Published:Updated:

முதல்வருக்கு கோடான கோடி நன்றிகள்! அப்படியே... அந்த இலவச வேட்டி, சேலையும்?!

இலவச வேட்டி, சேலை
News
இலவச வேட்டி, சேலை

இப்போது ரேஷன் கடைகளுக்குச் சென்றால், `இன்னமும் ஸ்டாக் வரல’ என்கிற பல்லவியையே பாடுகின்றனர் பெரும்பாலான ரேஷன் கடைகளின் ஊழியர்கள். இதைவிடக் கொடுமை, வழக்கம்போல ரேஷன் பொருள்கள் வாங்குபவர்களுக்கு `வேட்டி/சேலை வழங்கப்பட்டுவிட்டது’ என்று எஸ்.எம்.எஸ் வருவதுதான்.

முதல்வருக்கு கோடான கோடி நன்றிகள்! அப்படியே... அந்த இலவச வேட்டி, சேலையும்?!

இப்போது ரேஷன் கடைகளுக்குச் சென்றால், `இன்னமும் ஸ்டாக் வரல’ என்கிற பல்லவியையே பாடுகின்றனர் பெரும்பாலான ரேஷன் கடைகளின் ஊழியர்கள். இதைவிடக் கொடுமை, வழக்கம்போல ரேஷன் பொருள்கள் வாங்குபவர்களுக்கு `வேட்டி/சேலை வழங்கப்பட்டுவிட்டது’ என்று எஸ்.எம்.எஸ் வருவதுதான்.

Published:Updated:
இலவச வேட்டி, சேலை
News
இலவச வேட்டி, சேலை

அப்புறம் மக்களே... தமிழ்நாட்டில் பொங்கல் எல்லாம் சீரும் சிறப்புமாக முடிந்திருக்கிறது. விவசாயிகளின் கோரிக்கை மற்றும் போராட்டங்களை அடுத்து பொங்கல் கரும்பை நேரடியாகவே விவசாயிகளிடம் கொள்முதல் செய்து குளிர்வித்துவிட்டது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு.

கொள்முதலில் சின்னச் சின்ன குற்றங்குறை இருந்தாலும், `குமுதா ஹேப்பி’ என்கிற வகையில் பெரும்பாலானவர்களுக்கு மகிழ்ச்சியே. கொடுத்த கரும்பு, அரிசி, சர்க்கரையில் சின்னச் சின்னதாகக் குறைகள் இருந்தாலும், மகிழ்ச்சியே. அந்த 1,000 ரூபாய் சுளையாகக் கைக்கு வந்ததில் கூடுதல் மகிழ்ச்சியே. ஆக, தமிழ்நாடே வெகு சிறப்பாகப் பொங்கலைக் கொண்டாடி தீர்த்திருக்கிறது. அதிலும் வழக்கத்தைவிட, கூடுதலாகவே கொண்டாடித் தீர்க்க வைத்துவிட்டது `ஆளுநரின் தமிழ்நாடு’! சொந்த ஊர்களுக்குச் சென்றவர்களெல்லாம் திரும்பிவிட்டனர். ஆகக்கூடி முதல்வருக்கு கோடி கோடி நன்றிகள். ஆனால், ஒரே குறை... அந்த இனாம்!

ரேஷன் கடை
ரேஷன் கடை
உ.பாண்டி

ஆம், பொங்கலுக்கு தமிழக மக்களுக்கு விலையில்லாமல் வழங்கப்பட வேண்டிய வேட்டி/சேலைகளை பல இடங்களிலும் ரேஷன் கடைகளில் வழங்கப்படவில்லை. பொங்கல் பரிசுகளை வழங்கியபோது அதைப் பற்றி ரேஷன் கடை ஊழியர்கள் வாயே திறக்கவில்லை. கேட்டவர்களுக்கு மட்டும், `ஸ்டாக் வரவில்லை. பொங்கல் முடிந்து வழங்கப்படும்’ என்று சொல்லி, பணத்தையும் கரும்பையும் கொடுத்து வாயை அடைத்தனர். சரி, பொங்கலுக்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று அடுத்தடுத்த வேலைகளைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் மக்கள்.

ஒரு தெருவில் உள்ள கடையில் வேட்டி/சேலை கொடுத்தார்கள். ஆனால், அருகிலுள்ள மற்றொரு தெருவில் கொடுக்கவில்லை. `எங்க தெருவுல கொடுத்துட்டாங்களே... உனக்கு ஏன் கொடுக்கல?’ என்பது போன்ற கேள்விகளோடு பொங்கல் வைத்து முடித்த மக்கள், இப்போது ரேஷன் கடைகளுக்குச் சென்றால், `இன்னமும் ஸ்டாக் வரல’ என்கிற பல்லவியையே பாடுகின்றனர் பெரும்பாலான ரேஷன் கடைகளின் ஊழியர்கள். இதைவிடக் கொடுமை, வழக்கம்போல ரேஷன் பொருள்கள் வாங்குபவர் களுக்கு `வேட்டி/சேலை வழங்கப்பட்டுவிட்டது’ என்று எஸ்.எம்.எஸ் வருவதுதான்.

பொங்கல் பரிசு!
பொங்கல் பரிசு!

பொதுவாக ரேஷன் கடைகளில பொருள்களை வாங்கினால், நாம் என்னென்ன பொருள்கள் வாங்கினோம் என்று நம்முடைய மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ் வரும். `பத்து கிலோ அரிசி, 2 கிலோ கோதுமை, 1 கிலோ பச்சரிசி’ என்று நீங்கள் வாங்கியிருந்தாலும், ஒரு கார்டுக்கு ஒரு மாதத்துக்கு அரசாங்கத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் மொத்தப் பொருள்களையும் வாங்கியதுபோலத்தான் பெரும்பாலும் எஸ்.எம்.எஸ் வரும். அதாவது, நான்கு பெரியவர்கள் இருக்கும் அரிசி கார்டுக்கு ஒரு மாதத்துக்கு 20 கிலோ அரிசி (புழுங்கல்/பச்சை), சர்க்கரை 2 கிலோ, கோதுமை 10 கிலோ (சென்னை மாநகரம் மற்றும் மாவட்ட தலைநகரம்), துவரம் பருப்பு 1 கிலோ, பாமாயில் ஒரு கிலோ வழங்கப்படுகிறது. மண்ணெண்ணெய்யானது சமையல் எரிவாயு இணைப்பைப் பொறுத்து வழங்கப்படுகிறது.

மேற்கண்ட பொருள்களை, மேற்சொன்ன அளவில் நீங்கள் வாங்குகிறீர்களோ... இல்லையோ... அனைத்தையுமே வாங்கிவிட்டது போலத்தான் எஸ்.எம்.எஸ் வரும். பெரும்பாலானவர்கள் இதையெல்லாம் கண்காணிப்பதில்லை/கண்டுகொள்வதில்லை. `நமக்குத் தேவையான பொருளை வாங்கிவிட்டோம்... அவன் எவ்வளவு கணக்கு எழுதினா என்ன?’ என்று அமைதியாக இருந்துவிடுகிறார்கள். அந்தப் பொருள்களை யெல்லாம் வெளியில் விற்றுவிடுகிறார்கள் ரேஷன் கடை ஊழியர்கள். அதுமட்டுமல்ல, ஒரு கார்டுக்கு ஒதுக்கப்பட்ட மொத்தப் பொருள்களையும் வாங்க நினைத்தாலும் வாங்க முடியாத சூழலையும் திட்டமிட்டே உருவாக்குவார்கள். அதாவது, கோதுமை ஸ்டாக் இல்லை... அரிசி ஸ்டாக் இல்லை... சர்க்கரை ஸ்டாக் இல்லை என்று சொல்லி, 5 கிலோ கேட்டால், 2 கிலோ கொடுப்பார்கள். அதேசமயம், எஸ்.எம்.எஸ் என்னவோ, ஒரு குடும்பத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்தப் பொருளும் வாங்கப்பட்டதுபோலத்தான் வரும். இப்படியும் கொள்ளையடிப்பார்கள்.

ரேஷன் கடை
ரேஷன் கடை

சரி, இங்கே எதற்கு இந்தக் கதையெல்லாம் என்கிறீர்களா? வாங்காத பொருள்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் அதே பாணியில், வாங்காத வேட்டி/சேலைக்கும் எஸ்.எம்.எஸ்-கள் வர ஆரம்பித்துள்ளன. அதாவது, அரிசி, சர்க்கரை, கோதுமை என்கிற வரிசையில் சந்தடி சாக்கில் வேட்டி/சேலை என்பதையும் சேர்த்துவிட்டு மொத்தத்தையும் சுருட்டும் வேலை ஆரம்பமாகியுள்ளது.

இதுநாள் வரை வாங்காத பொருளுக்கும் சேர்த்து எஸ்.எம்.எஸ் வந்தாலும் கண்டுகொள்ளாத மக்களே... உஷார். உடனே ஓடோடிப்போய் உங்களுக்கு உரிமையுள்ள வேட்டி/சேலையைக் கட்டாயம் கேட்டு வாங்குங்கள்.

ரேஷன் கடையில் ஆய்வு
ரேஷன் கடையில் ஆய்வு

அப்புறம் முதல்வர் அவர்களே... பொங்கல் கரும்பு, பொங்கல் பணம் இதிலெல்லாம் திறம்பட செயலாற்றி, பெரிதாகக் குற்றம்குறை ஏதுமில்லாமல் பார்த்துவிட்டீர்கள். அப்புறம், `நியாய விலைக்கடை ஊழியர்களும் அதிகாரிகளும் பொதுமக்களிடம் நியாயமாகவும் மரியாதையாகவும் நடந்துகொள்ள வேண்டும்’ என்று பொங்கலுக்கு முன்பாக கறார் உத்தரவுபோட்டு, அதையும் சாதித்துவிட்டீர்கள். ஆனால், அந்த இனாம்... அதுதான் வேட்டி/சேலை விஷயத்திலும் கொஞ்சம் உங்கள் கவனத்தைத் திருப்பினால் நன்றாக இருக்கும்.

பார்த்து செய்யுங்கள்!

- பூநி