Election bannerElection banner
Published:Updated:

பந்திப்பூரில் ரஜினியுடன் மேன் வெர்சஸ் வைல்டு... காட்டுக்குள் என்ன நடந்தது?!

பேர்ல் கிரில்ஸ் மற்றும் ரஜினிகாந்த்
பேர்ல் கிரில்ஸ் மற்றும் ரஜினிகாந்த்

மொத்தம் 874 சதுர கிலோ மீட்டர் பரப்புடைய பந்திப்பூர் புலிகள் காப்பகம், தமிழகத்தின் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய வனப்பகுதியாக அமைந்துள்ளது. இங்குதான் ரஜினியை வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகிவரும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்கு, 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் மிகப்பெரிய ரசிகர் வட்டம் இருக்கிறது. உலகின் அபாயகரமான வனப்பகுதிகள், துருவப்பிரதேசங்கள், கடல் பகுதிகள், தீவுகள் எனப் பல இடங்களிலும் உள்ள கடுமையான சூழலில், எப்படி தங்களைத் தற்காத்துக்கொள்வது என்பதை வன சாகச வீரர் பியர் கிரில்ஸ் தன்னுடைய அனுபவத்தில் நேரடியாக உணர்த்தும் இந்த நிகழ்ச்சிக்குப் பெரும் வரவேற்பு இருப்பதைப் போல எதிர்ப்பும் இருக்கிறது.

பியர் கிரில்ஸ், தன்னுடன் பிரபலங்களையும் இணைத்துக்கொண்டு சாகசப்பயணத்தை மேற்கொள்ளும் நிகழ்ச்சி, ஆண்டுக்கு ஓரிரு முறை ஒளிபரப்பாகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இதில் பங்கேற்றிருக்கிறார். அதேபோன்று, கடந்த ஆண்டில் உத்தரப்பிரதேசத்தின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில், பிரதமர் மோடியும் பியர் கிரில்ஸ் உடன் சாகசப்பயணம் மேற்கொண்டார். அந்த எபிசோடுக்கு நாடு முழுவதும் மகத்தான வரவேற்பு கிடைத்தது. விமர்சனங்களையும் சந்தித்தது.

பந்திப்பூர் புலிகள் காப்பகத்தை காட்டும் வரைபடம்
பந்திப்பூர் புலிகள் காப்பகத்தை காட்டும் வரைபடம்

மோடிக்கு அடுத்ததாக, இந்தியாவின் இரண்டாவது பிரபலமாக நடிகர் ரஜினிகாந்த்தைத் தேர்ந்தெடுத்து, பியர் கிரில்ஸ் உடன் காட்டுக்குள் பயணிக்கவைக்கும் எபிசோடு ஒன்றைத் தயாரிக்க டிஸ்கவரி சேனல் திட்டமிட்டுள்ளது. ரஜினியுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்புதல் பெற்றபின், இந்தியாவிலுள்ள பல்வேறு வனப்பகுதிகளில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்தும் விவாதம் நடந்துள்ளது. இறுதியில், ரஜினியே கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தைத் தேர்ந்தெடுத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஜனவரி 27 –ம் தேதியிலிருந்து 30 வரையிலான நாள்களுக்குள், மூன்று நாள்களுக்கு காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிக்குள் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதலுடன் கர்நாடகா வனத்துறையின் தலைமை வன உயிரினக்காப்பாளர் சஞ்சய் மோகன் இதற்கான அனுமதியை வழங்கியிருக்கிறார். மும்பையைச் சேர்ந்த Banijay Group Seventaurrus Entertainment Studio Private Limited என்ற நிறுவனம் இந்த எபிசோடைத் தயாரிப்பதால் அந்த நிறுவனத்தின் பெயரில்தான் அனுமதி தரப்பட்டுள்ளது.

மரங்கள், தாவரங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடாது, வனஉயிரினங்களுக்கு எந்தத் தொந்தரவும் செய்யக்கூடாது, வெடிபொருள்களைப் பயன்படுத்தக்கூடாது, இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த அனுமதி தரப்பட்டுள்ளது. இருப்பினும் கர்நாடகா வனத்துறை தந்துள்ள இந்த அனுமதிக்கு கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய இரு மாநிலங்களிலும் உள்ள சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பந்திப்பூரின் முக்கியத்துவம் என்ன?

பந்திப்பூர் புலிகள் காப்பகம், மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள முக்கியமான வனப்பகுதியாகும். உலகின் பாரம்பர்ய வனமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட நீலகிரி பல்லுயிர்க் காப்பகத்தின் (Nilgiri Biosphere Reserve) ஒரு பகுதியாக இந்த வனப்பகுதி அமைந்துள்ளது. உலகிலேயே சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த 23 இடங்களில் ஒன்றாக உள்ள நீலகிரி பல்லுயிர் காப்பகத்தில், தமிழகத்தின் முதுமலை புலிகள் காப்பகம், கேரளாவின் வயநாடு தேசியப் பூங்கா, சைலண்ட் வேலி தேசியப் பூங்கா, கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகம் மற்றும் நாகர்ஹோலே தேசியப் பூங்கா உள்ளிட்ட 5500 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள வனப்பகுதிகள் அடங்கியுள்ளன. மொத்தம் 874 சதுர கிலோ மீட்டர் பரப்பை உடைய பந்திப்பூர் புலிகள் காப்பகம், தமிழகத்தின் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய வனப்பகுதியாக அமைந்துள்ளது. சோலைக்காடுகள், புல்வெளிகள், மூங்கில் காடுகள், வளர்ப்பு மரங்கள் எனப் பன்முகத் தன்மையுள்ள இந்த வனம், கர்நாடகா, தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் பாயும் பல்வேறு நதிகளுக்குமான தாய்மடியாக இருக்கிறது.

பந்திப்பூர் சரணாலயம்
பந்திப்பூர் சரணாலயம்

தமிழக–கர்நாடகா எல்லையான கக்கநல்லாவிற்கு மிக அருகிலேயே இந்தப் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. கடைசியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் 140 புலிகள் இருப்பதாக கர்நாடகா வனத்துறை தெரிவித்துள்ளது. ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழ்விடமாகவும் இந்தக் காப்பகம் அமைந்திருக்கிறது. இவற்றைத் தவிர்த்து, சிறுத்தை, புள்ளிமான், கடமான், வெளிமான்கள், காட்டுமாடு, கரடி உள்ளிட்ட ஏராளமான காட்டுயிர்கள் மற்றும் பலவிதமான பறவைகளும் இங்கு வாழ்கின்றன. பல அரிய வகைத் தாவரங்களும் உள்ளன.

சூழல் சுற்றுலாவுக்கு அனுமதி இல்லாத இடத்தில்கூட படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.
கர்நாடக மாநில முன்னாள் தலைமை வனப் பாதுகாவலர்

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில்தான், ரஜினிக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வனத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவே, ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சி எடுக்கப்படுவதாகக் காரணம் கூறப்பட்டாலும், புலிகள் காப்பகத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதிப்பது இதுவே முதல் முறை என்ற வகையில், இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. கர்நாடகா வனத்துறையின் முன்னாள் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் பி.கே.சிங் இதுகுறித்து தனது எதிர்ப்பைக் கடுமையாகப் பதிவுசெய்துள்ளார்.

‘‘படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ள மூலஹோலே மற்றும் கல்கேர் ஆகிய வனச்சரகங்களில், சூழல் சுற்றுலாவிற்கு வரும் பயணிகளே அனுமதிக்கப்படுவதில்லை. அத்தகைய இடத்தில் படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி அளித்திருப்பது மிகவும் வருத்தம் தரக்கூடியது’’ என்று கூறியுள்ளார்.

சூழல் ஆர்வலர்கள் இதனை எதிர்ப்பதற்கு முக்கியக் காரணமும் உள்ளது. நீலகிரி பல்லுயிர்ப் பெருக்கத்தில் உள்ள மற்ற வனப்பகுதிகளை ஒப்பிடுகையில், காட்டுத்தீயால் அதிகமாக பாதிக்கப்பட்ட வனப்பகுதி, பந்திப்பூர் புலிகள் காப்பகம்தான். கடந்த ஆண்டில், இதே காலகட்டத்தில்தான் 4800 ஹெக்டேர் (11,860 ஏக்கர்) பரப்பிலான வனப்பகுதி, காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டில் நடந்த காட்டுத்தீயில் வனக்காவலர் ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். 2013–ம் ஆண்டிலும் காட்டுத்தீ பாதிப்பு மிக அதிகம். ஒட்டுமொத்தமாக, இந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 8000 ஹெக்டேர் (19768 ஏக்கர்) பரப்பளவிலான வனப்பகுதிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இந்த வனப்பகுதி, முழுமையாகத் தன் நிலையை அடைவதற்கு இன்னும் 20-லிருந்து 30 ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள் அங்குள்ள சூழல் ஆர்வலர்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதித்ததே எதிர்ப்பாகியுள்ளது.

வனத்துறை ஊழியர்களுடன் ரஜினி.
வனத்துறை ஊழியர்களுடன் ரஜினி.

மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பின்பே கர்நாடகா வனத்துறை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. அதனால் மத்திய, மாநில அரசுகளின் நெருக்கடி காரணமாகவே வனத்துறை இந்த அனுமதியை வழங்கியிருப்பதாகவும் சூழல் ஆர்வலர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். கர்நாடகாவிலுள்ள சூழல் அமைப்புகளின் கூட்டமைப்பான ஐக்கிய பாதுகாப்பு இயக்கம் (United Conservation Movement) சார்பில், கர்நாடகா வனத்துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலரிடம் மனுவும் தரப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் பந்திப்பூர் வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீ.
கடந்த ஆண்டில் பந்திப்பூர் வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீ.

இதுதொடர்பாக பெங்களூருவைச் சேர்ந்த சூழல் செயற்பாட்டாளரும் கானுயிர் புகைப்படக்கலைஞருமான உல்லாஷ் நம்மிடம் பேசுகையில், ‘பருவமழைக்காலம் முடிந்த பின்பு இந்தப் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்திருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. கோடையின் தொடக்க காலத்தில்தான் காட்டுத்தீ அபாயம் அதிகமாக இருக்கும். இப்போதே பந்திப்பூர் வனப்பகுதியின் பல இடங்களில் கடும் வறட்சி காணப்படுகிறது. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் பரப்பில் காட்டுத்தீ பரவி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்தத் தீயை அணைப்பதற்காக வனத்துறையினர் பட்டபாடு கொஞ்சமில்லை.

ஆனால், எதைப்பற்றியும் துளியும் கவலைப்படாமல் இந்த படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் ரஜினியின் மீது எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. அவருக்கு இந்த வனத்தைப் பற்றியும், இதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் எதுவும் தெரிய வாய்ப்பில்லை. அனுமதி தந்த அரசுக்கே இதைப்பற்றி கவலையில்லை என்பதுதான் வேதனை. படப்பிடிப்புக்காக உள்ளே செல்லும் குழுவினரால் லேசான காட்டுத் தீ ஏற்பட்டாலும், தற்போதுள்ள சூழ்நிலையில் அதைக் கட்டுப்படுத்துவது சாத்தியமேயில்லை. அதனால், எந்த விபரீதமும் நடக்காமல் படப்பிடிப்பு முடிய வேண்டுமென்று இயற்கையை வேண்டுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. அப்படி ஏதாவது ஏற்பட்டால், அதற்கு வனத்துறை அதிகாரிகள்தான் பொறுப்பு!’’ என்றார்.

உல்லாஷ், கானுயிர் புகைப்படக்கலைஞர்.
உல்லாஷ், கானுயிர் புகைப்படக்கலைஞர்.

மைசூரிலிருந்து சாலை வழியாக பந்திப்பூர் சென்றிருக்கிறார் ரஜினி. அவருடன் அவரது மகள் ஐஷ்வர்யாவும் சென்றுள்ளார். பந்திப்பூரிலிருந்து படப்பிடிப்புக் குழுவினருடன் மூலஹோலே பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கர்நாடகா வனத்துறை உயரதிகாரிகளைத் தவிர, ரேஞ்சர் அளவிலான அதிகாரிகளுக்குக் கூட, ரஜினியின் படப்பிடிப்பு நடக்கும் பகுதிகள் பற்றித் தெரியவில்லை என்கின்றனர் அங்குள்ள வனத்துறையினர். மொத்தம் ஏழு இடங்களைத் தேர்வுசெய்து, அதில் ஓரிடத்தில்தான் படப்பிடிப்பு நடந்தது என்ற தகவலையும் அவர்கள் தெரிவித்தனர். இரண்டு நாள்கள் படப்பிடிப்பு என்று தகவல் பரவியுள்ள நிலையில், ஒரே நாளில் படப்பிடிப்பை ரஜினி முடித்துக் கொண்டதாகத் தெரிகிறது.

கடந்த ஆண்டில் பந்திப்பூர் வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீ
கடந்த ஆண்டில் பந்திப்பூர் வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீ

நேற்று, அதே பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், அதே படக்குழுவினருடன் அக்ஷய் குமார் இணைந்து வன சாகசப்பயணம் மேற்கொண்ட படப்பிடிப்பு நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினிக்கு காயம் ஏற்பட்டது என்ற தகவலை அவரே மறுத்துவிட்டார். ஆனால், இந்தப் படப்பிடிப்பால் பந்திப்பூர் புலிகள் காப்பக வனப்பகுதிக்கு எந்தக் காயமும் ஏற்படக்கூடாது என்பதுதான் இயற்கை ஆர்வலர்களின் விருப்பமும் வேண்டுகோளும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு