Published:Updated:

மழைநீர் கடலில் கலப்பது என்பது வீண் அல்ல... ஏன் தெரியுமா?

கடல்
கடல் ( படம்: உ.பாண்டி )

``உலகின் பல கடல்கள் இறந்த கடல்களாகிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் உப்பும் ரசாயனங்களும் மட்டும்தான் இருக்கும்.''

''சென்னை மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய ஏரிகளிலிருந்து உபரி நீர் கடலில் கலப்பது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் உரத்தக்குரலில் விவாதம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். சென்னையில் இருக்கிற ஏரி, குளங்களைத் தூர்வாராததே காரணம் என்று அவர்கள் சொல்வது மிக மிகச் சரி. அதே நேரம், கடலில் மழைநீர் கலப்பதைப் பெரிய தவறுபோல சமூகம் பேசிக்கொண்டிருப்பது மிக மிக தவறு. கடலுடன் மழைநீர் கலக்கவேண்டும். அதுதான் நல்லது, சரியானதும்கூட'' என்கிற பேராசிரியர் ஜனகராஜன், கடலில் மழைநீர் கலக்கவில்லையென்றால் சமூகம் என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி வரும் என்பதையும் சொல்கிறார்.

மழை நீர்
மழை நீர்

''அந்தக் காலத்தில் எல்லா ஆறுகளும் கடலில் சென்று கலந்தன. இப்போது எத்தனை ஆறுகள் கடலுடன் சென்று கலக்கின்றன. போதுமான அளவு மழை நீர் கடலுடன் கலக்கவில்லையென்றால், கடல் நீர் இன்னமும் அதிக உப்புத்தன்மையாக மாறும்.

இன்றைக்கு உலகம் முழுக்க கடல் நீரை குடிநீராக்கும் பிளான்ட்ஸ் இருக்கின்றன. கடல் நீரை உறிஞ்சி எடுத்து குடிநீரைப் பிரித்து எடுத்துக்கொண்டு, மற்ற நீரை மறுபடியும் கடலில் விட்டு விடுவார்கள். இந்த நீர் வழக்கமான கடல் நீரைவிட அதிகப்படியான உப்புக்கரிப்புடன் இருக்கும். இதனால், கடல் நீரின் தன்மை அதிகமான உப்புத்தன்மையுடன் மாறும். இதன் விளைவு என்னவாகும் தெரியுமா?

அந்தக் கடலானது இறந்த கடலாக (Dead Sea) மாற ஆரம்பிக்கும். உலகின் பல கடல்கள் இறந்த கடல்களாகிக்கொண்டிருக்கின்றன. இவற்றில் உப்பும் ரசாயனங்களும் மட்டும்தான் இருக்கும். இந்தக் கடல்கள் உயிர்கள் வாழத் தகுதியற்றவை. கடலில் எந்தளவுக்கு உப்பு அதிகமாகிறதோ அந்த அளவுக்கு, கடலுக்கும் மேகங்களுக்கும் இடையேயான நீர் சுழற்சி பாதிக்கப்படும். இதனால், வருங்காலங்களில் மழையே பொழியாமல் போகலாம்.

ஜனகராஜன்
ஜனகராஜன்

கடல் நீரைக் குடிநீராக்கும் நெம்மேலி பிளான்ட்ஸில் இருந்து, சென்னைக்கு நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் குடிநீர் தருவதாகச் சொல்கிறார்கள். 3,000 கோடி அல்லது 4,000 கோடி கடல் நீரைச் சுத்திகரித்தால்தான், 10 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும். இவ்வளவு கடல் நீரை உறிஞ்சியெடுக்கும்போது, அதனுடன் கடலில் வாழ்கிற மீன்கள், அதன் முட்டைகள் என எல்லாமும் வரும். இதனால், எவ்வளவு கடல் வாழ் உயிரினங்கள் அழிந்துபோகும் என்பதை யோசித்துப் பாருங்கள். கூடவே, கடலை நம்பியிருக்கின்ற லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் யோசித்துப் பார்க்கவேண்டும்.

இதற்கு பதில், ஏரி, குளங்களைச் சரியாகத் தூர்வாரி மழை நீரைச் சேமிக்கவேண்டும். இதன்மூலம் நிலத்தடி நீரும் அதிகரிக்கும். குறிப்பாக, மழைக்காலங்களில் வெள்ளம் வராது. அங்கங்கே தேங்கி நின்று மழை நீர் வீணாகவும் செய்யாது. கூவம் வழியாக கடலில் கலக்கிற தண்ணீர் என்பது ஒன்றுமே கிடையாது. சமீப காலமாக நிலத்தில் பெய்வதைவிடக் கடல் மேல் அதிக மழை பொழிந்து வருகிறது. அதனால்தான், நாமெல்லாம் தப்பித்துக்கொண்டிருக்கிறோம்'' என்று சொல்லி முடித்தார் ஜனகராஜன்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு