Published:Updated:

சென்னையில் ஒரே நாளில் அதிரடிகாட்டிய அதிகாரிகள்!

சகாயராஜ் மு
சென்னையில் ஒரே நாளில் அதிரடிகாட்டிய அதிகாரிகள்!
சென்னையில் ஒரே நாளில் அதிரடிகாட்டிய அதிகாரிகள்!
சென்னையில் ஒரே நாளில் அதிரடிகாட்டிய அதிகாரிகள்!

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு, சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்ட உணவுப்பொருள்கள்,  வாட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறை சார்பாக அனைத்து மண்டலங்களிலும் சுகாதாரமற்ற, ஈ மொய்த்த பண்டங்கள் விற்பனை செய்யும் தெருவோரக் கடைகள், பள்ளிகளுக்கு அருகில் திறந்த வெளியில் விற்பனை செய்யப்படும் உணவுப்பண்டங்கள், ஐ.எஸ்.ஐ முத்திரையில்லாத, காலாவதி தேதி தாண்டி விற்பனை செய்யப்படும் குடிதண்ணீர் கேன்கள், குடிதண்ணீர் பாக்கெட்டுகள் போன்றவை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படுகின்றன.

கோடைக்காலத்தில் சுகாதாரமற்ற உணவுப் பண்டங்களால் வயிற்றுப்போக்கு, காலரா போன்ற பல நோய்கள் பரவ வாய்ப்புள்ளதால் பெருநகர மாநகராட்சி ஆணையாளர் தா.கார்த்திகேயன், சுகாதாரத்துறை அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு, சுகாதாரமற்ற உணவுப்பொருள்களை பறிமுதல் செய்ய அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து, சுகாதாரத்துறையினரால் மண்டலம் 1 முதல் 15 வரை உள்ள பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்ட உணவுப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடைகளின் உரிமையாளர்களுக்கு 83,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மண்டலம் 1 முதல் 15 வரை உள்ள சுகாதாரத்துறை அலுவலர்களால் அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்ட 201.9 கி.கி தடை செய்யப்பட்ட பான்பராக் மற்றும் புகையிலைப் பொருள்கள், 1368 கி.கி சுகாதாரமற்ற உணவுப்பொருள்கள், தரமற்று விற்பனை செய்யப்பட்ட 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட 149 வாட்டர் கேன்கள், ஒரு லிட்டர் கொள்ளளவு 12 வாட்டர் பாட்டில்கள், 7181 குடிநீர் பாக்கெட்டுகளும், 40 மைக்ரான்களுக்கு கீழ் விற்பனை செய்யப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 127.70 கி.கி பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தெருக்களில் சுற்றி திரிந்த 61 நாய்கள் மற்றும் 13 மாடுகள் பிடிக்கப்பட்டது. இதில் மொத்தம் 25,750 ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.

இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து  நடைபெறும் என பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.