Election bannerElection banner
Published:Updated:

மங்களாபுரத்தில் களைகட்டிய மாசிமகம் ஜல்லிக்கட்டு!

மங்களாபுரத்தில் களைகட்டிய மாசிமகம் ஜல்லிக்கட்டு!
மங்களாபுரத்தில் களைகட்டிய மாசிமகம் ஜல்லிக்கட்டு!

மங்களாபுரத்தில் களைகட்டிய மாசிமகம் ஜல்லிக்கட்டு!

மாசி மகத்தை முன்னிட்டு மங்களாபுரத்தில்  ஜல்லிக்கட்டு நடைபெற்றது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திரளான பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்க்கக் குவிந்தார்கள்.

புதுக்கோட்டையை மாவட்டம் ஆலங்குடி அருகிலுள்ள மங்களாபுரத்தில்  மாசி மகத்தன்று ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இதனைக் காண்பதற்காக சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களிலிருந்து மக்கள்  ஏராளமாகக் கூடுவார்கள்.
இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு நேற்று காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. அம்புலியாறு அருகில் உள்ள வறண்ட கண்மாயில் இந்த ஜல்லிக்கட்டு நடந்தது.நைசான பவுடர் போன்று இருந்த கண்மாய் புழுதி பறக்க, வாடிவாசலிலிருந்து வழக்கம்போல் இளங்காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

வழக்கமாகப் பல மாவட்டங்களிலிருந்து காளைகள் வருவது வழக்கம். ஆனால்,இந்த மங்களாபுரம் ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த காளைகள் மட்டுமே அவிழ்த்துவிடப்பட்டன. 500 காளைகள் கலந்துகொண்டன. 250 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்து காளைகளை அடக்கக் காத்திருந்தனர். காளைகளையும்  மாடுபிடி வீரர்களையும் வழக்கம்போல் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.
பின்னர் சம்பிரதாயமாகக் கோயில் காளை ஒன்று அவிழ்த்து விடப்பட்டது. அடுத்தடுத்து வந்த காளைகளைப் பார்த்து மாடுபிடி வீரர்களும் பார்வையாளர்களும் அதிருப்தியாகக் குரல் எழுப்பினார்கள். காரணம்,வந்தவை எல்லாமே கன்றுக்குட்டி ரகங்கள். "ஏப்பா, கன்னுக்குட்டியை அடக்கி பரிசு வாங்கவா வந்தோம். பெருங்காளையை அவுத்து விடுங்கப்பா"என்று மாடு பிடி வீரர்கள் குரல் கொடுத்தார்கள்.

பார்வையாளர்களும் "அட,ஆமாங்கறேன். இதைப் பார்க்கவா மொட்டை வெயில்ல கால் கடுத்து நிக்கணும். பெருவெட்டு காளையைத் திறந்துவிடுங்கப்பா" என்று கடுகடுத்தார்கள். அருகில் வெள்ளரிக் கடை போட்டு விற்றுக்கொண்டிருந்த ஒரு அம்மாள், "வந்துருக்குறது பூரா கன்னுக்குட்டிங்கதாம்பா. ஒன்னு ரெண்டுதான் பெருமாடா இருக்கு" என்று தான் கவனித்ததை சத்தமாகக் கூற, பார்வையாளர்கள் மத்தியிலிருந்து கோரஸ் குரல் கேலியாக எழுந்தது. நேரம் செல்லச் செல்ல பெருங்காளைகள் வந்து சேர, ஜல்லிக்கட்டு களை கட்டியது. மாடு பிடி வீரர்களும் பார்வையாளர்களும் உற்சாகம் அடைந்தனர். காளைகளை அடக்கி,  கட்டில், பிளாஸ்டிக் சேர், குடம், பேன், குக்கர், உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை வென்றார்கள். இதில் மாடுகள் முட்டியதில் மாடு பிடி வீரர்கள் ஒரு சிலர்  காயமடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெற்ற இடத்தின் அருகே தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு