Published:Updated:

குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பிரசித்திப் பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசை முத்தாரம்மன் கோயில் தசரா 10 நாள்கள் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் வெகுவிமரிசையாக நடைபெறும் தூத்துக்குடி மாவட்டம் குலசை என்றழைக்கப்படும் அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் தசரா 10 நாள்கள் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இன்று காலை ரதவீதிகள் வழியாக யானையின் மீது கொடிப்பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து சுவாமி – அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துக்குப் பிறகு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று காளி பூஜை நடைபெற்றது.

10 நாள்கள் மாலையணிந்து விரதமிருக்கும் பக்தர்கள் இன்று காலை முதல் கடலில் நீராடி மாலை அணிந்து வருகின்றனர். தங்கள் குறைகள் தீர, காளி, அம்மன், பரமசிவன், பார்வதி, சரஸ்வதி, விநாயகர், முருகர், கிருஷ்ணர், பிரம்மா, முனிவர், சுடலைமாடன், கருப்பசாமி, குறவன், குறத்தி, தாத்தா, பாட்டி, ஒளவையார், நாரதர், திருவள்ளுவர், பிச்சைக்காரன், போலீஸ், வக்கீல், டாக்டர், நர்ஸ், முயல், கரடி, புலி என தங்கள் மனதில் நினைத்த வேடமணிந்து வீடு வீடாக தர்மம் எடுத்து முத்தாரம்மனுக்குக் காணிக்கை செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றுவர். கோயிலில் மாலை அணிய தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்ட பக்தர்களும் குலசையில் குவிந்துள்ளனர்.

திருவிழாவின் முதல் நாளான இன்று அம்பாள் முத்தாரம்மன் துர்க்கை அலங்காரத்திலும், 2-ம் நாள் விஸ்வகாமேஷ்வர் அலங்காரத்திலும், 3-ம் நாள் பார்வதி தேவி, 4-ம் நாள் பாலசுப்பிரமணியர், 5-ம் நாள் நவநீதகிருஷ்ணர், 6-ம் நாள் மகிஷாசுரமர்த்தினி, 7-ம் நாள் ஆனந்த நடராசர், 8-ம் நாள் அலைமகள், 9-ம் நாள் கலைமகள் அலங்காரத்திலும் பல்வேறு வாகனங்களில் மாலையில் ரத வீதிகளில் வீதியுலா வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 10-ம் நாள் திருவிழாவான வரும் 30-ம் தேதி இரவு மகிசாசூரமர்த்தினி திருக்கோலத்தில் எழுந்தருளி கடற்கரையில் அசுரரை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கலந்துகொள்ள பக்தர்கள் வசதிக்காக தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்து குலசைக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அடுத்த கட்டுரைக்கு