Published:Updated:

"வராக நதிக்கரையோரம்!" - இப்ப எப்படியிருக்கு தெரியுமா?

ஹ.ஷிபானா பாத்திமா

பெரியகுளத்தைச் சுற்றியுள்ள ஆறு  ஊர் மக்களின் வாழ்வியல் ஆதாரமாக விளங்கியது. இப்படிப் பல சிறப்புகள் பெற்ற அந்நதி இன்று சாக்கடை நீராக ஓடுகிறது. இதற்குக் காரணம் மணல் மாஃபியாக்கள், குப்பைகள், இறைச்சிக் கழிவுகள். 

வராக நதி
வராக நதி ( ஷிபானா )

பெரியகுளத்தின் வரம் வராக நதி. மலைப்பகுதிகளுக்கு நடுவில் தவழ்ந்து விளையாடும் குழந்தைபோல ஆனந்தமாய் துள்ளிக் குதித்துப் பல நதிகளையும் பல அணைகளையும் கடந்து ஓடுகிறது. மேலும், பெரியகுளத்தின் மாரியம்மன் கோயிலின் கலசத்தில் பயன்படுத்தும் புனித நீராகவும், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் குடி நீராகவும் விளங்கியது. பெரியகுளத்தைச் சுற்றியுள்ள ஆறு  ஊர் மக்களின் வாழ்வியல் ஆதாரமாய் விளங்கியது. இப்படிப் பல சிறப்புகள் பெற்ற அந்நதி இன்று சாக்கடை நீராக ஓடுகிறது. இதற்குக் காரணம் மணல் மாஃபியாக்கள், குப்பைகள், இறைச்சிக் கழிவுகள். 

சைக்கிள் பேரணி
சைக்கிள் பேரணி

நம் இயற்கை வாழ்வாதாரங்கள் அழிவதைக் கண்டு அவற்றை மீட்டெடுக்க புறப்பட்ட அமைப்புதான் ‘விழுதுகள் இளைஞர் மன்றம்.’ வராக நதியின் அவல நிலையை மக்களுக்கு எடுத்துரைக்கச் சென்ற வாரம் சைக்கிள் பேரணியைக் காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு முடித்தனர். மேலும், அவர்களே அந்நதியைச் சுத்தம் செய்தனர். 

அம்மன்றத்தின் தலைவர் பாண்டி கூறியதாவது, "நாங்கள் இந்த விழிப்புணர்வைக் கடந்த ஒரு மாதமாகச் செய்கிறோம். இம்மன்றத்தின் குறிக்கோள் இயற்கை ஆதாரங்களைப் பாதுகாப்பதுதான். சிறந்த மன்றம் என்ற பெயரில் இது வரை இரு முறை மாவட்ட ஆட்சியரிடமிருந்து பரிசு வாங்கியுள்ளோம். நாங்கள் பரிசாக வாங்கிய தொகையில் அகமலை என்ற மலைப்பகுதியில் வாழும் மக்களுக்கு இரண்டு தனி நபர் கழிப்பறை கட்டிக் கொடுத்துள்ளோம்.

விழுதுகள் அமைப்பு
விழுதுகள் அமைப்பு

மேலும், மலையில் சாலை வசதிகள் இல்லாத காரணத்தால் குதிரையில் வைத்து அனைத்துப் பொருள்களையும் எடுத்துச் சென்று அங்கு இரண்டு நாள்கள் தங்கியிருந்தோம். இப்போது வராக நதியைச் சுத்தம் செய்ய ஆரம்பித்துள்ளோம். பழைய நதியைக் கண்டிப்பாக மீட்டெடுப்போம் என்கிறார் உற்சாகத்துடன். அவர்கள் நாங்கள் நினைத்தால் மட்டும் போதாது; மக்களும் நினைத்தால்தான் நதியைக் காப்பாற்ற முடியும்.