Published:Updated:

`கோவிட் 19 மட்டுமல்ல; பெரும் ஆபத்துகளும் காத்திருக்கின்றன!' - இந்திய சிங்கங்களைக் காப்பாற்றுமா அரசு?

கோவிட் தொற்று சிங்கங்களைப் பாதித்தது ஒருபுறமிருக்க, இது மட்டுமன்றி, இன்னும் பல தொற்றுநோய்கள் ஆசிய சிங்கங்களின் இருப்புக்கே ஆபத்தாக இருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

ஹைதராபாத்திலுள்ள ஒரு காட்டுயிர் காப்பிடத்தில், வாழ்ந்த 8 ஆசிய சிங்கங்களுக்கு கோவிட்-19 இருப்பது இந்த மாதத் தொடக்கத்தில் உறுதி செய்யப்பட்டது. நேரு உயிரியல் பூங்காவில் வாழ்ந்த 12 சிங்கங்களில் 8 சிங்கங்கள், ஏப்ரல் மாத இறுதியிலிருந்தே, இருமல், சளி வடிதல், வயிற்றுப் போக்கு போன்ற உடல் உபாதைகளைச் சந்தித்து வந்தன. இந்நிலையில், அவற்றுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் அனைத்தும் கொரோனா அறிகுறிகளைப் போலவே இருந்ததால், ஒரு சந்தேகத்தின் பேரில், கோவிட் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. பரிசோதனையில் அந்த 8 சிங்கங்களுமே கோவிட்-19 தொற்றுநோய்க்கு ஆளாகியிருப்பது உறுதியானது.

கெனைன் டிஸ்டெம்பர் வைரஸ்
கெனைன் டிஸ்டெம்பர் வைரஸ்

இந்நிலையில், அவற்றைத் தனிமைப்படுத்தி வைத்து, உரிய கவனிப்பு மற்றும் சிகிச்சையை காப்பிட அதிகாரிகள் அளித்தனர். அதைத் தொடர்ந்து அவற்றின் உடல்நலம் முன்னேற்றம் காண்பதாகவும் மத்திய சுற்றுச்சூழல் துறை அறிவித்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவிலுள்ள அனைத்து உயிரியல் பூங்காக்கள் மற்றும் தேசியப் பூங்காக்களில், பார்வையாளர்கள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த 8 சிங்கங்களும் கோவிட் தொற்று பாதிக்கப்பட்ட நபர்களோடு தொடர்பில் இருந்திருக்க வேண்டும், அவர்களிடமிருந்து இவற்றுக்கும் தொற்று பரவியிருக்க வேண்டும் என்று நேரு உயிரியல் பூங்காவின் விலங்கு நல மருத்துவர்கள் கூறுகின்றனர். கோவிட் தொற்று சிங்கங்களைப் பாதித்தது ஒருபுறமிருக்க, இது மட்டுமன்றி, இன்னும் பல தொற்றுநோய்கள் ஆசிய சிங்கங்களின் இருப்புக்கே ஆபத்தாக இருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

ஆம், ஆசிய சிங்கங்கள் மற்றும் அவற்றின் வாழிடம், ஆப்பிரிக்காவில் வாழும் சிங்கங்கள் மற்றும் அவற்றின் வாழிடங்களைப் போல் பரவலாகவும் ஆரோக்கியமாகவும் இல்லை. இந்தியாவில் வாழும் சிங்கங்கள் மரபணுப் பற்றாக்குறையைச் சந்தித்து வருகின்றன.

கடந்த ஆண்டு மே மாதம் கோப்பன்ஹேகன் பல்கலைக்கழகம், பார்சிலோனா அறிவியல் & தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் சில அமைப்புகள் இணைந்து ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் முன்னர் வாழ்ந்து அழிந்து போன ஒரு வகை சிங்கம் குறித்து ஆய்வு செய்தார்கள். அந்த ஆய்வின் முடிவுகளை, இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் வாழும் இன்றைய சிங்கங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தனர். அதில், இந்திய சிங்கங்களின் உயிரணுக்கள், ஆண்மைக்குரிய ஹார்மோன் அளவு (Testosterone) ஆகியவற்றில் குறைபாடு இருப்பதைக் கண்டறிந்தனர். மேலும், ஆப்பிரிக்க சிங்கங்களைவிட, ஆசிய சிங்கங்களின் பிடரி மயிர் வளர்ச்சியும் குறைந்திருப்பது தெரியவந்தது.

கிர் காடு, குஜராத்
கிர் காடு, குஜராத்
முனைவர். ரவி செல்லம்

இதுபோன்ற குறைபாடுகள், ஆசிய சிங்கங்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியதோடு, அவற்றைப் பல்வேறு நோய்த் தாக்குதலுக்கும் பலியாக்குகின்றன. ஆசிய சிங்கம் என்று சொல்வதைவிட இந்திய சிங்கம் என்று சொல்வது சரியாக இருக்கும். ஏனெனில், இந்த வகை சிங்கங்கள், உலகிலேயே தற்போது இந்தியாவிலுள்ள கிர் காட்டில் மட்டும்தான் காட்டில் சுதந்திரமாக வாழ்கின்றன. மற்றபடி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வெளிநாடுகளிலும் இதை உயிரியல் பூங்காக்களில் பார்க்கலாம்.

கிர் காட்டில் வாழும் சிங்கங்கள் கடந்த நூற்றாண்டில் இருந்தே, வேறு எங்குமே செல்ல முடியாமல், ஒரே நிலப்பகுதிக்குள் சுருங்கிவிட்டன. இதன் விளைவாக, ஒரு குறிப்பிட்ட நிலத்துக்குள்ளேயே வாழும் அவை, அவற்றுக்குள்ளேயே இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதால், அடுத்தடுத்து பிறக்கக்கூடிய சிங்கங்கள் மரபணுப் பன்மை (Genetic Diversity) இன்றிப் பிறக்கின்றன. இதன்விளைவாக மேற்குறிப்பிட்டது போல், அவற்றுடைய உயிரணு உற்பத்தியில் குறைபாடு, ஹார்மோன் சுரப்பதில் குறைபாடு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இவற்றோடு சேர்த்து, மற்றுமோர் ஆபத்தாக, அவை தொற்றுநோய் தாக்குதல்களுக்கு எளிதில் பாதிக்கப்படுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமீபத்தில் இந்திய சிங்கங்களின் மீது அதிகளவிலான பாதிப்பை, கெனைன் டிஸ்டம்பர், பேபியோசிஸ் போன்ற வைரஸ் தொற்றுகள் உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன. மேலும் அவற்றைப் போலவே, ட்ரிகினோசிஸ், ஃபிளாரியாசிஸ், சர்கோப்டிக் மாஞ்ச், பென்டாஸ்டோமியாசிஸ், ரிக்கெட்ஸ், எகினோகொகோசிஸ் போன்ற பல நோய்கள் சிங்கங்களைப் பாதிக்கக்கூடும்.

2018-ம் ஆண்டு, கெனைன் டிஸ்டெம்பர் வைரஸ் தாக்குதலில் 30 சிங்கங்கள் உயிரிழந்தன. இந்த வைரஸ் தொற்றுகளைக் குணப்படுத்தும் வாய்ப்பு மிகவும் குறைவு. அதைக் குணப்படுத்த வேண்டுமெனில், இவற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு தொடர்ச்சியாகத் தடுப்பூசி போட வேண்டும். காட்டில் வாழும் சிங்கங்களிடம் அது சாத்தியமில்லை.

Asiatic lions
Asiatic lions
Manoj Dholakia

நாய்கள் மூலமாக இது அதிகம் பரவுவதால், காடுகளுக்குள் சுற்றித்திரியும் நாய்களுக்கு இந்தத் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டிருக்கிறது குஜராத் அரசு. கெனைன் டிஸ்டெம்பர் போன்ற வைரஸ் நோய் தாக்குதல், சிங்கங்களுக்குப் பெரிய அச்சுறுத்தலாக இருந்துவருகிறது. எளிதில் பரவக்கூடிய இந்த நோய், ஆசிய சிங்கங்களின் அழிவில் பெரும் பங்கு வகிக்கின்றன.

ஜூன் 2017 முதல் மே 2019 வரை மட்டுமே, இதுபோன்ற தொற்றுநோய்களுக்கு ஆளாகி குஜராத்தில் 199 சிங்கங்கள் உயிரிழந்தன என்று 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் குஜராத் சட்டசபையில் காங்கிரஸ் கட்சி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த வனத்துறை அமைச்சர் கண்பத் வசாவா கூறினார். இதுபோன்ற நோய்த் தொற்றுக்கு ஆளாகி அவை உயிரிழப்பது ஒவ்வோர் ஆண்டும் குஜராத்தில் வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது. அங்கு வாழும் சிங்கங்களுடைய எண்ணிக்கை எந்தளவுக்கு அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்கு அவற்றுக்கு ஏற்படும் நோய்த் தாக்குல்களும் அதிகரிக்கிறது. இதற்கு முதன்மையான காரணமாக காட்டுயிர் ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுவது, வாழிடப் பற்றாக்குறை.

கிர் தேசியப் பூங்காவின் பரப்பளவு 258 சதுர கிலோமீட்டர். அங்கு வாழும் சிங்கங்களில் மூன்றில் ஒரு பங்கு, தேசியப் பூங்கா எல்லைக்கு வெளியேயுள்ள நிலப்பகுதியில்தான் வாழ்கின்றன. 1,884 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள கிர் காட்டில் மாதாரி என்ற பழங்குடியின மக்களும் வசிக்கின்றனர். மேலும் தேசியப் பூங்காவாக உள்ள 258 ச.கி.மீ பரப்பளவு சிங்கங்களுக்குப் போதவில்லை. ஆகவே, அவை 1,884 ச.கி.மீ பரப்பளவு முழுக்கப் பரந்து வாழ்கின்றன. இருந்தாலும், இந்தக் குறிப்பிட்ட நிலப்பகுதியைத் தாண்டிய வாழிடம் இல்லாமல் போனதால் இதற்குள்ளேயே சுருங்கிவிட்டன.

Asiatic Lion
Asiatic Lion
Suresh Shetty

இந்நிலையில், அவற்றில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிங்கங்களை அவற்றுக்கேற்ற வாழிட அமைப்பு இருக்கக்கூடிய காட்டுக்கு இடம் மாற்ற வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் 2013-ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், குஜராத் அரசாங்கம் அதை இன்றுவரை நிறைவேற்றவில்லை.

இதனால், கிர் காட்டில் வாழும் சிங்கங்கள் மேன்மேலும் ஆபத்தான நிலையிலேயே இருந்துவருகின்றன. ஆசிய சிங்கங்கள் மொத்தத்தையும் ஒரே காட்டுக்குள் வைப்பதால், நாளையே மனித இனத்துக்கு ஏற்பட்ட தொற்றுப் பாதிப்பு போல் மிகப்பெரிய அளவில் கெனைன் டிஸ்டம்பர், பேபியோசிஸ் போன்ற தொற்றுப் பரவல் பெரியளவில் நிகழ்ந்தால், ஓர் இனமே மொத்தமாக அழிந்துவிடும். இதிலிருந்து காப்பாற்றவே, காட்டுயிர் ஆய்வாளர்களின் பல்வேறு முயற்சியால் 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இப்படி உத்தரவிட்டது.

ஆனால், 1993 முதலே ஆசிய சிங்கங்களுக்கு உரிய மற்றுமோர் வாழ்விடத்தை ஆய்வாளர்கள் தேர்ந்தெடுத்து வைத்துள்ளார்கள். மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள குனோ என்ற பகுதிதான் அவற்றுக்கான வாழிடமாக ஆய்வாளர்கள் தேர்ந்தெடுத்து வைத்துள்ள புதிய வாழ்விடம். 3,700 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான அந்தப் பகுதி சிங்கங்களுக்குச் சிறப்பான வாழிடமாக இருக்கும் என்று உறுதியளிக்கப்படுகிறது. ஆனால், கிர் சிங்கங்களில் ஒரு பகுதியை அங்கு அனுப்ப குஜராத் அரசு மறுக்கிறது.

Gir forest
Gir forest
Sujan Bandyopadhyay

இப்போது ஹைதராபாத்தில் உள்ள ஓர் உயிரியல் பூங்காவில் வாழும் சிங்கங்களிடையே கோவிட்-19 பரவியுள்ளது. இது கிர் காட்டைச் சுற்றி மக்கள் குடியிருப்புகளுக்கு அருகிலேயே வாழும் சிங்கங்களுக்கும் பரவலாம். ஒருவேளை அப்படிப் பரவினால், அது மற்ற சிங்கங்களுக்குப் பரவுவதைக் காட்டுக்குள் கட்டுப்படுத்த முடியாது.

அது பேராபத்தாக முடியும். அதிர்ஷ்டவசமாக, கோவிட்-19 பரவல் மனிதர்களிடமிருந்து சிங்கங்களுக்குப் பரவவில்லை என்றாலும்கூட, அவற்றிடையே பரவக்கூடிய மற்ற தொற்றுகள் பிரச்னையைப் பல மடங்கு அதிகரிப்பது உறுதி. நாம் நம்மிடையே இருக்கும் சிங்கங்கள் அனைத்தையும் ஒரே பக்கெட்டில் (கிர் காடு) போட்டு வைத்துள்ளோம். அதில் ஏதாவது ஒன்றுக்குத் தொற்றுநோய் பாதித்தாலும், குறைந்தபட்சம் 10 சிங்கங்களாவது அதனிடமிருந்து தொற்று பாதிப்பிற்கு ஆளாகும். உலகளவில் மிகக் குறைந்த எண்ணிக்கையோடு, அழிவின் விளிம்பில் தத்தளிக்கும் ஓர் உயிரினத்தை இப்படியோர் ஆபத்தில் சிக்க வைப்பதைவிடப் பெருங்கேடு வேறு எதுவுமில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு