Published:Updated:

நிழற்குடைக்கு இயல்வாகை, கோயில்களுக்கு செண்பகம்... மரங்களால் ஊரை மாற்றிய `கிரீன் நீடா' இளைஞர்கள்!

மரக்கன்றுகளுடன் ஊர் மக்கள்
மரக்கன்றுகளுடன் ஊர் மக்கள்

திருமணம் உள்ளிட்ட விழாக்கள்ல, மரக்கன்றுகள் கொடுக்குறது இப்ப அதிகமாகி இருக்கு. நோக்கம் நல்லதாக இருந்தாலும் கூட, அதனால் முழுமையான பலன் கிடையாது.

ஒதுங்க நிழல்,

உடலுக்கு மருந்து,

உணர்வுக்கு விருந்து,

அடைய குடில்,

அடைக்க கதவு,

அழகு வேலி,

ஆடத் தூளி,

மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்!

மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்!

- இன்றைய யதார்த்த நிலையை கவிஞர் வைரமுத்துவின் கவிதை வரிகள் படம் பிடித்து காட்டுகின்றன. மரம் வளர்ப்பில் பெரும்பான்மையான மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்றாலும்கூட சமூக நலனில் அக்கறை கொண்ட ஒரு சிலரால் இந்த பூமி பந்தில் ஆங்காங்கே மரங்கள் துளிர்த்துக் கொண்டேதான் இருக்கின்றன. தஞ்சாவூருக்கும் திருவாரூருக்கும் இடையே அமைந்துள்ள ஊர், நீடாமங்கலம். பசுமை பரப்பும் உன்னத பணியால் பலரின் கவனத்தை ஈர்த்துவருகிறது இந்த ஊர்.

மரக்கன்றுகளுடன் கிரீன்நீடா
மரக்கன்றுகளுடன் கிரீன்நீடா
ஆயிரம் கன்றுகள் அன்பளிப்பாக கொடுப்பதைவிட, நன்கு வளர்ந்த 20, 30 மரக்கன்றுகள் நடவுசெய்து, முறையாக பராமரித்து வளர்ப்பது சிறப்பானது.
ராஜவேலு

இப்பகுதியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஒன்றாக இணைந்து, `கிரீன்நீடா' என்ற அமைப்பை உருவாக்கி, மரம் வளர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தனித்துவமான வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதாலும், முழு அர்ப்பணிப்போடு செயல்படுவதாலும் இவர்களது செயல்பாடுகளுக்கு உத்தரவாதமான வெற்றி கிடைத்துவருகிறது. தரமான மரக்கன்றுகளை உற்பத்தி செய்து, இலவசமாக வழங்கி வருகிறது கிரீன் நீடா. மரம் வளர்ப்பில் உண்மையான அக்கறையும், தீவிரமான ஆர்வமும் கொண்டவர்கள் மட்டுமே, கிரீன் நீடாவிடமிருந்து கன்றுகளைப் பெறமுடியும். மரக்கன்றுகளை இலவசமாக வழங்குவதோடு மட்டும் இவர்களது பசுமைப் பணி முடிந்துவிடுவதில்லை. இவர்களே நேரடியாக களத்தில் இறங்கி, மரம் வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களது முயற்சியால் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேர்பிடித்து, வளரந்து கொண்டிருக்கின்றன. இதன் ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு நம்மிடம் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள் ஒவ்வொன்றும் புதுமையானவை.

``டெல்டாவின் இதய பகுதினு நீடாமங்கலத்தை சொல்லுவாங்க. இது கிராமப்புறப் பகுதி. ஆனால் இங்க மரங்கள் அதிகம் கிடையாது. எங்க ஊர்ல வெண்ணாறு, கோரை ஆறு, பாமணி ஆறு ஆகிய மூன்று ஆறுகள் ஓடுது. ஆற்றுப்படுகை அதிகம். இங்க காய்கறி, கீரை செழிப்பா விளையும். இதனால் எங்க ஊர்மக்கள், இதை சாகுபடி செய்றதுலயும் விற்பனை செய்றதுலயுமே ஈடுபாடோடு இருந்துட்டாங்க. மரம் வளர்ப்பு குறித்த சிந்தனை அதிகம் இல்லாம போயிடுச்சி. கடைத் தெரு, பேருந்து நிறுத்தம் மட்டுமல்ல, வயல்வெளிகளுக்கு போகும் சாலைகள்கூட, வெறிச்சோடிதான் கிடக்கும். இதனால் வெயில் வாட்டி எடுக்கும். இந்த நிலையில்தான், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துல வேலைகிடைச்சி, நான் சென்னைக்குப் போனேன். அது மெட்ரோபாலிட்டன் சிட்டியாக இருந்தாலும் கூட, அடையாறு, நுங்கம்பாக்கம் ஜி.எஸ்.டி. பவன் உள்ளிட்ட பகுதிகள்ல பச்சை பசேல்னு பெரிய பெரிய மரங்கள் நிறைஞ்சிருக்குறதை பார்த்து வியந்துபோனேன். அக்னி வெயில் காலங்கள்ல கூட இந்த பகுதிகள் குளிர்ச்சியாக இருக்கு.

மரக்கன்றுகளுடன் குழந்தைகள்
மரக்கன்றுகளுடன் குழந்தைகள்

இதுமாதிரி நீடாமங்கலத்துலயும் மரங்களை உருவக்கணும்ங்கற எண்ணம் எனக்கு துளிர்விட ஆரம்பிச்சுது. இதுக்கிடையில 15 ஆண்டுகளுக்கு முன்னாடி, நீடாமங்கலம் ரேஷன் கடைக்கிட்ட நான் வச்ச, இயல்வாகை மரம், நல்லா வளர்ந்து நிழல் கொடுக்க ஆரம்பிச்சது. `இது ராஜவேலு வச்ச மரம். இது இல்லைனா, வெயில்லதான் வாடணும்'னு ஊர்மக்கள் நெகிழ்ந்து போனதோடு, என்னை பார்க்கும் போதெல்லாம், வாழ்த்துவாங்க. இந்த ஊக்கத்தாலும் உந்துதலாலும், 'கிரீன் நீடா' என்ற பெயரில் அமைப்பைத் தொடங்கி, மரம் வளர்ப்பில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினோம். இதுல 20 பேர் உறுப்பினரா இருக்காங்க. என்னோட மாத சம்பளத்துல ஒரு குறிப்பிட்ட பகுதியை இதுக்கு செலவு பண்றேன். மற்ற உறுப்பினர்களும் தங்களால் முடிஞ்ச உதவிகளைச் செய்றாங்க. எங்களோட செயல்பாடுகளைப் பார்த்துட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறையுள்ள பலர், பலவிதமான பங்களிப்புகள் செய்றாங்க.

நான் சென்னையில் வேலை பார்த்தாலும் கூட, வாரம்தோறும் நீடாமங்கலம் வந்துடுவேன். மற்ற விடுமுறை நாள்களையும் மரம் வளர்ப்புக்கு பயன்படுத்திக்கிறேன். என்னோட வீட்டுல எப்பொழுதும் மரக்கன்றுகள் உற்பத்தியாகிட்டே இருக்கும். என் மனைவியும் மகள்களும் தண்ணீர் ஊற்றி பராமரிக்குறாங்க. செம்மண், மணல், மாட்டு எரு, மண்புழு உரம் கலந்து படுக்கை அமைத்து, அதுல விதைகளைப் போட்டு, உற்பத்தி செய்றதுனால, எல்லா கன்றுகளுமே தரமானதாக வளருது. சின்ன கன்றுகளாக கொடுத்தால் அதன் பிழைப்புத்திறனுக்கு உத்தரவாதம் இருக்காதுங்கறதுனால, 6-12 மாத வயதுடைய, நல்லா வளர்ந்த நிலையில் பெரிய கன்றுகளாக கொடுக்குறோம். மாதம்தோறும் அதன் வளர்ச்சிக்கேற்ப, பெரிய பைகள்ல கன்றுகளை மாற்றிக்கிட்டே இருப்போம்.

பெரிய கன்றுகளை நடவு செஞ்சாதான் அது குறுகிய நாள்கள்லயே வேகமாக வளரும். பைகள்ல மண்ணோடு, எருவும் கலந்துபோடுவோம். ஆனால் மரக்கன்றுகளை விற்பனை செய்யும் நர்சரிகள், லாப நோக்கத்துல இதையெல்லாம் கடைப்பிடிக்கிறதே இல்லை. திருமணம் உள்ளிட்ட விழாக்கள்ல, மரக்கன்றுகள் கொடுக்குறது இப்ப அதிகமாகி இருக்கு. நோக்கம் நல்லதாக இருந்தாலும் கூட, அதனால் முழுமையான பலன் கிடையாது. ஆயிரம், இரண்டாயிரம்னு அதிக என்ணிக்கையில் கன்றுகள் வாங்க வேண்டியிருப்பதால், 1 ரூபாய், 2 ரூபாய்க்கு குறைந்த விலைக்கு கன்றுகள் வாங்குறாங்க. விழாக்களுக்கு வந்து செல்லக்கூடியவங்க, கையில் எளிதாக எடுத்துக்கிட்டுப் போறதுக்கு, சின்ன பைகள்ல உள்ள கன்றுகள்தான் வசதியாக இருக்கும்னு நினைச்சும் அது மாதிரியான கன்றுகளை வாங்குறாங்க. இதை நர்சரிக்காரங்க நல்லா பயன்படுத்திக்குறாங்க. அதுமாதிரியான கன்றுகள் உயிர் பிடிச்சி வளர்வது சிரமம். ஓரிரு நாள்கள் தண்ணீர் இல்லைனாலே, செத்துடும். அதிகமாக தண்ணீர் கொடுத்தாலும் அழுகிடும்.

மரக்கன்றுகள்
மரக்கன்றுகள்

விழாக்கள்ல கலந்துக்கிட்டு அன்பளிப்பாக கன்றுகள் வாங்குறவங்கள்ல பலபேர், அதை வீட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போயி நடவு செய்றதே இல்லை. கல்யாண மண்டபம் வாசல்ல நிக்கக்கூடிய, பைக்ல மாட்டிவிட்டுட்டுப் போயிடுறாங்க. திருமண விழா நடத்தக்கூடியவங்க, அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகள் வாங்கி, நன்றி அன்பளிப்பாக கொடுக்குறதைவிட, நல்லா தரமான பெரிய கன்றுகளை வாங்கி, பொண்ணு, மாப்பிள்ளை கையால், நட்டு வைக்க செய்யலாம். இருவீட்டார் குடும்ப உறுப்பினர்களும் கன்றுகள் நடவு செய்யலாம். ஆயிரம் கன்றுகள் அன்பளிப்பாக கொடுப்பதை விட, நன்கு வளர்ந்த 20, 30 மரக்கன்றுகள் நடவு செய்து, முறையாக பராமரித்து வளர்ப்பது சிறப்பானது. இதை நாங்க தீவிரமாக பிரச்சாரம் செய்வதோடு, பெரிய கன்றுகளை இலவசமாக நாங்களே கொடுக்குறோம். இது தெரிஞ்சு, பல பேர் இப்ப எங்களை அணுகுறாங்க. இதுக்கு சில விதிமுறைகளை கடைப்பிடிக்குறோம்.

உண்மையான அக்க்றையோடு, ஆர்வத்தோடு மரம் வளர்ப்பாங்களாங்கறதை, அவங்க பேச்சிலேயே கண்டுபிடிச்சிடுவோம். குழி எடுத்து வச்சிருக்கணும். சுற்றுச்சுவர் இல்லாத இடமாக இருந்தால் கூண்டு, தயாராக இருக்கணும். இதையெல்லாம் நாங்க நேர்ல ஆய்வு பண்ணிட்டுதான் கன்று கொடுப்போம். வடுவூரில் ஒருத்தர், தன் மகனின் பிறந்தநாள் அன்னைக்கு மரம் நடவு செய்யணும்னு ஆசைப்பட்டார். குழி எடுத்து, கூண்டுகளும் தயாராக வச்சிருந்தார். 100 கன்றுகள் வச்சிக்கொடுத்தோம். வடுவூரின் பழைய பெயர் மகிழம் காடு. அங்கு மகிழம் மரங்களை மீட்டெடுக்க, அந்த ஊரில் கிரீன் நீடாவின் தனிப்பட்ட முயற்சியில், பொது இடங்கள்ல 200 மகிழம் கன்றுகளை நடவு செஞ்சி, கூண்டு அமைச்சிருக்கோம். நீடமாங்கலம் பேருந்து நிறுத்ததுல நிழற்குடை இல்லாததால, மக்கள் ரொம்பவே சிரமப்படுறாங்க. இயல்வாகை, புங்கன், மந்தாரை மரக்கன்றுகள் வச்சோம். ஒரு டீக்கடைக்காரர் தண்ணீர் ஊற்றி பராமரிக்குறார். நான்கு மாதங்கள்லயே நல்லா நிழல் கொடுக்க ஆரம்பிச்சிடுச்சி. ஒரு வங்கி அருகில் மரம் வச்சோம். அந்த வங்கியின் மேலாளர் தினமும் ஆர்வத்தோடு தண்ணீர் ஊற்றிக்கிட்டு இருக்கார்.

பள்ளிக்கூட வளாகங்கள்லயும் நூற்றுக்கணக்கான மரங்கள் வச்சிருக்கோம். ஒரு சில ஆசிரியர்களும், மாணவர்களும் கண்ணும் கருத்துமாக தண்ணீர் ஊற்றி பராமரிக்குறாங்க. கோயில்கள்ல, செண்பகம், மகிழம் போன்ற பூ தரும் மரங்கள் வச்சிக்கிட்டு இருக்கோம். தினமும் பூ தேவைப்படும் என்பதால், அர்ச்சகர்கள் ஆர்வத்தோடு தண்ணீர் ஊற்றி பராமரிப்பாங்க. வீடுகளுக்கு பழம் தரும் மரங்கள் கொடுக்குறோம். தண்ணீர் ஊற்றி சிறப்பாக பராமரிக்குறங்களுக்கு, பரிசு கொடுத்து கௌரவிப்போம். பசுமை தீபாவளி கொண்டாடுவதை வழக்கமாக வச்சிருக்கோம். வெடி வெடிப்பதை விட, செடி வைப்பது சிறப்பானதுனு பிரச்சாரம் செஞ்சோம். மக்கள் ஆர்வமாயிட்டாங்க. தீபாவளி அன்னைக்கு, புத்தாடை உடுத்தி, அவங்க வீட்டு வாசல்ல, அவங்க கையாலயே கன்னு நட வச்சோம். கூண்டுகளும் அமைச்சிக் கொடுத்தோம்.

பொங்கல், சுதந்திர தினம், நிழல் இல்லா நாள், உலக சுற்றுச்சூழல் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம் இதுமாதிரி முக்கியமான நாள்கள்ல, அதிக எண்ணிக்கையில் மரம் நடவு செய்வதை வழக்கமாக வச்சிருக்கோம். அரசியல் தலைவர்கள் பிறந்த நாள்களுக்கு இதை கடைப்பிடிக்குறதில்லை. கன்றுகளாவது கொடுங்க, நாங்க வச்சிக்குறோம்னு கட்சிக்காரங்க கேட்குறாங்க. நாங்க தர்றதில்லை. காரணம், அந்த ஒருநாள் போட்டோ எடுத்து, போஸ் கொடுத்துட்டுப் போயிடுவாங்க. பரமாரிக்க மாட்டாங்க. ஒருவேளை தானாகவே வேர் வளர்ந்தாலும், அரசியல் காழ்ப்புணர்ச்சியில் மாற்றுக் கட்சிக்காரங்களால் ஏதேனும் சேதம் ஏற்பட வாய்ப்புண்டு. இதனால்தான் தவிர்க்குறோம். நீடாமங்கலம் ரயில் நிலையம் பக்கத்துல, பேரூராட்சிக்கு சொந்தமான இடத்துல, புதர் மண்டி கிடந்துச்சு. அங்க குறுங்காடு உருவாக்க ஆயிரம் கன்றுகள் நடவு செஞ்சிருக்கோம். கொய்யா, நாவல், மா, பலா, மாதுளை உள்ளிட்ட பழம் தரும் மரங்களை நடவு செஞ்சோம்.

பழம் தரும் மரங்கள் இருந்தால்தான், பறவைகளின் வருகை அதிகமாகி, விதைகள் பரவலாகி, சுற்றுவட்டார பகுதிகள்ல தானாக மரங்கள் வளரும். நீடாமங்கலத்துல ரயில், பேருந்துகளின் போக்குவரத்து ரொம்ப அதிகம். நச்சுப் புகையால் காற்று மாசடைஞ்சிடுச்சு. வெப்பமும் அதிகமாகியிருக்கு. காற்றை சுத்தப்படுத்த, நாங்க உருவாக்கிக்கிட்டு இருக்கும் குறுங்காடு பெரும் துணையாக இருக்கும். நீடாமங்கலத்தின் நுரையீரலாக இந்த குறுங்காடு விளங்கப் போகுது. பேரூராட்சி ஊழியர்களும், கிரீன் நீடாவும் தினமும் தண்ணீர் ஊற்றி பராமரிக்குறோம். நீடாமங்கலத்துக்கு பக்கத்துல உள்ள கானூரில் 2019-ம் ஆண்டை உணர்த்துவிதமாக, 2019 பனை விதைகள் ஊன்ற முடிவு செஞ்சோம். எங்க அமைப்புல 20 பேர் மட்டுமே இருக்குறதுனால, அதிக எண்ணிக்கையில் ஆட்கள் தேவைப்பட்டாங்க. வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த ஜூலியட் ஜெயசிந்தாலை அணுகினோம். இதுக்கு நூறு நாள் வேலையாள்களை பயன்படுத்த வாய்ப்பிருக்கானு கேட்டோம். அரசு விதிமுறைப்படி இது சாத்தியம்தான்னு சொல்லி, 200 பேரை அனுப்பிவச்சாங்க. வெற்றிகரமாக பனை விதைச்சோம். விகடன் இணையத்துல இது செய்தியாக வெளியானது. அதைப் படிச்சிட்டு, தமிழ்நாட்டின் பல பகுதிகள்ல, 100 நாள் வேலையாள்களை பயன்படுத்தி, பனை விதைக்குறாங்க.

சவுதி அரேபியாவில் உள்ள தமிழ்ச்சங்கத்தின் நிதியுதவியுடன் இதே கானூரில், புதிதாக ஒரு பெரிய குளம் வெட்டி, சுற்றிலும் பனை விதைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கோம். சென்னை தரமணியில் உள்ள ஐ.டி ஊழியர்கள் அங்கிருந்து மகிழம், இயல்வாகை, பூந்திக்காய், இலுப்பை உள்ளிட்ட விதைகளை சேகரிச்சிக்கிட்டு வந்து என்கிட்ட கொடுக்குறாங்க. நான் வேலைபார்க்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பணியாளர்களும், அவங்க பகுதியில் கிடைக்கக்கூடிய விதைகளை சேகரிச்சி கொடுக்குறாங்க. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள்ல உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மூலமாகவும் பலவிதமான விதைகள் கிடைக்குது. இவங்களோட பங்களிப்பு எல்லாம் இருக்குறதுனாலதான், மரம் வளர்ப்பில் கிரீன் நீடா வெற்றிகரமாக நடைப்போடுது.” என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார் ராஜவேலு.

அடுத்த கட்டுரைக்கு