Published:Updated:

"பாரம்பர்ய காளைகள்... தயிர் கடையும் மத்து; டிரங்கு பெட்டிகள்...!" தூள் கிளப்பிய கிராமியத் திருவிழா!

"பாரம்பர்ய காளைகள்... தயிர் கடையும் மத்து; டிரங்கு பெட்டிகள்...!" தூள் கிளப்பிய கிராமியத் திருவிழா!
"பாரம்பர்ய காளைகள்... தயிர் கடையும் மத்து; டிரங்கு பெட்டிகள்...!" தூள் கிளப்பிய கிராமியத் திருவிழா!

"பாரம்பர்ய காளைகள்... தயிர் கடையும் மத்து; டிரங்கு பெட்டிகள்...!" தூள் கிளப்பிய கிராமியத் திருவிழா!

ன்றைய தலைமுறை மாணவர்கள் நமது விழுமியங்களாக இருக்கும் பாரம்பர்ய விஷயங்களை, பொருள்களை, கிராமத்தின் தொன்மைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தனியார் பள்ளி ஒன்று, பாரம்பர்ய பொருள்களைக்கொண்டு இரண்டு நாள்கள் கிராமியத் திருவிழா மற்றும் கண்காட்சியை நடத்தி பாராட்டுப் பெற்றுள்ளது.

கிராமங்களில் விவசாயத்துக்குப் பயன்படும் காளை மாடுகள், விதவிதமான நாய் இனங்கள், இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப், உரல் என்று எண்ணற்றப் பொருள்களைக் கொண்டு இந்தத் திருவிழாவை பள்ளி ஆசிரியர்கள் நடத்தி இருக்கிறார்கள். மாணவர்களோடு எண்ணற்ற பெற்றோர்களும் பொதுமக்களும் இந்தத் திருவிழாவைப் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியத்தைச் சேர்ந்த குளத்துப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில்தான் இந்த அசத்தல் பாரம்பர்யக் கிராமியத் திருவிழா நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அனைத்து தனியார் பள்ளிகளும் பெற்றோர்களைக் கவருவதற்காக ஆண்டுவிழா நடத்துவது வழக்கம். அதுபோன்ற விழாவை மாற்றி, இளைய தலைமுறையினருக்குத் தேவையான ஒன்றை கொடுத்திருக்கிறது இந்தப் பள்ளியின் கிராமியத் திருவிழா. இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்ற கரூர் மாவட்ட மக்கள் மிகுந்த ஆச்சர்யம் அடைந்தனர். 

இந்த விழாவில் பாரம்பர்ய காளை இனங்களான மயிலைக்காளை, செவலை, காங்கேயம் வகை காளைகள் மற்றும் பசுக்கள் அணிவகுத்து நின்றிருந்தன. குதிரை இனங்கள் மற்றும் நாட்டுவகை நாய்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. தவிர, நீல வால் சேவல், கிளிமூக்கு சேவல், இரட்டைவால் சேவல்களும் விழாவை அலங்கரித்தன. இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப் ஒன்று கம்பீரமாக பள்ளியின் சாரண சாரணியர் கூடாரத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. இந்தக் காட்சி பார்வையாளர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதோடு பாரம்பர்ய பொருள்களின் கண்காட்சி, மிகப் பிரமாண்டாமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. நம் முன்னோர் பயன்படுத்திய தயிர் கடையும் மத்து, டிரங்குப் பெட்டிகள், பனைஓலை விசிறிகள், மரத்தினாலான நாற்காலிகள், தேசப்பிதா காந்தியடிகள், கர்மவீரர் காமராஜர் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் உள்ளிட்ட தலைவர்களின் அரிய புகைப்படங்கள், புகைப்படக் கருவிகள், மரச் சாமான்கள், ஓவியங்கள் என்று கண்காட்சி எங்கும் பல ஆச்சர்யமூட்டும் பொருள்கள் இடம்பெற்றிருந்தன. சுதந்திரத்துக்கு முன்பு பிரசுரம் செய்யப்பட்ட செய்தித்தாள்கள், சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்றுவரை (1000 ரூபாய் நாணயங்கள் உள்பட) பயன்படுத்தப்பட்ட நாணயங்கள், இசைக் கருவிகள், ஆயுதங்கள், மரப்பாச்சி பொம்மைகள், விளக்குகள், கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட விளக்குகள், இரும்புப் பொருள்கள் என மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது பிரமிப்பை ஏற்படுத்தியது. 

இதுகுறித்து விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சுரேஷிடம் கேட்டபோது,

"இவ்விழாவுக்காக இரண்டு மாதத்துக்கு முன்னரே ஆசிரியர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டு, அவர்கள் இரவு பகல் பாராமல் தமிழகம் முழுவதும் தங்கள் தேடுதல்களைத் தொடர்ந்து மேற்கொண்டு இதுபோன்றதொரு கண்காட்சியை நடத்தியுள்ளனர். அவர்களின் உழைப்பே இந்த கிராமியத் திருவிழா மற்றும் கண்காட்சியின் வெற்றி.

'தாயின் கருவறை' என்ற ஓர் அறையில், ஒளிபோக முடியாத அளவுக்கு இருள் சூழ்ந்த நிலையில், தாயின் கருவறையில் ஒரு குழந்தை

வளரும் விதத்தை தத்ரூபமாக படம் பிடித்து வைத்திருந்தனர். 'முதன்முதலாக' எனப் பெயரிடப்பட்ட அறையில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கடிகாரம், பந்துகள், மின்விசிறிகள், கணினி, தொலைக்காட்சி, அவசரஊர்தி, இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், ரயில், பேருந்து போன்ற 50 க்கும் மேற்பட்ட பொருள்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. பாரம்பர்ய விளையாட்டுக்கள் என்ற அறையில் நம் முன்னோர் விளையாடிய 200-க்கும் மேற்பட்ட விளையாட்டுக்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 

இன்றைய தலைமுறையினரிடம் பாரம்பர்ய விளையாட்டுகளை விளையாடும் ஆர்வத்தை விதைத்துள்ளோம். இங்கு வந்த மக்கள் பசியாறுவதற்காக பாரம்பர்ய உணவுக் கடைகளை வைத்திருந்ததும், வேளாண்துறை சார்ந்த இயற்கை விதைகள், உரங்கள், சிறுதானிய பயிர்கள் மற்றும் பொருள்களைக் காட்சிப்படுத்தியிருந்ததும் சிறப்பாக அமைந்திருந்தது. இதுபோன்ற பாரம்பர்யத் திருவிழா தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படும்" என்றார்.

கண்காட்சியைக் பார்வையிட வந்த மக்களின் கண்களுக்கு விருந்தாக குருநாதன் என்பவரின் துடும்பாட்டம், கிராமியப் பாடல்கள், சக்தி கலைக்குழுவினரின் பறையாட்டம், யோகா என பலதரப்பட்ட நிகழ்ச்சிகளுடன் கூடிய களைகட்டிய இத்திருவிழா, பள்ளி மாணவ மாணவியருக்கு மட்டுமல்லாது, கரூர்வாழ் மக்கள் அனைவருக்குமே மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் அமைந்தது.

அடுத்த கட்டுரைக்கு