Published:Updated:

'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை

'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை

'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை

தேனி மாவட்டத்தில் இன்று (26ம்தேதி) காலை மாவட்ட விளையாட்டு அரங்கில் 69வது குடியரசு தின விழாக் கொண்டாட்டம் மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்றது. இதற்காக விரிவான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. அதனை முழுமையாகச் செய்யவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது ஓர் இட்லி... ஒரு வடை... குடியரசு தின விழாவில் பரிசுகள், சான்றிதழ்கள் பெறுவதற்கும்,  கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் வந்திருந்தனர். காலை 7 மணிக்கெல்லாம் விளையாட்டு அரங்கத்துக்கு வந்துவிட்ட இவர்களுக்கு வழக்கமாக மாவட்ட ஐடிஐ வளாகத்தில் உணவு கொடுப்பது வழக்கம். அந்த வகையில் இன்று காலை கொடுக்கப்பட்ட உணவு வெறும் ஓர் இட்லி, ஒரு வடை மட்டுமே என்பது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது. சிலர் ஒரு இட்லி சாப்பிட்டுவிட்டு இன்னொரு இட்லி வாங்க முடியாமல் பசியோடு திரும்பிய காட்சி பலரை வேதனையடைய வைத்தது.

விழாவுக்கு வந்திருக்கும் அரசு அதிகாரிகளுக்கு ஸ்வீட், காரம் முதல் சகல ஏற்பாடுகளையும் செய்யும் மாவட்ட நிர்வாகத்தால், விழாவுக்கு அழகு சேர்க்கும் மாணவ- மாணவிகளை கண்டுகொள்ளாமல்விட எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை. இது ஒரு புறம் என்றால், மாணவ- மாணவிகளுடன் அவர்களின் பெற்றோர்களும் உடன் வந்திருக்கிறார்கள். பார்வையாளர்களாக அமர்ந்திருக்கும் அவர்கள் அனைவரும் ஒரு தண்ணீர் பாக்கெட்கூட வழங்கவில்லை என்பதே வேதனை. தங்கள் பிள்ளைகள் பரிசு வாங்குவதையும், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையும் மட்டும் பார்த்துப் பசியாற முடியும் என்பது போல உள்ளது மாவட்ட நிர்வாகத்தில் இச்செயல்.

ஏன் இவ்வளவு அலட்சியம் என்று விசாரித்தபோது, "எந்த அரசு விழாவாக இருந்தாலும் இப்படித்தான் நடந்துகொள்ளும் மாவட்ட நிர்வாகம். அவர்களுக்கு அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் மட்டும்தான் கண்ணுக்குத் தெரிவார்கள். ஒருமுறை இதே போன்ற விழா  ஒன்றிற்குக்  கொண்டுவரப்பட்ட தண்ணீர் பாக்கெட்டுகள் அரசு அதிகாரிகளுக்கு மட்டும் வழங்கிவிட்டு மீதி பாக்கெட்டுகள் ஆட்டோவில் எடுத்துச்செல்லும் போது, ஆட்டோவை மறித்து மாணவ- மாணவிகள் தண்ணீல் பாக்கெட்டுகளை எடுத்த சம்பவம் இரண்டு வருடத்துக்கு முன்பு  நடந்திருக்கிறது. விழா நடக்கும் விளையாட்டு அரங்கத்தைச் சுற்றி இரண்டு கிலோமீட்டருக்கு எந்தக் கடையும் இல்லை என்பதால் பல மாணவிகள் மயக்கமடைவதும் இங்கே நடக்கும். தண்ணீர் கொடுத்தோம், சாப்பாடு கொடுத்தோம் என்று பொய் கணக்கு மட்டும் எழுதிக்கொள்ளும் மாவட்ட நிர்வாகம், அவர்களில் குழந்தைகள் இங்கிருந்தால் இப்படிச்செய்வார்களா?" என்று வேதனை தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

அடுத்த கட்டுரைக்கு