Election bannerElection banner
Published:Updated:

புத்தம் புது காலை : எளியவர்களால் பெய்கிறது எல்லோருக்குமான மாமழை! - #WorldEarthday #6AMClub

திம்மக்கா - World Earth day
திம்மக்கா - World Earth day

குடிசையில் குடியிருப்பு, அருகிலிருந்த குவாரியில் தினக்கூலி, ஏழ்மையான வாழ்நிலை என்றபோதிலும் ஆலமரங்கள் மட்டும் இல்லாமல் அவர் நட்ட மொத்த மரங்களின் மதிப்பு மட்டும் 400 கோடியைத் தாண்டும் என்கிறார்கள்.

"அம்மா.. உங்களுக்கு என்ன வயசிருக்கும்..?"

‘’எனக்கு ஒரு நூத்தி எட்டு, நூத்தி ஒன்பது வயசிருக்கும்!’’

"உங்களுக்கு எத்தனை குழந்தைங்கம்மா?"

‘’அதிருக்கும் ஒரு முன்னூறு நானூறு!’’

- சாலுமருத திம்மக்கா!

பெயரைக் கேட்டதும் இது ஏதோ இதிகாசங்களில் தோன்றும் ஒரு பாத்திரத்தின் பெயர் போலத் தோன்றலாம். ஆனால், உண்மையில் ஓர் இதிகாசமாகவே வாழ்ந்து கொண்டிருப்பவரின் பெயர் இது.


ஆம்… கர்நாடகாவின் கூதூர் கிராமத்தில் ஏழ்மையான குடும்பம் ஒன்றில் ஆறு குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்த திம்மக்காவுக்கு சிக்கையாவுடன் திருமணம் நடந்தபோது அவருக்கு வெறும் 16 வயதுதான். திருமணமாகி பத்து ஆண்டுகளுக்குப் பிறகும் குழந்தை இல்லாமல் கோயில், குளங்கள், விரதம் என பல இருந்தும் பலனின்றிப் போகவே, தற்கொலை எண்ணம்கூடத் தோன்றியிருக்கிறது. ”ஆலமரம் ஒன்றை நட்டு வளர்த்தால் வாரிசு கிடைக்கும்' என்று உறவினர் ஒருவர் சொல்ல, தான் நட்ட முதல் ஆலமரம் வளர்ந்து நின்றபோதுதான் தனது மனநிலை முற்றிலும் மாறிப்போனது என்கிறார் திம்மக்கா.

முதல் வருடம் பத்து, இரண்டாம் வருடம் 15, மூன்றாம் வருடம் 20 என்று இவர் ஆலமரங்கள் நட ஆரம்பித்தபோது, ஊரில் கடுமையான தண்ணீர்ப்பஞ்சம். அப்போது, கணவரோடு சைக்கிளில் போய்... தானே செய்த பானையில் தண்ணீர் கொண்டுவந்து ஊற்றியதெல்லாம் உண்டு. அதிலும் ஒருமுறை பாதிவழியில் கீழே விழுந்து பானை உடைந்த போதும் புதுப்பானை செய்து திரும்பப் போய் காயத்துடன் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றியதெல்லாம் உண்டு என்று சிரித்தவர், 25 வருடங்களுக்கு முன்பு தனது கணவர் இறந்ததற்காக கலங்குகிறார்.

திம்மக்கா
திம்மக்கா

குடிசையில் குடியிருப்பு, அருகிலிருந்த குவாரியில் தினக்கூலி, ஏழ்மையான வாழ்நிலை என்றபோதிலும் ஆலமரங்கள் மட்டும் இல்லாமல் அவர் நட்ட மொத்த மரங்களின் மதிப்பு மட்டும் 400 கோடியைத் தாண்டும் என்கிறார்கள். ஆரம்பத்தில் எங்களைப் பைத்தியம் என்று எள்ளி நகைத்தவர்கள் எல்லாம், இப்போது அந்த மரங்களால பலனடைந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லும் திம்மக்காவை, சாலையின் இருமருங்கிலும் மரம்நட்டவர் எனும் பொருள்பட கன்னடத்தில் சால மருத எனும் அடைமொழியோடு ‘சாலமருத திம்மக்கா’ என்றே அந்த ஊர் மக்கள் அன்புடன் அழைக்கிறார்கள்.

”இத்தனை ஆலமரங்களை நட்டீர்களே... எத்தனை குழந்தைகள் பிறந்தது?” என்று கேட்டால், “இந்த மரங்கள்தான் என் குழந்தைகள். எனக்கென குழந்தைகள் பிறந்திருந்தால் இத்தனை குழந்தைகள் எனக்குக் கிடைத்திருக்குமா?’’ என்று சிரிக்கும் திம்மக்காவின் வேண்டுகோளை ஏற்று சாலை விரிவாக்கத்திற்காக மரங்களை வெட்டாமல், இவர் நட்ட மரங்களையெல்லாம் பாதுகாக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது கர்நாடக அரசு.

திம்மக்கா
திம்மக்கா

1991-ம் ஆண்டு கணவரின் மரணத்திற்குப் பிறகும், தனது பசுமைப் புரட்சியைத் தொடர்ந்து மேற்கொண்ட திம்மக்காவை கடந்த சில வருடங்களாக மத்திய மாநில அரசுகள் அங்கீகரித்து, பத்மஸ்ரீ உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விருதுகளை வழங்கியுள்ளது. இன்றும் மழைநீர் சேகரிப்பு, மருத்துவமனை கட்டமைப்பு என தனது கிராமத்துக்கு ஏதாவது செய்துவரும் இவர், உலகின் மிகச்சிறந்த பெண்மணிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். மேலும், அமெரிக்காவின் ஒரு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் தமது அலுவலக கிளை ஒன்றிற்கு, திம்மக்காவின் பெயரைச் சூட்டியிருக்கிறது.

நாம் ஒரு மரத்தை நடும் போது, நம்பிக்கைக்கான ஒரு விதையை நாம் நடுகிறோம். சீரழிந்து வரும் சமூக மற்றும் சுற்றுச்சூழலில், ஏழ்மையிலும், துன்பத்திலும் இருக்கும் பெண்களுக்கு மரங்கள் பெரும் உதவியாக இருக்கும் என்கிறார் வனங்களின் அன்னை வங்காரி மத்தாய். ஆனால், இத்தனைக்குப் பிறகும் எளிமையாய் ஒரு வாடகை வீட்டில் வசித்தபடி இன்றளவும் தனது வாழ்வை எல்லோருக்காகவும் வாழும் இதுபோன்ற எளியவர்களால் தானே எல்லோருக்கும் பெய்கிறது மழை.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு