Published:Updated:

1200 கி.மீ டூ வீலர் பயணம்.. 300 விதைப் பந்துகள் - சென்னை இளைஞர்களின் மரம் வளர்ப்பு முயற்சி!

இரா.மோகன்
உ.பாண்டி

கஜா புயலால் அழிந்து போன பல ஆயிரம் மரங்களுக்கு மாற்றாக திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் பகுதிகளில் விதைப் பந்துகள் மூலம் மரம் வளர்க்கும் முயற்சியினைத் தொடங்கினர்.

Seed balls
Seed balls

பசுமைப் பகுதிகளை உருவாக்க உதவும் வகையில் சென்னையில் உள்ள ரோடு த்ரில் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் 1200 கி.மீ தூரம் பயணித்து சுமார் 300 விதை பந்துகள் மூலம் 1500 விதைகளை விதைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

youngsters
youngsters

சென்னையில் பணியாற்றி வரும் புதுச்சேரியைச் சேர்ந்த கோபி, திருப்பூரைச் சேர்ந்த ரம்யா மற்றும் சென்னையைச் சேர்ந்த செல்வபெருமாள், ராஜு, சஞ்சை, சரவணன், சுதர்சன், பரத்வாஜ் பாலாஜி ஆகியோர் இணைந்து 'Team Road Thrill Chennai' என்ற பெயரில் குழுவாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் Ride Asoca Green Planet என்ற அமைப்பின் மூலம் மரம் வளர்த்தலின் அவசியம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் அவ்வப்போது மரம் நடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் தங்களின் முதல் முயற்சியாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் உள்ள சிருஷ்டி வில்லேஜ் பவுண்டேஷனின் கார்த்திக் என்பவர் நடத்தி வரும் பள்ளியில் வேங்கை, புங்கை, கொன்றை, மலை வேம்பு, மஹாகனி உள்ளிட்ட 30 வகையான 150 மரங்களை செல்வா என்பவருடன் இணைந்து நட்டனர். அதன் தொடர்ச்சியாக கஜா புயலால் அழிந்து போன பல ஆயிரம் மரங்களுக்கு மாற்றாக திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் பகுதிகளில் விதைப் பந்துகள் மூலம் மரம் வளர்க்கும் முயற்சியினைத் தொடங்கினர்.

Youngsters with seed balls
Youngsters with seed balls

சுதந்திர தினத்தன்று சென்னையிலிருந்து 6 மோட்டார் சைக்கிள்களில் தனுஷ்கோடிக்குப் புறப்பட்ட இவர்கள், தாங்கள் கடந்து செல்லும் திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வயலோரப் பகுதிகள் மற்றும் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே உள்ள சவுக்கு மரக் காடுகள் இடையே சுமார் 300 விதைப் பந்துகளை வீசி வந்துள்ளனர்.

டெல்டாவுக்கு கைகொடுக்கும் ‘கைஃபா!’

இதற்கென புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தில் உள்ள பேபி சாரா மனநலக் காப்பகத்தில் உள்ளவர்களால் செம்மண்ணில் தயார் செய்யப்பட்ட விதைப் பந்துகள் ஒவ்வொன்றிலும் தலா 5 மயில் கொன்றை மர விதைகள் வைக்கப்பட்டிருந்தன. இதன் மூலம் சுமார் சென்னை - ராமேஸ்வரம் இடையிலான சுமார் 600 கி.மீ பயணப் பாதையில் 1500 விதைகளை இந்த இளைஞர்கள் குழு விதைத்துள்ளது.

Seed balls
Seed balls

பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் சென்னைக் கடற்கரைச் சாலைகளில் பைக் ரேஸ் விடும் இளைஞர்களுக்கு இடையே அமைப்பு ஒன்றை உருவாக்கி, மரம் வளர்க்கும் இந்த இளைஞர்களின் முயற்சி பாராட்டுதலுக்குரியது.

வாழ்த்துகள்!

Vikatan