
சேலத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகை!
சேலத்தில் வசிக்கும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள், இன்று ஆண், பெண் மற்றும் குழந்தைகள் அனைவரும் வண்ணப் பொடிகள், வண்ண மலர்கள், வண்ணவண்ணத் தண்ணீரை ரெடி பண்ணி, ஒருவர்மீது ஒருவர் ஊற்றிக்கொண்டும், வண்ணப் பொடிகளைத் தூவிக் கொண்டும் நடனமாடி, கோலாகலமாக ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடினார்கள். ''இங்கு, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகப்பேர் வசிக்கிறோம். 10 ஆண்டுகளுக்கும் மேல் இங்கு குடியிருக்கிறோம். எங்களுடைய பண்டிகையில் மிக முக்கியமானது, ஹோலிப் பண்டிகை. ஹோலிப் பண்டிகை என்பது பக்த பிரகலாதன் கதை தொடர்புடையது.
ஶ்ரீமன் நாராயணனின் நாமத்தையே உச்சரித்த பக்த பிரகலாதனை கொல்வதற்காக இரணியனின் தூண்டுதலால் ஹோலிகா என்ற அரக்கி ஏவப்படுகிறாள். அடுத்தவருக்கு துன்பம் அளிக்கக் கூடாது என்றுதான் பிரம்மா ஹோலிகாவுக்கு பெரும் சக்திகளை அளித்திருந்தார். அதை மறந்த ஹோலிகா, பிரகலாதனைக் கொல்லுவதற்காகத் தன் மடியில் அமர்த்தி, தீயில் இறங்க முயன்றாள்.
இதனால், ஹோலிகா தர்மத்தை மறந்ததால், ஹோலிகாவின் ஆடையில் இருந்த அவளது சக்திகளை திருமால் வேகமாக காற்றால் அபகரிக்கச்செய்து, பிரகலாதன் மீது போர்வையாய் போர்த்தி, தீயிலிருந்து தடுத்து நிறுத்தினார். ஹோலிகா தீயில் கருகி சாம்பலானாள். இதையொட்டி, இந்தியா முழுவதும் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்பட்டுவருகிறது. ஒரு வாரத்திற்கு முன்பே இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஹோலிகா தகன நிகழ்ச்சி டெல்லி, மும்பை, வாரணாசி, துவாரகா, பாட்னா, நாக்பூர், உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும்.