Published:Updated:

ஜெர்மனி முதல் ராஜஸ்தான் வரை; 6,400 கி.மீ தூரம் பயணிக்கும் செங்கால் நாரைகள்; எதற்குத் தெரியுமா?

செங்கால் நாரைகள் ( Photo: வினோத் குமார் )

பறவை சூழ் உலகு - 8 நம்மூர் மஞ்சமூக்கு நாரைகளை வெளிநாட்டுப் பறவைகள் என்று எழுதுகிறார்கள்.

ஜெர்மனி முதல் ராஜஸ்தான் வரை; 6,400 கி.மீ தூரம் பயணிக்கும் செங்கால் நாரைகள்; எதற்குத் தெரியுமா?

பறவை சூழ் உலகு - 8 நம்மூர் மஞ்சமூக்கு நாரைகளை வெளிநாட்டுப் பறவைகள் என்று எழுதுகிறார்கள்.

Published:Updated:
செங்கால் நாரைகள் ( Photo: வினோத் குமார் )

கடந்த மூன்று வாரங்களாக நாரைகள் குறித்து பார்த்து வருகிறோம். இன்று நாம் காண இருக்கும் பறவை `செங்கால் நாரை'. ஆங்கிலத்தில் இதை `European White Stork' என்றழைப்பார்கள். இதனுடைய அறிவியல் பெயர் `சிகோனியா' என்பதாகும். நீண்ட கால்கள் மற்றும் கழுத்தைக் கொண்ட பறவை, தோற்றத்தில் கொக்கைப் போன்று தெரியும். இந்தப் பறவையின் உடல் அமைப்பு வெண்மை நிறமாகவும், இறக்கைகள் கறுப்பாகவும் இருக்கும். கூர்மையான அலகு மற்றும் கால்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். தனித்து, இணையாக அல்லது சிறு கூட்டமாக இவற்றைக் காணலாம். சதுப்பு நிலங்கள், புல்வெளிகளில் இரை தேடிக்கொண்டிருக்கும்.

திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியில் காணப்பட்ட செங்கால் நாரைகள்
திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியில் காணப்பட்ட செங்கால் நாரைகள்
Photo: வினோத் குமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தவளைகள், பல்லிகள், பெரிய பூச்சிகள், மீன்கள் போன்றவற்றை உண்ணும். மேற்கு ஆசியா மற்றும் மத்திய ஐரோப்பா பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யும். குளிர் காலங்களில் நமது இந்தியப் பகுதிகளுக்கு வலசை வருகின்ற பறவையாக இது இருக்கிறது. பறவைகளின் வலசை குறித்து அறிய பறவைகளைப் பிடித்து அதன் கால்களில் வளையமிடுதல் மற்றும் கழுத்தில் பட்டை அணிவிக்கும் முறை பின்பற்றப்படுகிறது. இந்த வளையங்கள் மற்றும் பட்டைகளில் எழுத்துகள் மற்றும் எண்கள் அடங்கிய குறியீடுகள் இருக்கும். பறவை ஆராய்ச்சியாளர்கள் அந்தக் குறியீடுகளை வைத்து எந்தப் பகுதியில் மற்றும் எந்த நேரத்தில் அந்தப் பறவைக்கு வளையமிடப்பட்டது என்பதைத் தங்களுக்குள் தொடர்புகொண்டு உறுதி செய்துகொள்வார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தற்காலத்தில் செயற்கைகோள்கள் உதவியுடன் இயங்கக்கூடிய மிகச்சிறிய தானியங்கி பட்டைகளும் பறவைகளின் வலசைக் குறித்து அறிய ஆராய்ச்சியாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் தானியங்கி பட்டைகள் மூலம் நிகழ் நேரத்தில் அந்தப் பறவை இருக்குமிடத்தை அறிய முடியும். செங்கால் நாரை நெடுந்தொலைவு வலசை செல்கின்ற பறவையாக அறியப்படுகிறது. 1930 ஜுன் மாதத்தில் ஜெர்மனி நாட்டின் பிரன்சுவிக் நகரத்தில் வளையமிடப்பட்ட செங்கால் நாரை அதே வருடம் டிசம்பர் மாதத்தில் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பிக்கனேர் நகரத்தில் காணப்பட்டுள்ளது, பிரன்சுவிக்கிலிருந்து கிட்டத்தட்ட 6,400 கி.மீ. தொலைவு கடந்து பிக்கனெர் நகரத்துக்கு இப்பறவை வந்துள்ளதை இதன் மூலம் அறிய முடிகிறது.

திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியில் காணப்பட்ட செங்கால் நாரைகள்
திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியில் காணப்பட்ட செங்கால் நாரைகள்
Photo: வினோத் குமார்

பறவைகளின் வலசை குறித்து அறிவதில் பறவைகளுக்கு வளையமிடுதல், பட்டையிடுதல், தானியங்கி பட்டைகள் போன்ற முறைகளைப் பின்பற்றி தெரிவதற்கு முன்னரே நம் பழந்தமிழர்கள் பறவைகளின் வலசை குறித்து அறிந்து வைத்துள்ளது மட்டுமல்லாது, அதைப் பதிவும் செய்துள்ளது நமக்கு பெருமை சேர்க்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த சத்திமுத்தப் புலவர் தன்னுடைய வறுமை நிலையைத் தன் மனைவிக்கு தெரிவிப்பதற்காக கீழ்க்கண்ட நாரைவிடு தூது பாடலை எழுதியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`நாராய் நாராய் செங்கால் நாராய்

பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்

நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி

வடதிசைக் கேகுவீ ராயின்

எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி

நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி

பாடுபார்த் திருக்குமென் மனைவியைக் கண்டு

எங்கோன் மாறன் வழுதி கூடலில்

ஆடை யின்றி வாடையின் மெலிந்து

கையது கொண்டு மெய்யது பொத்திக்

காலது கொண்டு மேலது தழீஇப்

பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்

ஏழை யாளனைக் கண்டனம் எனுமே...'

மேற்கண்ட பாடலில் சத்திமுத்தப் புலவர் சொல்லியுள்ள பறவை செங்கால் நாரை, `பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய்ச் செங்கால் நாரை' செங்கால் நாரையின் அழகை பனை கிழங்கோடு ஒப்பிடுகிறார். அதன் கூர்மையான அழகு பவள நிறம் என்பதையும் சொல்கிறார். அதோடு மட்டுமல்லாமல் 'நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி வடதிசைக் கேகுவீராயின்' என்ற வரிகளில் செங்கால் நாரையின் வலசை குறித்து பதிவு செய்துள்ளார், இதன் மூலம் சத்திமுத்தப் புலவர் எந்த அளவுக்கு இந்த பறவையைக் கவனித்துள்ளார் என்பதை அறிய முடிகிறது.

ஆனால், தற்போது நம் தமிழர்கள் நம்மோடு பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நம்மூர்ப் பறவையான வெண் கூகையை ஆஸ்திரேலிய ஆந்தை தூத்துக்குடியில், திருவண்ணாமலையில், விழுப்புரத்தில் பிடிபட்டது என்று செய்தித்தாள்களில் எழுதுகிறார்கள். நம்மூர் மஞ்சமூக்கு நாரைகளை வெளிநாட்டுப் பறவைகள் என்று எழுதுகிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியில் காணப்பட்ட செங்கால் நாரைகள்
திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியில் காணப்பட்ட செங்கால் நாரைகள்
photo: சக்தி மாணிக்கம்

இதிலிருந்து நாம் எந்த அளவுக்கு பறவைகளிலிருந்து விலகி வந்துள்ளோம் என்பதை உணர முடிகிறது. உங்கள் ஊர் பக்கத்திலுள்ள குளங்களுக்கோ, காடுகளுக்கோ ஏன் உங்கள் புறவாசல் தோட்டத்துக்கோ சென்று அங்குள்ள பறவைகளை உற்று நோக்கத் தொடங்குங்கள். அது குறித்து அறிய முற்படுங்கள்; அது உங்களுக்கு ஒரு புதிய வெளிச்சத்தை, புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

- வளரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism