வெளியேறுவதைப் போல் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடு தணிந்து, பூமி குளிர்ச்சியடையத் தொடங்கியது.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், யூரேசியன் கண்டத்தகடோடு இந்தோ ஆஸ்திரேலியத் தகட்டின் ஒரு பகுதி வந்து இணைந்ததால், இமயமலை உருவானபோது, இந்தச் செயல்முறையும் பூமி குளிர்ச்சியடைதலும் வேகமெடுத்தது.
ஆய்வு முடிவுகள்
Vikatan

உயிர்களின் பரிணாம வளர்ச்சி வேகமெடுக்கும் வகையில் அதன் தட்பவெப்பநிலையும் காலநிலையும் சீராகிக் கொண்டிருந்த காலகட்டம். சுமார் 7 பில்லியன் ஆண்டுகளுக்கும் முன் ஹொமினிட்ஸ் உருவானார்கள். சுமார் நான்கு மில்லியன் ஆண்டுகளைக் கடந்து, 2.6 மில்லியன் ஆண்டுகளுக்குமுன் பூமி புதியதொரு சகாப்தத்தைத் தொடங்கியது. கரிமச் சுழற்சி சுருங்கியது. வளிமண்டலத்திலிருந்த கரிம அளவும் குறையத் தொடங்கியது. சுமார் 11,500 ஆண்டுகளுக்கு முன்னர், தொழில் புரட்சிக்கு முன்பிருந்த அளவுக்குப் பூமியின் வளிமண்டலத்தில் கரிம அளவு நிலைகொள்ளத் தொடங்கியது. முழுக்கப் பரிணாம வளர்ச்சியடைந்த அனைத்துச் செயற்பாடுகளும் அந்த அளவைத் தக்கவைக்கத் தேவையான செயற்பாடுகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தன.

தொழில் புரட்சி: புதுக் கதை...

11,500 ஆண்டுகளுக்கு முன்பிருந்து 19-ம் நூற்றாண்டு வரை வளிமண்டலக் கரிமத்தின் கதையும் பூமியின் காலநிலையுடைய கதையும் நிலவியல், உயிரியல், பரிணாம வளர்ச்சியின் செழிப்பான கதைகளாகவே இருந்தன. அந்த நூற்றாண்டின் இறுதியில் தொடங்கிய தொழிற்புரட்சி அதைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. 300,000 ஆண்டுகளுக்குமுன் தோன்றிய, ஹோமோசேபியன்கள் என்ற அறிவியல் பெயரால் அழைக்கப்படும் நவீன மனித இனம், புதைபடிம எரிபொருள்களைக் கணக்கின்றிச் சுரண்டிப் பயன்படுத்தத் தொடங்கியது.

பூமி
பூமி
Pixabay

1950 வாக்கிலேயே, புதைபடிம எரிபொருள்கள் வளிமண்டலத்தில் கரிம மூலக்கூறுகளை அதிகரிக்கின்றன என்பது நிரூபணமாகிவிட்டது. 1970-ல் காலநிலையை ஆய்வு செய்துகொண்டிருந்த ஆய்வாளர்கள் பூமியின் தட்பவெப்பநிலையில் திடீர் மாற்றம் நிகழ்வதை உணரத் தொடங்கிவிட்டனர். அதைத்தொடர்ந்து, அரசுகளுக்கு இடையேயான காலநிலைக் குழு (Intergovernmental Panel on Climate Change, IPCC) 1988-ம் ஆண்டே தொடங்கப்பட்டுவிட்டது. அந்த அமைப்பு தொடர்ச்சியாக நடத்திய ஆய்வுகளின் முடிவில் 1901-ம் ஆண்டிலிருந்து 2012-க்குள் பூமியின் தட்பவெப்பநிலையை 0.9% அதிகரித்துவிட்டதாக அறிவித்தது. பனிக்காலம் முடிந்தபிறகு 6 டிகிரி அளவுக்கு உயரவே 7,000 ஆண்டுகள் ஆனது. இப்போது வழக்கத்தைவிடப் பத்து மடங்கு வேகம். சராசரி வெப்பநிலை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இதற்கு முழுக் காரணம், மனிதர்கள் வெளியிடும் அதீதக் கரிம வாயுதான்.

இது நீடித்தால் இந்தப் புதுக் கதையின் முடிவு எப்படியிருக்கும்?

தொழிற்புரட்சி தொடங்கிய 160 ஆண்டுகளில் மட்டுமே தொழிற்சாலைகள் பூமியின் 25% புதைபடிமங்களை எரித்துவிட்டன. லட்சக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருந்த இயற்கையான கரிமத் தன்மயமாக்கலில் திடீர் இடைஞ்சலை உருவாக்கி அதையும் சிதைத்துவிட்டோம். நாம் ஆண்டுக்கு 28 ஜிகா டன்கள் கரிம வாயுவை வளிமண்டலத்தில் கலந்துவிட்டுக் கொண்டிருக்கிறோம். இது இயற்கையாகக் கலக்கும் எரிமலைகளைவிட 50 மடங்கு அதிகம்.

Geological timescale
Geological timescale
Pixabay

தற்போது நடந்துகொண்டிருக்கும் இயற்கையான கரிமத் தன்மயமாக்கலால் இதைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தீவிர வானிலை மாற்றங்கள், கடல் மட்ட உயர்வு, பனிப்பாறை உருகுதல், கடல் அமிலமயமாதல், சூழலியல் சீர்கேடுகள், உயிரின அழிவுகள் என்று இதற்கான விளைவுகளை வேகமாக, அதிகமாக, கொடூரமாக நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். பூமி ஏற்கெனவே பல பேரழிவுகளைச் சந்தித்துள்ளது.

ஆபத்திலிருப்பது பூமியல்ல. எத்தனை பேரழிவுகள் வந்தாலும் அது தன்னை அடுத்தடுத்துப் புதுப்பித்துக் கொள்ளும். இப்போது ஆபத்திலிருப்பது மனித இனமும் நம்மால் மற்ற உயிரினங்களும்தான்.

நாம் பற்றவைத்த நெருப்பு!
ஆம், நம் இருப்பையே நாம் கேள்விக்குள்ளாக்கிவிட்டோம். இது நாம் பற்றவைத்த நெருப்பு. இப்போது நம்மையே எரித்து கொண்டிருக்கிறது.
Vikatan

சரி, தொழிற்புரட்சிதான் இவ்வளவு பிரச்னைக்கும் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இந்தத் தொழிற்புரட்சி இல்லாமல் இன்று மனித இனம் இவ்வளவு விரைவான வளர்ச்சியைக் கண்டிருக்க முடியாது என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. காலநிலை மாற்றத்தைத் தூண்டிவிடாதவாறு, அழிவுப் பாதையில் பூமியைத் திருப்பாதவாறு இந்தத் தொழிற்புரட்சியைச் செய்திருக்க முடியுமா? பகுதி-2-ல் பார்ப்போம்.

பின் செல்ல