Published:Updated:

`மனுஷங்கள இனியும் தனியா எதிர்கொள்ள முடியாது!' உணவுக்காக ஒன்றுகூடும் ஆண் யானைகள்

குட்டி யானை
குட்டி யானை

நீரும் உணவும் போதுமான அளவுக்குக் கிடைத்தால் சரி, இல்லையென்றால்? அதை நாம் போராடித்தான் பெறவேண்டும் என்ற சூழல் நிலவினால், அதற்குத் தகுந்த குழுவைச் சேர்த்துக்கொள்வோம் அல்லவா... அப்படித்தான் இதுவும்.

அம்மா, அத்தை, அண்ணன், தம்பி என்று கிட்டத்தட்ட மனிதர்களைப் போலவே நெருக்கமான சமூக உறவுகளைக் கொண்ட உயிரினம்தான் யானை. யானைகள் தாய்வழிச் சமூகங்களைக் கொண்டவை. ஒரு கூட்டத்துக்கு தலைமையேற்பதும் வழிநடத்துவதும் அந்தக் கூட்டத்தின் மூத்த தாய் யானையே. அவை குடும்ப சமூக உறவுகளைப் பேணும் உயிரினம். அவை கூட்டமாக ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து பாதுகாத்தும் பாதுகாக்கப்பட்டும் வாழும். இளம் வயதை எட்டும் யானைகள், பதின்ம வயதை எட்டிய இளைஞர்களைப் போன்ற வயதையொத்த யானைகள், தம் கூட்டத்திலிருந்து தனித்து விடப்படுகின்றன. மனித சமூகத்தில் சொந்தங்களுக்குள் பெண் கொடுக்க, பெண் எடுக்கக் கூடாதென்று சொல்வதுண்டு. அதற்குக் காரணம், ஓர் உயிரினம் தன் குழுவுக்குள்ளேயே இனப்பெருக்கத்தில் ஈடுபடும்போது, மரபணுப் பன்மை (Genetic Diversity) குறையத்தொடங்கும்.

இது, யானைகளுக்கு எப்படித் தெரிந்ததோ தெரியவில்லை. பல லட்சம் ஆண்டுகளாகவே, தன் கூட்டத்தில் பதின்ம வயதை எட்டும் ஆண் யானைகளைத் துரத்திவிட்டுவிடுகின்றன.

அப்படி தனித்து விடப்படும் யானைகள் தனியாகவே சுற்றி, தனியாகவே உணவு மற்றும் தண்ணீர் தேடி, தன்னை அந்த காட்டுக்குத் தகுந்தவாறு யாருடைய உதவியுமின்றியே பிழைத்திருக்கப் பழக்கிக்கொள்ள வேண்டும். சில ஆண்டுகள் கழித்து இனப்பெருக்கக் காலம் வரும் சமயத்தில், அதுவும் ஒரு கூட்டத்தோடு தன் சுயமுயற்சியில் இணைந்துகொள்ளும். ஆனால், இப்படி தனித்துவிடப்படும் யானைகளின் பழக்கங்கள் மாறிவருகின்றன. இளம் யானைகளும்கூட கூட்டம் சேரத் தொடங்கிவிட்டன. மனிதர்களால் ஏற்படும் ஆபத்துகளைச் சமாளிக்க அவை ஒற்றையாக இருப்பதைவிட, கூட்டமாக இருப்பதே நல்லது என்று நினைத்திருக்கலாம். இப்படி கூட்டம் சேர்ந்து பாதுகாப்பு ஏற்படுத்திக்கொள்ளும் திறனை அவை தம் மூத்தவர்களிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கலாம்.

யானைக் கூட்டத்துக்கு ஏதேனும் ஆபத்து இருப்பதுபோல் தோன்றினால், அவை முதலில் தன் குட்டிகளை கூட்டத்தின் நடுவே விட்டு சுற்றி வளைத்துக்கொள்ளும். ஆபத்து என்று வரும்போது, அவை முதலில் பாதுகாக்க நினைப்பது குட்டிகளைத்தான். இது, காட்டுப் பயணங்களை மேற்கொண்டவர்களுக்குத் தெரிந்திருக்கும். அப்படி பாதுகாக்கப்பட்ட குட்டிகள் வளர்ந்து, தனித்து வாழ்ந்துகொண்டிருக்கும் சமயங்களில், மனித ஆபத்துகளை தனித்து நின்று எதிர்கொள்வதைவிட, தம் தாய்மார்கள் செய்ததைப்போல் கூட்டம் சேர்ந்தால் என்னவென்று நினைத்திருக்கலாம். இப்படி தனித்து விடப்பட்ட ஆண் யானைகள் மொத்தமும் கூட்டம் சேர்வது பற்றி, தற்போது நடந்துகொண்டிருக்கும் ஆய்வுகளும் தற்காப்புதான் முதன்மைக் காரணம் என்று சொல்கின்றன.

இந்தக் காரணங்களால், விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல், அவை துணிந்து இறங்கிக்கொண்டிருந்தன. மனித ஆதிக்கம் நிறைந்த பகுதிகளுக்குள் நுழையும் யானைகள், சந்திக்க வேண்டிய இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆரம்பத்தில் மனிதர்கள் தம் நிலத்துக்குள் வந்த யானைகளை வெறுமனே துரத்திவிட்டுக்கொண்டு மட்டும் இருந்தனர். காலப்போக்கில் அதிக சேதங்களையும் ஆபத்துகளையும் உண்டாக்கும் யானைகளைத் தாக்கவும் சுட்டுக் கொல்லவும் தொடங்கினர். தற்போது, இரண்டையும் சேர்த்து மூன்றாவதாக, அப்படி வரும் யானைகளையே பிடித்து அவற்றின் பசியைப் பயன்படுத்தி அடிமையாக்கி, `கும்கி' என்ற பெயரில் தன் இனத்தையே எதிர்க்க வைக்கின்றனர். இவற்றால், யானைகள் மனத்தளவிலும் உடலளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டன, பட்டுக்கொண்டிருக்கின்றன.

உணவு
உணவு

இந்தப் பிரச்னைகள் மட்டுமின்றி பயிர்களுக்கு போடப்படும் மின்வேலிகள், அவை கடந்து வரவேண்டிய சாலைகள், ரயில் பாதைகள் என்று மேலும் பல ஆபத்துகள் உருவாகியுள்ளன. இப்படியாக அபாயங்கள் அதிகமானாலும், அத்தனையையும் தாண்டி வந்தாகவேண்டிய அளவுக்கு அவற்றுக்குத் தேவையும் அதிகமாகியுள்ளன. காடுகளுக்குள் அதிகரித்துவிட்ட ஆக்கிரமிப்புத் தாவரங்கள், உணவுத் தாவரங்களைக் குறைத்துவிடவே, வேறு வழியின்றி அதிக ஊட்டச்சத்துள்ள உணவுகளைத் தேடி இந்தத் தடைகளைத் தாண்டவேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்படித் தாண்டி வருவதற்குரிய பலன்களும் கிடைக்காமலில்லை. கர்நாடகாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, இப்படி தாண்டி வந்து அவை சாப்பிடும் பயிர்கள், உடலுக்கு மட்டுமின்றி யானைகளின் மன அழுத்தத்துக்கும் மருந்தாகின்றன என்று கூறுகிறது.

கர்நாடகாவைச் சேர்ந்த காட்டுயிர் ஆய்வாளர் நிஷாந்த் ஶ்ரீநிவாசய்யா இதைப் பற்றி ஓர் ஆய்வு மேற்கொண்டார். மனித-யானை எதிர்கொள்ளலில், அவர் பார்க்கும் யானைக் கூட்டங்களில் முற்றிலுமாக ஆண் யானைகளே நிரம்பிய கூட்டம் அல்லது பெரும்பாலும் ஆண் யானைகளே உள்ள கூட்டம் அதிகமிருப்பதைக் கவனித்தார்.

அவை கூட்டமாக இருப்பதாக இருந்தால், அதில் பெண் யானைகளும் இடம் பெற்றிருக்கும். ஆனால், ஆண்கள் மட்டுமே ஆண்டுக்கணக்கில் கூட்டம் கூடவேண்டிய தேவை என்ன வந்தது? அதிலும் அப்படிச் சேர்ந்துள்ள யானைகளின் வயதை வைத்துப் பார்த்தபோது, அனைத்துமே இளம் பருவத்தவைதான். இந்தப் பருவத்தைச் சேர்ந்தவை, பொதுவாக காட்டுக்குள் தனித்துத்தான் இருக்கும். இங்கு ஏன் இப்படி கூட்டமாக வருகின்றன?
நிஷாந்த் ஶ்ரீனிவாசய்யா, காட்டுயிர் ஆய்வாளர்
உணவுப் போராட்டம்
உணவுப் போராட்டம்

இதைத் தெரிந்துகொள்ள அவரும் அவரது குழுவும் இணைந்து, மனிதர்கள், யானைகள் இரண்டு தரப்பும் பயன்படுத்தும் நிலப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்கள். பிப்ரவரி 2016 முதல் டிசம்பர் 2017 வரை கேமரா டிராப்புகள் மூலம் 20,124 ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டன. இனப்பெருக்கக் காலத்தை எட்டிய மற்றும் நடுத்தர வயதுடைய ஆண் மற்றும் பெண் யானைகள் அடங்கிய குழு, ஆண் யானைகள் மட்டுமே அடங்கிய குழு, ஒற்றை யானைகள் என்று அந்த ஒளிப்படங்களை மூன்று பிரிவாகப் பிரித்தனர்.

அதில், 10 முதல் 20 வயது வரையுள்ள இளம் யானைகள் ஒன்றாகச் சேர்ந்துகொள்கின்றன. இவை இணைந்து, ஆண்கள் மட்டும் நிறைந்த குழுக்களாகச் சுற்றுகின்றன. 10 முதல் 20 வயது வரையுள்ள யானைகள், இனப்பெருக்கத்துக்குத் தயாராக இருக்கும். ஆனால், சமூக உறவுமுறைகளைப் பின்பற்றும் அளவுக்கு மனத்தளவில் முதிர்ச்சியடைந்திருக்காது. இப்படி ஒன்றுசேர்ந்து, அதிகபட்சமாகப் 12 யானைகள் வரை கூட்டம் சேர்கின்றன. இப்படி இவை தற்காலிகமாகக் கூட்டம் சேர்வது சில நேரங்கள் முதல் நீண்ட நாள்கள் வரை, சில ஆண்டுகள் வரைகூட நீடிக்கிறது. சில நாள்களுக்கோ சில வாரங்களுக்கோ கூட்டம் சேர்வதை ஒருசில யானைகள் சில சமயங்களில் முன்னரும் செய்திருக்கின்றன. ஆனால், ஆண்டுக்கணக்காக கூட்டம் சேர்வது இதுதான் முதல்முறை. இந்த ஆய்வு நடந்த அதே பகுதிகளில், 20 ஆண்டுகளாக நடத்தப்பட்ட முந்தைய ஆய்வுகள் இதுமாதிரியான செயற்பாட்டைப் பதிவுசெய்ததே இல்லை.

சில மாதங்களுக்கு முன், தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் சின்னத்தம்பி யானை குறித்து பரபரப்பாகப் பேசப்பட்டது. சின்னதம்பி, வனத்துறையால் பிடிக்கப்படுவதற்கு முன்னால் இதேபோல் அதுவும் சுமார் ஏழு யானைகளோடு கூட்டு சேர்ந்திருந்தது. இதுகுறித்து ஊட்டியைச் சேர்ந்த யானைகள் ஆய்வாளர் ராமகிருஷ்ணனிடம் பேசினோம், ``கோயம்புத்தூர் மாதிரியான சிறிய பகுதியில், யானைகளுக்கு போதுமான உணவு கிடைக்காதபோது, அவை தனக்கான உணவை அபாயங்களைக் கடந்து எடுத்துக்கொள்ளவேண்டிய சூழல் நிலவுகிறது. அந்த மாதிரியான சூழல்களில் சிரமப்பட்டுத்தான் சாப்பிட வேண்டும். அதற்கு, கூட்டாகச் சேர்ந்தால்தான் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து உணவு தேடிக்கொள்ளமுடியும். அதுதான் நடக்கிறது. இதுவே முதுமலை, ஆனைமலை மாதிரியான பகுதிகளில் இப்படி கூட்டுசேர வேண்டியதில்லை. அங்கு, யானைகள் தனித்துச் சென்றுவிடும். இதில், உணவுதான் அடிப்படையான ஒன்று" என்று கூறினார். மேலும் பேசியவர்,

நீரும் உணவும் போதுமான அளவுக்கு கிடைத்தால் சரி. இல்லையென்றால், அதை நாம் போராடித்தான் பெறவேண்டுமென்ற சூழல் நிலவினால், அதற்குத் தகுந்த குழுவை சேர்த்துக்கொள்வோம் அல்லவா... அப்படித்தான் இதுவும். சின்னத்தம்பி, இதேபோல் கூட்டு சேர்ந்து சுற்றிக் கொண்டிருந்ததை நாங்கள் மூன்றாண்டுகளாகக் கவனித்தோம். இப்போது, ஆண் யானைகள் மட்டுமே உடைய குழுக்கள் உருவாவது, அவை எதிர்கொள்ளும் ஆபத்துகளைச் சந்திக்கச் செய்துகொள்ளும் ஒருவகையான தகவமைப்புதான்.
முனைவர். ராமகிருஷ்ணன், யானைகள் ஆய்வாளர்

இவை இப்படி குழுவாக ஒன்றுசேர்வது, தற்செயலாகவோ போகிற போக்கிலோ நடக்கவில்லை. இதற்குக் காரணம், சமகாலச் சூழலியல் பிரச்னைகளும் சமுதாயத் தடங்கல்களும்தான். மனிதர்களால் ஏற்படும் இயற்கைக்கு விரோதமான தடைகள், அவற்றுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றை தனித்திருந்து எதிர்கொள்வதைவிட, இப்படி குழுவாக ஒன்றிணைவது பாதுகாப்பானது என்று அவை கருதியிருக்கலாம். அவை மனிதர்களிடமிருந்து தப்பிக்க வேண்டும், மரணிப்பதிலிருந்து தப்பிக்க வேண்டும். அதனால், இந்த மாதிரியான பிரச்னைகளில் அனுபவம் வாய்ந்த, அவர்கள் மத்தியில் வயது அதிகமுள்ள யானையோடு அவை கூட்டுசேர்கின்றன. அதன்மூலம், தம் மரபணுக்களில் இதுவரை பதிவாகாத இந்தப் புதுவகையான ஆபத்துகளை எதிர்கொள்ளக் கற்றுக்கொள்வதோடு, இணைந்து சமாளிக்கவும் செய்கின்றன.

இதன்மூலம், யானைகள் தமக்கு ஏற்படும் பிரச்னைகளில் எப்படித் தம்மை அதற்கு ஏற்றாற்போல் தகவமைத்துக்கொள்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அது மட்டுமில்லை, மனிதத் தலையீடுகளால் யானைகள் தம் பல லட்சம் ஆண்டுக்கால பழக்கத்தை மாற்றிக்கொண்டிருக்கின்றன. இது, நமக்கு பெருமை தரும் விஷயமல்ல. யானைகள் டைனோசர் காலத்திலிருந்து பிழைத்திருக்கின்றன. இனியும் பிழைத்திருக்க எப்படியும் புதிய வழிகளையும் திட்டங்களையும் வகுக்கத்தான் செய்யும்.

யானைக் கூட்டம்
யானைக் கூட்டம்

இப்போதைய பிரச்னை அதுவல்ல. அப்படிப் பிழைத்திருக்கும் பாலூட்டியே தற்போது பல அபாயங்களைச் சமாளிக்க முடியாமல் உதவிக்கு ஆள் சேர்க்கிறது. நாம் இப்போது சிந்திக்கவேண்டியது, யானைகளும் மனிதர்களும் எப்படி உறவுக்காரர்களாக இணைந்து வாழ முடியும் என்ற வழியைக் கண்டுபிடிப்பது பற்றித்தான். அதுதான் யானைகள் - மனிதர்கள் இருவரையுமே அழிவிலிருந்து காப்பாற்றும்.

இது, உணவுக்காக யானைகள் நடத்தும் போராட்டத்தின் அடுத்த கட்டம். அவற்றின் நிலத்தைப் பிடுங்கினோம், நீரைப் பிடுங்கினோம், உணவைப் பிடுங்கினோம். இறுதியில் அதைத் தேடி வந்தவற்றை அடித்துத் துரத்தினோம் அடிமையாக்கினோம். இதையெல்லாம் சமாளிக்க, அவை தம் உணவுப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளன. இந்த நிலை மாற, நாம் ஒன்றிணைந்து வாழும் வழியைக் கண்டுபிடித்தே தீரவேண்டும்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு