Published:Updated:

ஆடி மாத வழிபாடு - கோயில்களில் சாத்தப்படும் தண்ணீரை சேமித்து அசத்தும் இளைஞர்கள்!

சுரேஷ் அ

சேலம் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் கோவில் கம்பத்துக்கு ஊற்றப்படும் நீர் வழித்தடத்தில் மழைநீர் சேமிக்கும் விதமாக வடிவமைத்துள்ளனர்.

கோயில்
கோயில்

ஆடி மாதத்தையொட்டி சேலம் அருகே உள்ள ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோயிலில் திருவிழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. இந்த விழா தொடக்கத்தில் கோவில் முன் கம்பம் நட்டனர்.15 நாள்கள் நடக்கும் இந்த விழாவில் தினசரி 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற அந்த கம்பத்துக்கு (மரத்தால் செய்யப்பட்டது) தண்ணீர் ஊற்றி வழிபடுவர். இந்த தண்ணீர் வீணாக சாக்கடையில் கலந்துவந்தது.

அந்தப் பகுதியில் நிலவி வந்த தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்பட்டு வந்த சூழலில், இதனைக் கவனித்த அப்பகுதி இளைஞர்கள் ஒரு புதிய முடிவை எடுத்தனர். கம்பத்தில் வேண்டுதலுக்காக ஊற்றப்படும் நீரை சேமிக்கும் விதமாக அதன்ன் அருகில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தி அசத்தி வருகின்றனர்.

ஆடி மாத வழிபாடு - கோயில்களில் சாத்தப்படும் தண்ணீரை சேமித்து அசத்தும் இளைஞர்கள்!

இதுபற்றி அப்பகுதி இளைஞர்களிடம் பேசினோம். ``ஆட்டையாம்பட்டியில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் பண்டிகை நாள்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 31ம் தேதியன்று கம்பம் நடுதல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. ஆடியில் வரும் இந்தத் திருவிழா தொடர்ந்து 15 நாள்கள் வரை நடக்கும். இந்த நாள்களில் பக்தர்கள் காலை, மாலை என இரு வேளைகளிலும் கோயில் முன்னால் அமைக்கப்பட்டுள்ள கம்பத்துக்கு நீரை ஊற்றி அம்மனை வழிபடுவர். இதுவரையில் இந்தத் கோயில் கம்பத்துக்கு ஊற்றப்படும் நீர் கழிவுநீர், ஓடையில் கலந்து வீணாகி வந்தது.

தற்போது ஆட்டையாம்பட்டி பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இங்குள்ள பிரசித்தி பெற்ற ஏரியும் கொஞ்சம், கொஞ்சமாக வறண்டு வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு கோயில் கம்பத்துக்கு ஊற்றப்படும் நீர் வழித்தடத்தில் மழைநீர் சேமிக்கும் விதமாக வடிவமைத்திருக்கிறோம்'' என்றனர்.

தற்போது தமிழ்நாடு முழுவதும் மழைநீர் சேமிப்பு குறித்து அதிகாரிகள் பேசிவருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளைக் கொண்டு பல்வேறு மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் திருவிழா மாதமான ஆடியில் உபயோகப்படுத்தும் ஒரு துளி தண்ணீரைக் கூட வீணாக்கி விடக்கூடாது என்ற வகையில் ஒரு புதிய முயற்சியாக இப்பகுதி இளைஞர்கள் அமைத்துள்ள இந்த மழைநீர் சேகரிப்பு அமைப்பு கவனம் ஈர்த்திருக்கிறது.