வனப்பகுதிகள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி படையெடுக்கும் வனவிலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. வனத்தையொட்டிய குடியிருப்புப் பகுதிகளில் சேகாரமாகும் உணவு, காய்கறி மற்றும் பழக் கழிவுகளால் கவரப்படும் கரடி, காட்டுப்பன்றி, யானை போன்ற வன விலங்குகள் இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிகளிக்கு வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதனால் இவற்றின் உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படுவதோடு மனித வனவிலங்கு எதிர்கொள்ளல்களும் அதிகரித்து வருகின்றன. உணவுக்கழிவுகளை வனவிலங்குகள் உண்ணாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சூழலியல் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், முதுமலை புலிகள் காப்பகம் அருகில் உள்ள மசினகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஒரு குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத இரவு நேரத்தில் அந்தக் குப்பைத் தொட்டியைத் தேடி வரும் ஆண் காட்டுயானை ஒன்று தும்பிக்கையைக் குப்பைத் தொட்டிக்குள் விட்டு துழாவி அதில் இருக்கும் கழிவுகளை எடுத்து உண்ணுகிறது. இதைப் பார்த்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், ``நமது அலட்சியத்தால் கம்பீரமான யானையைக் குப்பைத் தொட்டியில் உணவு தேடும் நிலைமைக்கு ஆளாக்கி இருக்கிறோம்" எனச் சூழலியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்த வேதனை வீடியோ குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை அதிகாரி ஒருவர், ``நீலகிரி மாவட்டத்தில் வனங்களையொட்டிய குடியிருப்புப் பகுதிகளில் உள்ள குப்பைத் தொட்டிகளில் சேகரமாகும் குப்பைகளை அன்றைய தினம் மாலைக்குள் அகற்றவும், திறந்தவெளிகளில் குப்பைகளைக் கொட்டுவதைத் தவிர்க்கவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம். விரைவில் இதற்குத் தீர்வு காணப்படும்" என்றார்.