Published:Updated:

`பாராட்டுதான் எங்களை ஓடவைக்குது!' - தஞ்சை கலெக்டர் அலுவலகத்தைச் சோலைவனமாக்கிய பெண்கள் நெகிழ்ச்சி

வளர்க்கப்படும் மரங்கள்
வளர்க்கப்படும் மரங்கள் ( ம.அரவிந்த் )

தஞ்சாவூர் புதிய கலெக்டர் அலுவலகத்தில் மரம் வளர்த்து வரும் பெண்களை சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நூறு நாள் திட்டத்தின் மூலம் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வைத்து வளர்த்து அந்த இடத்தையே சோலைவனமாக மாற்றி வரும் பெண்களை சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாரட்டி வருகின்றனர்.

மரம் வளர்க்கும் பெண்கள்
மரம் வளர்க்கும் பெண்கள்
ம.அரவிந்த்

தஞ்சாவூர் திருச்சி சாலையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அருகே அமைந்துள்ளது ஒருங்கிணைந்த தஞ்சாவூர் புதிய கலெக்டர் அலுவலகம். இந்த வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வளர்க்கப்பட்டு வருகிறது. சுமார் ஐந்து வருடத்திற்கு முன் கட்டாந்தரையாக இருந்த இந்த இடத்தில் வைக்கப்பட்ட மரக்கன்றுகள் வளர தொடங்கி இன்றைக்கு சோலைவனமாக மாறி நிற்கிறது.

ஏக்கம், எதிர்பார்ப்பு, பூரிப்பு, சோகம், கவலை, பரிதவிப்பு, மகிழ்ச்சி எனப் பல வித உணர்வுகளோடு மக்கள் இங்கு வருகின்றனர். அவர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள நிழல் தந்து உதவுகிறது இங்குள்ள மரக் கன்றுகளும், மரங்களும். எப்போதும் பரபரப்பாக இருக்கும் அந்த வளாகத்தில் எந்தப் பரப்பும் இல்லாமல் 16 பெண்கள் அந்த மரக்கன்றுகளை தங்கள் பிள்ளைகள்போல் நினைத்து தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகின்றனர்.

தண்ணீர் ஊற்றும் பெண்கள்
தண்ணீர் ஊற்றும் பெண்கள்

``மா, பலா, பாதாம், புங்கை, வேம்பு, பூவரசு எனப் பல வகைகளில் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வைத்து வளர்த்தோம். அதனுடன் தனியாக கொய்யா, சப்போட்டா, மாதுளை, சீதா,எலுமிச்சை போன்ற பழக்கன்றுகளும் வைத்து பழத்தோட்டமும் உருவாக்கி வருகிறோம். எங்களைப் பொறுத்த வரை செய்யுற வேலைக்குச் சம்பளம் வாங்கினாலும், இதை ஒரு சேவையாக நினைச்சுதான் செய்யுறோம். பிள்ளை வளர்ப்பது போல் மரங்களை வளர்த்து விட்டோம்.

மரம்
மரம்

எத்தனையோ இடங்களில் நூறு நாள் வேலை திட்டத்தில் பெயரளவில் மட்டுமே மரக்கன்றுகள் ஊன்றப்படுகிறது. அவை பராமரிக்கபடுவது இல்லை. ஆனால் வரும் கால தலைமுறைக்கு நம்மால் முடிந்த உதவியாக நினைத்து இதைச் செய்து வருகிறோம். எங்களை யாரும், `ஏன் தண்ணீர் ஊற்றவில்லை' எனக் கேட்டதும் இல்லை. `இவ்வளவு மரங்களை உருவாக்கியிருக்கிறீர்களே' எனப் பாராட்டியதும் இல்லை. இரண்டு அடி உயரத்தில் ஊன்றிய மரக்கன்று இன்றைக்கு பத்தடிக்கு மேல் வளர்ந்து நிக்குது. இதைப் பார்க்குறப்ப மனசு நிறைஞ்சு இருக்கு தம்பி'' என்றார் ஒரு பெண்மனி.

ஏலம்பாள் என்பவரிடம் பேசினோம். ``எனக்கு 70 வயசு ஆகுது. காலையில் 9 மணிக்கு எல்லோருடனும் சேர்ந்து பொடி நடையா நடந்து ஒரு நாள் தவறாம இங்க வந்துருவேன். அதன் பிறகு ஒரு மரம் விடாம தண்ணீர் ஊற்ற ஆரம்பிப்பேன். பிள்ளைகளுக்கு வயிறு நிறையுற மாதிரி இந்தக் கன்றுகள் செழிப்பாகுற வரை அலுப்பு பாக்காம நிறைய தண்ணி ஊற்றுவேன். மதியம் இரண்டு மணிக்குத்தான் இந்த வேலை முடியும். எங்கூட இங்கு வேலை பார்க்க வருபவர்கள் எல்லாமே வயசானவங்கதான்.

ஏலம்பாள்
ஏலம்பாள்

5 வருஷமா இங்கு வந்துகிட்டு இருக்கோம் இதுவரை கலெக்டர் சாரை பார்த்ததும் இல்லை. எந்த உதவியும் கேட்டதும் இல்லை. நாங்க எங்க ஊர்ல இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்துதான் வருவோம். எங்களை அழைத்து வரவும் கொண்டு விடுவதற்கும் ஒரு வாகனம் ஏற்பாடு செஞ்சு கொடுத்தா பெரிய உதவியாக இருக்கும். கன்றாக வைத்தது இன்னைக்கு எங்க கண் முன்னாலேயே வளர்ந்து நிக்குது. இதைப் பார்ப்பதற்கு சந்தோஷமா இருக்கு. இன்னும் இதை உயரமாக வளர்க்க வேண்டும். சில பேர் எங்களை மனதார பாராட்டுவாங்க. அதுதான் இந்த வயசானவளையும் ஓட வைக்குது'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு