Published:Updated:

`காலம் முழுக்க நாம் தேனீக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கோம்; ஏன்னா?' - தேனீக்கள் தின பகிர்வு

தேனீக்களோட வாழ்க்கைமுறையைப் பார்த்தா, `நாங்கள்லாம் ஆறறிவு படைச்சவங்கப்பா...'னு சொல்லிக்கிறதுக்கே நாம யோசிப்போம். ஒரு கூட்டிலிருக்குற ஆயிரக்கணக்கான தேனீக்கள்ல ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு குழுவை அமைச்சு, மனுஷனைவிட அபாரமா செயல்படுதுங்க.

உலகில் தேனீக்கள் இல்லாமல் போனால் உயிரினங்களின் சூழலியல் சுழற்சி கடுமையாக பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக மனித குலமே அழிய வாய்ப்புண்டு என்று ஒரு ஆய்வு கூறுகிறது. அப்படிப்பட்ட தேனீக்களின் மகத்துவத்தைப் உலகரியச் செய்யும் விதமாகவும் ஆண்டுதோறும் மே 20-ம் தேதி உலக தேனீக்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. மனிதனுக்கு எல்லா வகையிலும் முன்னோடியாக இருப்பது தேனீக்கள்தான் என்றால் நம்ப முடிகிறதா.. நம்பமுடியவில்லை என்றாலும் அதான் நிஜம்.. அந்த நிஜத்தின் தொகுப்பு இதோ...

``சதுரமான ஓர் அறையைவிட, அறுங்கோண வடிவமுள்ள அறையில்தான் அதிக இடவசதியிருக்கும்கறதால, அந்த வகையான அறைகளைப் பல விஷயங்களுக்கு மனுஷன் பயன்படுத்துறான். இதை அவனுக்குச் சொன்னதே, தேனீக்கள் தான். தேன்கூட்டைக் கவனிச்சுப் பார்த்தீங்கன்னா அறுங்கோண வடிவ அறைகளா இருக்கும். அதுலதான் தேனை சேமிச்சு வைக்குது தேனீக்கள். நாகரிகத்துக்கு நாமதான் சொந்தக் காரங்கன்னு சொல்லிகிட்டு அடிதடி, ஜாதி, மத சண்டை, வன்முறையை வளர்த்துகிட்டிருக்கோம். இன்னிக்கும் கூட்டு வாழ்க்கை முறையைச் சரியா கடைப்பிடிக்குறது பூச்சிகள் மட்டும்தான். எறும்பு, கறையான், தேனீ, குளவினு கூட்டம் கூட்டமா உண்டு, உறங்கிக் காலத்தைக் கழிக்குதுங்க அந்தப் பூச்சிகளெல்லாம்.

தேனீக்களோட வாழ்க்கைமுறையைப் பார்த்தா, `நாங்கள்லாம் ஆறறிவு படைச்சவங்கப்பா...'னு சொல்லிக்கிறதுக்கே நாம யோசிப்போம். ஒரு கூட்டிலிருக்குற ஆயிரக்கணக்கான தேனீக்கள்ல ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு குழுவை அமைச்சு, மனுஷனைவிட அபாரமா செயல்படுதுங்க தேனீக்கள். கூட்டிலிருந்து எந்தத் திசையில, எவ்வளவு தூரத்துல, எந்தப் பூவுல தேன் இருக்குதுங்கிறதைப் பார்த்துட்டு வந்து, அதை நடன மொழியில சொல்றதுக்காகத் தகவல் தொடர்புக்குழு.

தேனீக்கள்..
தேனீக்கள்..

சொல்ற தகவலைப் போய்ப் புரிஞ்சுகிட்டு, அதுங்க சொன்ன திசையில போயி, தேனை எடுத்துட்டு வர்ற பொருள் சேகரிக்கும் குழு; தேனை எடுக்கப் போய், குறிப்பிட்ட பூவுல உக்கார்ந்ததுமே அதுல இருகுற ஏதாவது ஒரு விஷயத்தால (ரசாயனங்கள் உள்ளிட்ட) உடம்பு சரியில்லாம போயிடுற தேனீக்களுக்கு வைத்தியம் பார்க்குற மருத்துவக்குழு; மருத்துவத்துக்குப் பயனில்லாம இறந்துபோற தேனீக்களைக் கூட்டிலிருந்து அப்புறப்படுத்துற துப்புரவுக்குழு; இளம் தேனீக்களைப் பராமரிக்குற தாதிக்கள் குழு... இப்படியொரு ஒழுங்கோட தேனீக்கள் வாழுற வாழ்க்கையைப் பார்த்தா, நாமெல்லாம் சும்மா..?'னு வாய்விட்டு உங்களையும் அறியாம கூப்பாடு போட்டுடுவீங்க!

ஒரு கூட்டுல ஆயிரக்கணக்கான தேனீக்கள் இருந்தாலும், ராணித்தேனீ, ஒரே ஒரு ஆண் தேனீயுடன் ஒரே ஒருமுறை மட்டுமே கூடி, வாழ்நாள் முழுவதும் முட்டையிடும். ராணியுடன் கூடின அந்த ஆண் தேனீ, உறவு முடிஞ்சதும் இறந்துடும். அதுக்குப் பிறகு அந்த ராணித் தேனீ வேறெந்த ராஜாவோடவுடம் கூடாது. இப்படியொரு ஒழுங்கு, அதுங்களோட வாழ்க்கையில இருக்குறதைக் கேட்டா பிரமிப்பா இருக்கு.

இப்படியெல்லாம் கட்டுப்பாட்டோட வாழுற அந்தத் தேனீக் கூட்டம், முழுக்க முழுக்க வாழுறது தனக்காக இல்லீங்க... ஊருக்காக, உலகத்துக்காக. பல்வேறு ஜீவராசிகளுக்காக அதுங்க வாழுது. அதாவது அயல் மரகந்தச்சேர்க்கை மூலமா தாவர இனங்களை வாழ வைக்குது. ஆடு, மாடு, மனுசன், புழு, பூச்சினு பல ஜீவராசிகளுக்கும் உணவு கிடைக்கிறதே இந்தத் தாவரங்களாலதானே!

அதை விவசாயம்ங்கிற பேருல நாம, ஒரு தொழிலாக்கி, காலகாலமா செய்துட்டிருக்கோம். உலகத்துல இருக்கற அதிஉன்னதமான புனிதத் தொழில்ல, முதல இருக்குற ஒரு தொழில்னா... தேனீக்கள் செய்ற மகரந்தச்சேர்க்கையைச் சொல்லலாம். கிட்டத்தட்ட நாம செய்துகிட்டிருக்கிற விவசாயத்துக்கும் மேலான தொழில்.

தேனீக்கள்
தேனீக்கள்

ஏன்னா, தேனீக்கள் மகரந்தச் சேர்க்கையாலதான் விவசாயத்துல மகசூலே கிடைக்குது. தேனீக்கள் விவசாயம் இல்லைன்னா, மனுச மக்க மட்டுமில்லீங்க... எந்த ஜீவராசியுமே இங்க உயிர் வாழ முடியாது. அதனால தேனீக்களை இந்த உலகத்துல இருக்க ஒவ்வொரு ஜீவராசியுமே கைத்தொழணும், சூரியனுக்கு இணையா..!

ரொம்ப நாளா பூவெடுக்காத மரங்களுக்குப் பக்கத்துல தேன் பெட்டியை வெச்சா, கொஞ்ச நாள்லயே அந்த மரம் பூவெடுக்கும். அது கொஞ்ச, கொஞ்சமா சேர்த்து வைக்குற தேனும் நமக்குக் கிடைக்கும். இப்படி மகசூலை அதிகரிச்சு, தேன்ங்கற அற்புதமான அமுதத்தையும் கொடுத்து, நமக்காகவே வாழுற தேனீக்களுக்கு நாம எவ்வளவு நன்றியுள்ளவங்களா இருக்கணும். ஆனால், பயிர்களுக்குப் பூச்சிமருந்து தெளிக்குறேன் பேர்வழினு, அந்தத் தேனீக்களையெல்லாம் பரலோகம் அனுப்பிக்கிட்டிருக்கோம். இதுதான் நன்றிக்கடனா?" என்று சொல்கிறார் பூச்சியியல் வல்லுநர் செல்வம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு