Published:Updated:

``வளர்ச்சித் திட்டங்களால் உருவான அகதிகள் ஆசியாவில்தான் அதிகம்!” – அமெரிக்கப் பேராசிரியை எலிசபெத் தகவல்

``வளர்ச்சித் திட்டங்களால் உருவான அகதிகள் ஆசியாவில்தான் அதிகம்!” – அமெரிக்கப் பேராசிரியை எலிசபெத் தகவல்
``வளர்ச்சித் திட்டங்களால் உருவான அகதிகள் ஆசியாவில்தான் அதிகம்!” – அமெரிக்கப் பேராசிரியை எலிசபெத் தகவல்

``வளர்ச்சித் திட்டங்களால் உருவான அகதிகள் ஆசியாவில்தான் அதிகம்” என அமெரிக்கப் பேராசிரியை எலிசபெத் ஃபெர்ரிஸ் தெரிவித்துள்ளார்.

``2017-ம் ஆண்டில் அகதிகள் நெருக்கடி முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குத் தீவிரமாக இருந்துள்ளது. 2017-ம் ஆண்டின் முடிவின்போது உலகம் முழுவதும் 68.5 மில்லியன் மக்கள் வலுக்கட்டாயமாகத் தங்களுடைய நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் 85 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் வளரும் நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்’’ என ஐ.நா-வின் அகதிகள் ஆணையம் கடந்த ஜூன் மாதம் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இந்தநிலையில், அமெரிக்கத் தூதரகத்துடன் இணைந்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மையம், ஆசிய ஆய்வுகளுக்கான மையம் மற்றும் இஸ்லாமியக் கல்விக்கான மையம் ஆகியவை இணைந்து ``உலகளாவிய சூழலில் ஆசிய அகதி நெருக்கடி” என்கிற தலைப்பில் ஒரு கலந்துரையாடலை நடத்தின. இதில், அமெரிக்காவின் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் எலிசபெத் ஃபெர்ரிஸ் கலந்துகொண்டு விரிவுரை ஆற்றினார்.

பேராசிரியர் வாசன் அறிமுக உரை வழங்கி அமர்ந்தார். அதன் பின்னர், எலிசபெத் ஃபெர்ரிஸ் பேசினார். இதில், ஆசியாவில் உள்ள அகதிகள் நெருக்கடி, உலகளாவிய சூழலில் எவ்வாறான தாக்கம் செலுத்துகின்றன என்பது பற்றிப் பேசினார். ``அகதிகள் நெருக்கடி என்பது உலகப் போர் நடைபெற்ற காலத்தில் ஐரோப்பாவில் உருவானது. உலகம் முழுவதும் அகதிகள் நெருக்கடி இருந்தாலும் வெகுசிலவை மட்டும் சர்வதேச கவனம் பெறுகின்றன. 1951-ல் கொண்டு வரப்பட்ட ஐ.நா அகதிகள் உடன்படிக்கையில் பாலஸ்தீன அகதிகள் விலக்கப்பட்டிருந்தனர். தற்போதும் உள்நாட்டு அகதிகள், பொருளாதார மற்றும் காலநிலை மாற்றங்களால் இடம்பெயர்பவர்கள் அதிகளாகக் கருதப்படுவதில்லை” என்றார். மேலும், அவர், “வளர்ச்சித் திட்டங்களால் இடம்பெயர்ந்த அகதிகள் ஆசியாவில்தான் அதிக அளவில் உள்ளனர். உலக நாடுகளுக்கு மத்தியில் புலம்பெயர்தவர்கள்/அகதிகள் என்ற வரையறையில் மக்களை வகைப்படுத்துவதிலே சிக்கல் நிலவி வருகிறது. நீண்ட நாள்கள் அகதிகளாக இருப்பவர்கள் விரைவாக அந்த நாடுகளில் மறுகுடியமர்த்தப்பட வேண்டும். உதாரணமாக 7.5 லட்சம் ரோஹிங்யா அகதிகள் வங்கதேசத்தில் தற்காலிகமாகக் குடியேறியுள்ளனர். வங்கதேசம் போன்ற வளர்கிற நாடுகளால் நீண்ட நாள்களுக்கு அகதிகளை வைத்துக்கொள்ள முடியாத சூழலில், ரோஹிங்யா அகதிகள் மியான்மர் திரும்பிச் செல்ல அச்சமடைகின்றனர்” இதுபோன்ற சூழலில் உலக நாடுகள் அனைத்தும் கடமைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் எத்தனை உதவிகள் செய்தாலும், அரசியல் நடவடிக்கைகள் போன்று எதுவும் பயனளிக்காது. வளர்ந்த நாடுகளுக்கு அதற்கான அரசியல் விருப்பம் கொண்டு பிராந்திய அளவில் வேலைகள் செய்ய வேண்டும் என்பதைத் தீர்வாக முன்வைத்தார்.

அதன் பின்னர் பேசிய மானுடவியல்துறைப் பேராசிரியர் சுமதி, “உலகம் முழுவதும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் அகதிகள் தொடர்பான படிப்புகள் அதிகம் உள்ளன. இந்தியாவிலும் அது வளர வேண்டும். கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த பங்களிப்புகளின் மூலமும் அரசியல் ரீதியிலான தீர்வுகளை நோக்கி நகர்த்த முடியும். அதற்கு நம்மிடத்திலே பல்வேறு உதாரணங்கள் இருக்கின்றன” என்றார். பேராசிரியர் சூரிய நாராயணன் பேசுகையில், “நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளில் அகதிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்” என்றார். பின்னர், அகதிக் கவிஞர் பெஞ்சமின் செஃபாணியாவின் கவிதையை மேற்கோள் காட்டி ஒரு நாட்டின் அரசு, ஆளும் கட்சி, ஆட்சியாளர்கள் மீது மக்கள் நம்பிக்கை இழக்கும்போதே அவர்கள் அகதிகளாகிவிடுகின்றனர்” என்றார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் பற்றி மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த எலிசபெத் ஃபெர்ரிஸ், `அமெரிக்காவின் எந்தவொரு முடிவும் மற்ற உலக நாடுகளையும் பாதிக்கும். அமெரிக்கா குடியேறியவர்களால் உருவான நாடு. இதை உணராமல் முஸ்லிம்களுக்குத் தடை விதிப்பது, அகதிகளின் பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளைப் பிரிப்பது என அமெரிக்கா பெரிய தவறுகளைச் செய்து வருகிறது” என்றார். இறுதியாக, சென்னைப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கல்வித் துறையின் பேராசிரியர் அப்துல் ரஹ்மான் நன்றியுரை வழங்கினார்.