Published:Updated:

திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்!- பாதுகாப்பு பணியில் 5 மாவட்ட போலீஸ்

இ.கார்த்திகேயன்
திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்!- பாதுகாப்பு பணியில் 5 மாவட்ட போலீஸ்
திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்!- பாதுகாப்பு பணியில் 5 மாவட்ட போலீஸ்

``திருச்செந்தூர் கந்தசஷ்டிவிழாவின் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி மட்டுமல்லாமல் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 3,200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குற்றம் மற்றும் திருட்டுச் செய்கைகளில் ஈடுபடுபவர்களைக் கண்காணிக்க தென் மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் குற்றப்பிரிவு போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்” என மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா, கடந்த 8-ம் தேதி தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (13.11.18) மாலை நடைபெற உள்ளது. இதைக் காண லட்சக்கணக்கில் பக்தர்கள் கடற்கரையில் கூடுவார்கள். இந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்.பி., முரளி ரம்பா வெளியிட்டுள்ள அறிக்கையில், ``திருச்செந்தூர் சூரசம்ஹாரத்துக்காக வரும் பக்தர்களைக் கண்காணிக்கும் வகையில், நகரில் 10 இடங்களில் கண்காணிப்புக் கோபுரங்கள், 70 சிசிடிவி. கேமராக்கள், 10 எல்.இ.டி.-க்கள் ஆகியவை பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கடற்கரைப் பகுதியில் ரோந்து செல்லக்கூடிய இரண்டு ரோந்து வாகனங்கள் (ஏ.டி.வி) பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

கடலினுள் 6 பைபர் படகுகள் நிறுத்தப்பட்டு கடலில் குளிக்கும் பக்தர்களைக்

கண்காணிக்கவும், மீட்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடலில் குளிக்கும் பக்தர்கள் ஒளிரும் விளக்குகளுடன் அமைக்கப்பட்டுள்ள மிதவைகள் போடப்பட்டுள்ள பகுதியைத் தாண்டிச் சென்று குளிக்க அனுமதி இல்லை. அனைத்து இடங்களுக்கும் பக்தர்கள் செல்வதற்கு ஏதுவாக திருக்கோயில் பகுதியைச் சுற்றிலும் வழிகாட்டிப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் “May I Help U” பூத்துகள் 6 இடங்களில் அமைக்கப்பட்டு அதில், காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவலர்கள் மட்டுமின்றி நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் இருந்தும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை மற்றும் ஊர்க்காவல்படைப் பிரிவினர் உட்பட 3,200 போலீஸார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஏற்கெனவே திருச்செந்தூர் பகுதியில் பணிபுரிந்த அனுபவமுள்ள காவல் அதிகாரிகளும் தனியாக வரவழைக்கப்பட உள்ளனர். அத்துடன், தென் மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் குற்றப்பிரிவு போலீஸார் வரவழைக்கப்பட்டு, குற்றம் மற்றும் திருட்டுச் செய்கைகளில் ஈடுபடுபவர்களைக் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பாக 24 மணி நேரமும் இயங்கும் காவல் சிறப்புக் கட்டுப்பாட்டு அறை திருக்கோயில் புறக்காவல் நிலையத்திலும், கடற்கரைப்பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் சாதி அடையாளங்களுடன் கூடிய ஆடைகள் அணிவதோ, கோஷங்கள் எழுப்பி வருவதற்கோ, ஆயுதங்களோ, கொடிகளோ எடுத்துவர அனுமதி இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.