Published:Updated:

மண்ணெண்ணெய் விளக்கு, அதிகாலை படகுப் பயணம்... பிரதமர் மோடி பாராட்டிய ராஜப்பன் யார்?

பிரதமர் மோடியால் நேற்று நடந்த 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பாராட்டப் பெற்றவர் இந்த ராஜப்பன். மாற்றுத்திறனாளியான இவர், வேம்பனாடு என்ற ஏரியில், பிளாஸ்டிக் பாட்டில்களைச் சேகரித்து விற்பனை செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"முட்டிக்கு கீழே எனது கால்கள் வேலை செய்வதில்லை. தினந்தோறும் இந்தப் படகுல போய்த்தான் பாட்டில்களைச் சேகரிச்சுட்டு வருகிறேன். தினமும் சாக்கு பைகள் நிறைய பாட்டில்கள் கிடைக்கும். என்னோட அன்றாட வருமானத்துக் காகத்தான் இதைச் செய்கிறேன்" என்கிறார் ராஜப்பன்.

பிரதமர் மோடியால் நேற்று நடந்த 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பாராட்டப் பெற்றவர் இந்த ராஜப்பன். மாற்றுத்திறனாளியான இவர், கேரள மாநிலம், கோட்டயம் அருகிலுள்ள வேம்பனாடு என்ற ஏரியில், மக்கள் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பாட்டில்களைச் சேகரித்து அதை விற்பனை செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

படகு
படகு

அன்றாட வாழ்க்கைக்கே போராடிக் கொண்டிருக்கும் இந்த ராஜப்பன்தான், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பணியைச் செய்து வருகிறார் என்று நாடு முழுவதும் தன்னுடைய பணியால் பாராட்டப்பட்டு வருகிறார். நீர்நிலைகளை ஒருநாள் சுத்தப்படுத்திவிட்டாலே அதை ஃபேஸ்புக், ட்விட்டர் என்று பிரபலப்படுத்துபவர்களுக்கு மத்தியில் நீர்நிலைகளில் போடப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களைச் சேகரிக்கும் பணியை தன் வாழ்நாள் முழுவதும் செய்து வந்திருக்கிறார் 69 வயதாகும் ராஜப்பன்.

பிறவியிலேயே மாற்றுத் திறனாளியான இவர், தான் செய்யும் வேலை குறித்து அளித்துள்ள பேட்டியில், "காலை 4 மணிக்கெல்லாம் படகில் ஏறி பாட்டில்களைச் சேகரிக்கச் சென்றுவிடுவேன். கடந்த 6 மாத காலமாக இந்த ஏரியில் பாட்டில்களைச் சேகரிச்சிட்டு வருகிறேன். அதேபோன்று ஆத்துலயும் பாட்டில்களைச் சேகரிப்பேன். நான் தனியாகத்தான் வசிச்சிட்டு வருகிறேன். முட்டிக்கு கீழே இரண்டு கால்களும் செயல்படாததால், கைகளால் ஊன்றி நகர்ந்து செல்கிறேன். படகுக்கும் தரைக்கும் இப்படித்தான் கைகளைக் கொண்டு தாவி செல்கிறேன். பாட்டில்களைச் சேகரிக்க கிளம்பிவிட்டால் இரவுதான் திரும்புவேன். கடந்த மழையின்போது வெள்ளம் அதிகரிச்சு என் வீட்டில் உள்ள பொருள்களையெல்லாம் சேதமாக்கிடுச்சு. சேகரிச்சு வைத்திருந்த பாட்டில்களெல்லாம் அடிச்சிட்டு போயிடுச்சு. அது என்னை ரொம்பவே பாதிச்சிடுச்சு. அதனால்தான் திரும்பவும் நிறையவே உழைக்கிறேன். மக்களெல்லாம் நான் பெரிய சேவையை பண்ணிட்டு இருக்கிறதா சொல்றாங்க. சில பேர் என்னைக் கூப்பிட்டு அவங்க வீட்டுல இருக்கிற பிளாஸ்டிக் பாட்டில்களையும் எடுத்துட்டுப் போகச் சொல்றாங்க.

ஏரியில்
ஏரியில்

இன்றும் இரவுல மண்ணெண்ணெய் விளக்குலதான் வாழ்ந்துட்டு வர்றேன். சிலர் உணவுக்காக பணத்தைக் கொடுக்கிறாங்க. இருந்தாலும் என்னோட வேலை மூலமா கிடைக்கிற சொற்ப தொகை ஏதோ ஒரு விதத்துல உதவுது. இந்த நாட்டுப் படகை வைத்துதான் பாட்டில்களைச் சேகரிக்கிறேன். ஒரு நாளைக்கு 4 சாக்கு பையில பாட்டில்களைச் சேகரிச்சு கொண்டு வருகிறேன். தொடர்ந்து கைகளால் நடக்கிறதால கால்களெல்லாம் புண்ணாகிடுது. இருந்தாலும் சிரமம் பார்க்காம பாட்டில்கள சேகரிச்சுட்டு வருகிறேன். சின்ன வயசுல இருந்து இப்படியே வாழ்ந்துட்டு வர்றதால எதுவும் தெரியல. என்று கூறும் ராஜப்பனின் கனவு, "சாவுர வரைக்கும் சந்தோஷமா இருந்துட்டு இறந்துடணும்" என்பது மட்டும்தான்.

தாங்கள் செய்வது சேவை என்பதை அறியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் இதுபோன்ற எளிய மனிதர்களின் வாழ்வைக் காக்க அரசு உதவ வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கை. நாடு முழுவதும் நிறைய ராஜப்பன்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய அங்கீகாரமும் உதவியும் கிடைக்க வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு