Published:Updated:

“தூத்துக்குடியில் நிலவுவது மயான அமைதி!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“தூத்துக்குடியில் நிலவுவது மயான அமைதி!”
“தூத்துக்குடியில் நிலவுவது மயான அமைதி!”

“தூத்துக்குடியில் நிலவுவது மயான அமைதி!”

பிரீமியம் ஸ்டோரி

‘‘இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ், பேனர், ஆய்வறிக்கை என எதையும் தூத்துக்குடியில் அச்சிட முடியவில்லை. போலீஸின் அச்சுறுத்தலால் எந்த அச்சகமும் சம்மதிக்கவில்லை. மதுரையில்தான் அச்சிட்டோம். நிகழ்ச்சி குறித்து தூத்துக்குடி எஸ்.பி முரளி ரம்பாவை சந்தித்து மூன்று மணி நேரம் விளக்கிப் பேசினேன். ‘இந்த நிகழ்ச்சியை நடத்தாதீர்கள்’ என்பதையே என்னிடம் 10 முறைக்கு மேல் அவர் சொன்னார்’’ என்கிறார் ஹென்றி திபேன்.

“தூத்துக்குடியில் நிலவுவது மயான அமைதி!”

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான உறுதி ஏற்புக் கூட்டம், மக்கள் விசாரணைக்கான ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஜூலை 22-ம் தேதி நடைபெற்றது. இந் நிகழ்ச்சி பற்றித்தான் அந்தக் குழுவைச் சேர்ந்த ஹென்றி திபேன் இப்படிச் சொன்னார். நிகழ்ச்சிக்கு வந்த மக்கள், தலைவர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரையும் கடும் சோதனை செய்து, வீடியோ பதிவு செய்து அனுப்பியது போலீஸ். ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கோபால கவுடாவின் காரை மடக்கி வீடியோ பதிவு செய்தபோது கோபமடைந்த நீதிபதி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்படியும் அவரை முழுமையாக வீடியோ பதிவுசெய்தே அனுப்பினார்கள்.  

போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட 13 பேர் மற்றும் தடியடியில் உயிரிழந்த பரத்ராஜ், அரசு பஸ் தீவைப்பில் உயிரிழந்த வள்ளியம்மாள் என 15 பேரின் உருவப் படங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

“தூத்துக்குடியில் நிலவுவது மயான அமைதி!”

தி.மு.க எம்.பி-யான கனிமொழி, ‘‘மக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றிய ஆய்வு அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சிக்கு இத்தனை தடைகளா? எந்த விமர்சனத்தையும் சகித்துக்கொள்ளாத சர்வாதிகார ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. தூத்துக்குடியில் அமைதி திரும்பிவிட்டதாக அரசு சொல்கிறது. ஆனால், இது அமைதி அல்ல... மயான அமைதி’’ என்றார்.

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கோபால கவுடா, ‘‘70 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில், இதுபோல ஒரு போலீஸ் அராஜகத்தை நான் பார்த்ததில்லை. ஜாலியன் வாலாபாக் போன்ற நிகழ்வு நடந்துள்ளது. சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டது போலீஸார்தான் என்பதை இந்த ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளோம்’’ என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “வேதாந்தா குழுமத்தின் இயக்குநரான அனில் அகர்வால் பிரதமர் மோடியின் நண்பர். அனில் அகர்வாலை திருப்தி செய்யவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. சம்பவம் நடந்து இரு மாதங்கள் கடந்த நிலையிலும், மாநகரம் முழுவதும் போலீஸார் விலக்கிக்கொள்ளப்படவில்லை. அச்ச உணர்வுடனே மக்கள் நடமாடுகின்றனர்’’ என்றார்.

“தூத்துக்குடியில் நிலவுவது மயான அமைதி!”

ஹென்றி திபேன், ‘‘ஹால் மீட்டிங் நடத்திட காவல்துறையின் அனுமதி தேவையில்லை. ஆனால், காவல்துறையின் அச்சுறுத்தலால், அரங்கு உரிமையாளர்கள் அனுமதி மறுத்தனர். பிறகு, கனிமொழி எம்.பி-யின் மூலம் கலைஞர் அரங்கத்தை முடிவுசெய்தோம். அங்கும் கூட்டம் நடத்தவிடாமல் தடுக்க, ஏதேதோ சான்றுகள் கேட்டு நோட்டீஸ் கொடுத்தது போலீஸ். பிறகு, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவான் அம்புரோஸிடம் பேசி, இந்த இடத்தில் நிகழ்ச்சியை நடத்துகிறோம்’’ என்றார்.

‘இயல்புநிலை திரும்பி விட்டது’ என முதல்வர் சொல்கிறார். இதுதான் அவர் சொல்லும் இயல்பு நிலையா?

- இ.கார்த்திகேயன்
படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு