Published:Updated:

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட லிசிப்ரியாவின் தந்தை; புகாரில் சொல்லப் பட்டிருப்பது என்ன?

கனர்ஜித் சிங்
கனர்ஜித் சிங்

கனர்ஜித் சிங் தற்போது இந்தக் குற்றச்சாடுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், லிசிப்ரியாவும் தன் தந்தையின் கைப்பாவையாகச் செயல்படுவதாகவும் சர்ச்சைகள் எழுகின்றன.

மே 31-ம் தேதியன்று, காலநிலை மாற்றதந்துக்கான குழந்தைப் போராளியாக அறியப்படும் லிசிப்ரியா கான்குஜத்தின் தந்தை கான்குஜம் கனர்ஜித் சிங், மணிபூர் காவல்துறை மற்றும் டெல்லி சிறப்புக் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மேலும், ஏற்கெனவே மோசடி வேலைகளுக்காக 2016-ம் ஆண்டும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

லிசிப்ரியா காலநிலை போராளியாகப் பலராலும் அறியப்படுவதற்கு முன்பாகவே, அவரின் தந்தை இதுபோன்ற மோசடி வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது, நேபாளத்தைச் சேர்ந்த ஒரு மாணவர், லிசிப்ரியாவின் தந்தையுடைய சர்வதேச இளைஞர் கமிட்டி என்ற அமைப்புக்கு பணம் கொடுத்து ஏமாந்துள்ளதாகக் கொடுத்துள்ள புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லிசிப்ரியா
லிசிப்ரியா
Twitter: @LicypriyaK

லிசிப்ரியா உட்பட கனர்ஜித் சிங் மற்றும் அவருடைய குடும்பத்தார் 2016-ம் ஆண்டிலிருந்து டெல்லியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ப்ரஜேஷ் கனால் என்ற நேபாள மாணவர் ஒருவர், 2018-ம் ஆண்டில் கனர்ஜித் சிங்கினுடைய அமைப்பு சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பணம் செலுத்தியதாகவும் அது முதலில் ஒத்தி வைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டு, பின்னர் நடக்கவே இல்லை என்றும், நடத்தாத நிகழ்வுக்காகத் தன்னிடம் பணம் வாங்கியுள்ளார் என்றும் புகாரில் தெரிவித்திருந்தார். பலமுறை, பணத்தைத் திரும்பத் தருமாறு கேட்டும் திருப்பிக் கொடுக்காததால், நேபாளத்தில் அமைந்திருக்கும் இந்திய தூதரகத்தில் 2020-ம் ஆண்டு அவர் புகார் கொடுத்துள்ளார்.

இந்த ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதியன்று, வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு வந்த இந்தப் புகார்மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி உள்துறை அமைச்சகத்திடம் அனுப்பப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கனர்ஜித் சிங் மீது நம்பிக்கைக்கு விரோதமாகச் செயல்படுதல், ஏமாற்றுதல், மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ``2018-ம் ஆண்டு நடத்தப் போவதாகச் சோல்லியிருந்த சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரூ.30,000 பணம் செலுத்தினேன். பிறகு, அந்த மாநாடு நடக்கவே இல்லை என்பதால் செலுத்திய பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டபோதுகூட, தரவில்லை. அதில் என்னைப் போல் பணம் செலுத்திய பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80 இளைஞர்களிடம் விசாரித்தபோது அவர்களும் இதேபோல் பல நிகழ்வுகளுக்குப் பணம் செலுத்தி இவரிடம் ஏமாந்துள்ளதாகச் சொன்னார்கள்" என்று ப்ரஜேஷ் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளார்.

கனர்ஜித் சிங் தற்போது இந்தக் குற்றச்சாடுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், லிசிப்ரியாவும் தன் தந்தையின் கைப்பாவையாகச் செயல்படுவதாகவும் சர்ச்சைகள் எழுகின்றன. தந்தையின் வழிகாட்டுதலில் இயங்கும் லிசிப்ரியாவைப் பயன்படுத்தி பலரிடமும் பண மோசடியில் கனர்ஜித் சிங் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம், `இந்தியாவின் க்ரெட்டா' என்று ஊடகங்கள் தன்னை அழைப்பதைக் குறிப்பிட்டு, ``என்னை அப்படி அழைக்காதீர்கள். எனக்கெனத் தனி பின்னணி உண்டு. க்ரெட்டாவுக்கு முன்பே குழந்தைகள் அமைப்பை (The Child's movement) ஒருங்கிணைத்து நடத்தி வருகிறோம். க்ரெட்டாவின் செயல்பாடுகள் எங்களுக்கு ஊக்கமளிக்கின்றன. ஆனால், எங்களைப் போன்ற குழந்தைப் போராளிகளுக்குத் தனித்தனி அடையாளங்கள் உண்டு" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு