Published:Updated:

தாமிரபரணி மகாபுஷ்கரம் விழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலின், அழகிரிக்கு அழைப்பு!

பி.ஆண்டனிராஜ்

தாமிரபரணி மகாபுஷ்கரம் விழாவில் பங்கேற்று புனித நீராடுவதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அவரின் சகோதரர் மு.க.அழகிரி ஆகியோர் வருகை தர வேண்டும் என வாஞ்சி இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் உற்பத்தியாகி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் கடலில் கலக்கும் தாமிரபரணி நதியில் 144 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் மகாபுஷ்கரம் விழா நடைபெற்று வருகிறது. அக்டோபர் 11-ம் தேதி தொடங்கிய இந்த விழா, வரும் 23-ம் தேதிவரை நடைபெற உள்ளது. பாபநாசம் முதல், நதியின் வழியெங்கும் உள்ள படித்துறைகள், தீர்த்தக்கட்டங்களில் நீராட பொதுமக்களும் பக்தர்களும் ஆர்வம் காட்டிவருகிறார்கள். 

இந்த நிலையில், தாமிரபரணி மகாபுஷ்கரம் விழாவில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என வாஞ்சி இயக்கத்தின் நிறுவனத் தலைவரான பி.ராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் விடுத்துள்ள பகிரங்க அழைப்பில், ``தமிழகத்தில் பாயும் முக்கிய நதிகளில் ஒன்றாக தாமிரபரணி உள்ளது. இந்த நதி ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தது. 

இந்த நதியின் முக்கியத்துவம் கருதி, தமிழர்கள் மட்டும் அல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட திராவிட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வட மாநிலத்தவரும் அதிக அளவில் கலந்துகொண்டு நதியில் புனிதநீராடிச் செல்கிறார்கள். அத்துடன், இந்துக்கள் மட்டும் அல்லாமல் கிறிஸ்துவர்கள், இஸ்லாமிய சமூகங்களைச் சேர்ந்தவர்களும் புஷ்கரம் விழாவில் பங்கேற்று புனித நீராடுகிறார்கள். 

தி.மு.க தலைவரான மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்களே. அதேபோல அழகிரியின் குடும்பத்தினரும் ஆன்மிக விவகாரங்களில் ஆர்வம் கொண்டவர்களாகவே உள்ளனர். இருவரின் குடும்பத்தினரும் கோயில்களுக்குச் செல்லக்கூடியவர்கள். அதனால் ஸ்டாலினும் அழகிரியும் தங்களின் குடும்பத்தினருடன் நெல்லைக்கு வருகை தந்து புஷ்கரம் விழாவில் கலந்துகொண்டு தாமிரபரணி நதியில் புனிதநீராட வேண்டும்’’ என அழைப்பு விடுத்துள்ளார்.