Published:Updated:

கொம்பன் காளை நினைவிடத்தில் அஞ்சலிசெலுத்திய விஜயபாஸ்கர்..!

பாலஜோதி.ரா
கொம்பன் காளை நினைவிடத்தில் அஞ்சலிசெலுத்திய விஜயபாஸ்கர்..!
கொம்பன் காளை நினைவிடத்தில் அஞ்சலிசெலுத்திய விஜயபாஸ்கர்..!

சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய அமைச்சர் விஜயபாஸ்கர், அவர் பாசத்துடன் வளர்த்த ஜல்லிக்கட்டுக் காளை 'கொம்பன்' நினைவிடத்தில் நேற்று மாலை அஞ்சலிசெலுத்தினார்.


எந்த ஒரு ஜல்லிகட்டுப் போட்டியிலும் யார் பிடியிலும் சிக்காத, கட்டுக்கடங்காத காளையாக, சிறுவர் முதல் பெரியோர் வரை எல்லோர் மனதையும் கவர்ந்த 'கொம்பன்', கடந்த ஞாயிற்றுக்கிழமை (11-ம் தேதி) இலுப்பூரில் நடந்த ஜல்லிகட்டில் இறந்தது. வாடி வாசலை விட்டு வெளியே வரும்போது, அங்கிருந்த கல்தூணில் மோதி அங்கேயே சுருண்டுவிழுந்து மரணமடைந்தது. அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி எல்லோரையும் அனுதாபப்படவைத்தது. இதை நேரில் பார்த்த மாடுபிடிவீரர்கள், பார்வையாளர்கள், அரசு அதிகாரிகள் அத்தனை பேரும் அதிர்ச்சியடைந்தனர்.

காரணம், அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை என்பதையும் கடந்து, தனக்கென தனி செல்வாக்கை கொம்பன் காளை உருவாக்கி வைத்திருந்தது. மாவட்டத்தில் எங்கு ஜல்லிக்கட்டு நடந்தாலும், மாடுபிடிவீரர்களும் பார்வையாளர்களும் கேட்கும் முதல் கேள்வி, 'கொம்பன் வந்திருக்கானா?' என்பதுதான். அந்த அளவுக்கு கட்சி வேறுபாடுகளைக் கடந்து எல்லோருக்கும்  செல்லப்பிள்ளையாக  இருந்தது கொம்பன். 

மாவட்டம் கடந்து, சமீபத்தில் நடந்த அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுகளிலும் கலந்துகொண்டு பிடிபடாத மாடாக கம்பீரம் காட்டியது இந்தக் காளை. தென்னலூர் ஜல்லிக்கட்டிலும் அப்படி கம்பீரம் காட்டவந்த காளை, எதிர்பாராத விதமாக வாடிவாசல் முகப்புத்தூணில் மோதி, உடனடியாக மரணமடைந்தது. மாவட்டத்தில் எங்கு ஜல்லிக்கட்டு நடந்தாலும் அதை விஜயபாஸ்கர்தான் தொடங்கிவைப்பார். ஆனால், தென்னலூர் ஜல்லிக்கட்டுக்கு அவர் வரவில்லை. காரணம் அவர் கடந்த 10 நாள்களாக சிங்கப்பூர் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

'கொம்பன்' மரணச் செய்தியை அவரது வீட்டைச் சேர்ந்தவர்கள் அமைச்சரிடம் சொல்லியிருக்கிறார்கள். அப்போதே அமைச்சர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். கொம்பன் எப்படி மரணமடைந்தது என்பதைக் காட்டும் ஸ்பாட் வீடியோவும் அவருக்கு அனுப்பப்பட்டது. அதைப் பார்த்து கண்கலங்கிவிட்டாராம். தன் தோட்டத்தில் கொம்பனுக்கென்று தனியாக ஷெட் போட்டு பராமரித்த இடத்திலேயே புதைக்கும்படி கூறியிருக்கிறார். அதன்படியே விஜயபாஸ்கரின் அப்பா செய்திருக்கிறார்.

இந்த நிலையில், நேற்று காலை சென்னைக்குத் திரும்பிய அமைச்சர், தன் அலுவல்களை முடித்துவிட்டு இலுப்பூர் வந்தார். அவரது வீட்டுக்குக்கூட போகாமல், நேராக கொம்பன் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலிசெலுத்தினார். அப்போது உடனிருந்த அமைச்சரின் உதவியாளர் வெங்கடேசனுடன் பேசினோம். அவர், 'அமைச்சர் அவ்வளவு பாசமா வளர்த்த காளைங்க அது. ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்றுதிரண்டு அஞ்சலி செலுத்தினாங்க. அமைச்சரோட கண் கலங்கிடுச்சு. கொம்னுக்கு இங்கு நினைவிடம் கட்டப்போறாங்க. அமைச்ர் போலவே, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கொம்பனை ரொம்பப் பிடிக்கும். அவரும் கொம்பனுக்கு அஞ்சலிசெலுத்த இன்னும் ரெண்டு நாள்ல வருகிறார்' என்று தெரிவித்தார்.