Published:Updated:

`இஸ்திரி கடைகளைப் பார்த்து 12 வயதில் வந்த ஐடியா இது! - இளம் விஞ்ஞானி வினிஷா உமாசங்கர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சூரிய ஒளியில் இயங்கும் இஸ்திரி வண்டி
சூரிய ஒளியில் இயங்கும் இஸ்திரி வண்டி

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த, சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு இங்கிலாந்து இளவரசர் வழங்கும் `எர்த்ஷார்ட்' விருது போட்டிக்கு 10-ம் வகுப்பு படிக்கும் தமிழக மாணவி ஒருவர் தேர்வாகியுள்ளார்.

``வரும் காலங்களில் புதுசு புதுசா நிறைய கண்டுபிடிக்கணும். அதைத் தொடர்ச்சியா பண்ணணும்" என்று நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளை வெளிப்படுத்துகிறார் வினிஷா உமாசங்கர்.

இவ்வுலகில், நாகரிகம் மற்றும் தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் இவ்வேளையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கேள்விகளும் எழத்தான் செய்கின்றன. நாமும், நம் எதிர்கால சந்ததிகளும் நலமுடன் வாழ வேண்டுமெனில் நம்மை தாயாக அரவணைத்து பாதுகாக்கும் இந்த பூமியின் பாதுகாப்பும் அவசியமாகிறது. அப்படி, இந்த பூமியில் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் தலைமையில், `எர்த்ஷார்ட்' என்ற பெயரில் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பரிசு, சுற்றுச்சூழலுக்கான `ஆஸ்கர் விருது' என்றும் அழைக்கப்படுகிறது.

மாணவி வினிஷா உமாசங்கர்
மாணவி வினிஷா உமாசங்கர்

இப்போட்டியில் வெற்றி பெறும் ஐந்து நபர்களுக்கு தலா 1 மில்லியன் பவுண்ட் பரிசாக வழங்கப்படும். இம்முறை 15 நபர்கள் தேர்வாகியுள்ள இந்தப் போட்டிக்கு, இந்தியாவிலிருந்து 2 நபர்கள் தேர்வாகியுள்ளனர். அதில் ஒரு நபர்தான் தமிழகத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் வினிஷா உமாசங்கர், `சூரிய ஒளியில் இயங்கும் இஸ்திரி வண்டி'யை உருவாக்கியுள்ளார். இந்தக் கண்டுபிடிப்புதான் இறுதிப்போட்டி வரை சென்று பலரது பாராட்டையும் பெற்றது. இருப்பினும் பரிசு வெல்லும் வாய்ப்பு நூலிழையில் தவறியது.

இதுதொடர்பாக மாணவியிடம் பேசினோம். ``என்னுடைய சின்ன வயசுல இருந்தே, சாலை ஓரமாக இஸ்திரி போடுறவங்களைப் பார்த்திருக்கிறேன். அவங்க கரியை எரிச்சுட்டு கீழே போட்டுடுவாங்க. எனக்கு 12 வயது ஆனபோது ஒருநாள் அவங்ககிட்ட போய் இதைப் பத்திக் கேட்டேன். `ஒருமுறை பயன்படுத்தியதுக்கு அப்புறமா... இந்தக் கரியை மறுபடியும் யூஸ் பண்ண முடியாது. அவ்வளவுதான்'ன்னு சொன்னாங்க. அவங்களும் ரொம்ப கஷ்டப்படுவதைப் பார்த்திருக்கேன். இந்த மாதிரி ஒரு முறை மட்டும் யூஸ் பண்ணிட்டு தூக்கிப் போட்டுட்டா பூமிக்கு நல்லது இல்லையேன்னு தோணுச்சு. நான் சூரிய ஒளி பற்றிப் படிச்சிருக்கேன். அதனால, சூரிய ஒளியைப் பயன்படுத்தி இது செய்ய முடியாதானு எனக்கு ஐடியா வந்துச்சு. அப்படி உருவாகுற கண்டுபிடிப்பு நம்ம சுத்தி இருக்குறவங்களுக்கு உதவியாக இருக்கணும்ன்னு தோணுச்சு. அதுதான் இந்தக் கண்டுபிடிப்பை உருவாக்க காரணமாக இருந்தது.

பெற்றோருடன் மாணவி
பெற்றோருடன் மாணவி

கடந்த 2 வருஷமா கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் கண்டுபிடிப்பை டெவலப் பண்ணியிருக்கேன். `சூரிய ஒளியில் இயங்கும் இஸ்திரி வண்டி' என்பதுதான் என்னுடைய கண்டுபிடிப்பு. அதில் பார்த்தீங்கன்னா... இஸ்திரி வண்டி மீது சோலார் பேனல் இருக்கும். அதிலிருந்து டைரக்டா கரன்ட் இஸ்திரி பெட்டிக்கு வந்துடும். அதிக திறனுடன் இருப்பதுக்காக அப்படி பண்ணியிருக்கேன். துணியை இஸ்திரி செய்வதற்கான கரன்ட் போக மீதம் இருப்பது பேட்டரிக்குள் ஸ்டோர் ஆகிவிடும். மழை மற்றும் இரவு நேரங்களில் துணி தேய்க்க வேண்டும் என்றால் பேட்டரியில் ஸ்டோர் ஆகியிருக்கும் மின்சாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பில் போடும் வசதியுடன் கூடிய டிராலி... கரூர் மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு!

இஸ்திரி பண்ணுறவங்க ஒரு முறை கரியை எரிச்சாங்க அப்படினா... முதலில் திடமான துணியைத் தேய்ப்பார்கள். இஸ்திரி பெட்டியில் சூடு குறைய குறைய அதற்கு ஏற்றாற்போல் மெல்லிய துணிகளைத் தேய்ப்பாங்க. அப்போ நிறைய எனர்ஜி லாஸ் நடக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்னுடைய கண்டுபிடிப்புல, துணி தேய்ப்பதற்குத் தேவையான கரன்ட் மட்டும்தான் தேவைப்படும். மீதம் உள்ள கரன்ட் பேட்டரியில் ஸ்டோர் ஆகிவிடும். சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு இருக்காது. எனக்கு, சின்ன வயசுல இருந்தே அறிவியல் மீது ஆர்வம் இருந்தது. இது அப்பா அம்மாவுக்கும் தெரியும். நான் இந்த ஐடியாவை வீட்டுல சொன்னதும், என்னை நல்லா மோட்டிவேட் பண்ணி உதவியாக இருந்து செய்ய சொன்னாங்க. 2019-ம் ஆண்டு `டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் இக்னைட் (IGNITE) விருது' இந்திய அளவில் வாங்கியிருந்தேன். உலக அளவில், ஸ்வீடன் நாட்டுடைய விருதையும் பெற்றிருக்கேன். சந்தீப் நந்தூரி கலெக்டர் திருவண்ணாமலையில் இருந்தபோது என்னை அழைத்துப் பாராட்டினார்கள். அதேபோல முதலமைச்சர் ஸ்டாலின் சார் அவர்கள், தேர்தலுக்கு முன்பாகத் திருவண்ணாமலை வந்தபோது என்னை அழைத்துப் பாராட்டினாங்க. இங்கிலாந்து இளவரசரின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சிறந்த கண்டுபிடிப்பு போட்டியில் என்னுடைய கண்டுபிடிப்பு தேர்வாகியிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு. சிறிய வயதிலேயே இந்தப் போட்டியில் தேர்வாகியதைப் பெரிய விஷயமாகப் பார்க்கிறேன்.

கண்டுபிடிப்பு
கண்டுபிடிப்பு
ஸ்வீடன் விருது, இந்திய விருது... வினிஷா ஹேப்பி!

எதிர்காலத்தில் அறிவியல் பற்றி அதிகம் படிக்கணும். குறிப்பாக, விண்வெளி பற்றி அதிகமாகப் படிக்கணும் என்பதுதான் என்னுடைய ஆசை. அதுமட்டுமல்லாம புதுசு புதுசா நிறைய கண்டுபிடிக்கணும். அதைத் தொடர்ந்து பண்ணணும் என்ற ஆசையும் இருக்கு" என்றார் தன்னம்பிக்கை மிகுந்த குரலில்.

அதைத் தொடர்ந்து பேசிய அம்மாணவியின் தந்தை உமாசங்கர், ``சூரிய ஒளியைப் பயன்படுத்தி இந்த மாதிரி கண்டுபிடிப்பு செய்யப் போவதாக 7-வது படிக்கும்போது எங்ககிட்ட சொன்னாங்க. நாங்களும் ஊக்கப்படுத்தி, அதைப் பற்றி இணையத்துல, புக்ல நிறைய படிக்கச் சொன்னோம். எங்களுக்கு தெரிஞ்ச சிலரிடம் சந்தேகம் கேட்டு தெரிஞ்சிக்க உதவி பண்ணினோம். அதன் பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக டெவலப் பண்ணினாங்க. தேசிய மற்றும் சர்வதேச அளவில் இந்தக் கண்டுபிடிப்புக்காக விருது பெற்றிருக்காங்க. அதன் பின்னர், குஜராத்ல இருக்கக்கூடிய ஒரு நிறுவனம், இந்தக் கண்டுபிடிப்பைக் கொஞ்சம் டெவலப் செய்து காப்புரிமை விண்ணப்பித்து கொடுத்து உதவினாங்க. இந்தக் கண்டுபிடிப்பை முழுமையாகச் செய்து முடிக்க 50,000 ரூபாய் வரை செலவாகியது. இப்போ இங்கிலாந்து இளவரசர் அறிவித்த போட்டியில் தேர்வாகியிருக்காங்க. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு