Published:Updated:

ஸ்டெர்லைட்... தொழில் வளர்ச்சி Vs சுற்றுச்சூழல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஸ்டெர்லைட்... தொழில் வளர்ச்சி Vs சுற்றுச்சூழல்!
ஸ்டெர்லைட்... தொழில் வளர்ச்சி Vs சுற்றுச்சூழல்!

ஸ்டெர்லைட்... தொழில் வளர்ச்சி Vs சுற்றுச்சூழல்!

பிரீமியம் ஸ்டோரி

தூத்துக்குடி வன்முறை நிகழ்ந்து, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட போது, ‘‘இதுபோன்ற சூழல்களால் தமிழகத்தின் தொழில்வளர்ச்சி பாதிக்கப்படுகிறது’’ என்ற குரலும் எழுந்தது. இதுபற்றிய தெளிவைப் பெறுவதற்காக, ஜூலை 20-ம் தேதி The Sterlite Story unplugged என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. சென்னை சர்வதேச மையம் (Chennai International Centre) என்ற அமைப்பு சென்னையில் பல்வேறு கருத்தரங்குகளை நடத்திவருகிறது. அந்த அமைப்பே இதையும் நடத்தியது. இதில் ஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி ராம்நாத், சூழலியல் செயற்பாட்டாளர் நாகசைலா மற்றும் ஓய்வுபெற்ற ஐ.ஜி ராமநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். கோட்டூர்புரத்தில் இருக்கும் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பொதுமக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் நெறிப்படுத்தினார்.

முதலில் பேசிய நாராயணன், ‘‘தொழில் வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்குமான யுத்தம் எப்போதும் தொடரும். வருங்காலத்தில் இது இன்னும் அதிகமாகும். தூத்துக்குடி சம்பவத்தை நாம் இதற்கான ஒரு நிஜமாதிரியாக எடுத்துக்கொள்ளலாம். இந்த மாதிரியான சூழலில் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றி உரையாடவே இந்தக் கருத்தரங்கு” என்றார்.

ஸ்டெர்லைட்... தொழில் வளர்ச்சி Vs சுற்றுச்சூழல்!

தொடர்ந்து பேச வந்த ராம்நாத், ஸ்டெர்லைட் நிறுவனம் பற்றியும், மே 22 சம்பவம் பற்றிய வேதாந்தா நிறுவனத் தரப்பு விளக்கங்களையும் முன்வைத்தார். அப்போது, “ஸ்டெர்லைட் ஆலை எந்தச் சுற்றுச்சூழல் தீங்கையும் விளைவிக்கவில்லை. ஆலை மூடப்பட்டுள்ளதால், தமிழகத்துக்குப் பொருளாதாரரீதியாக நஷ்டம்தான். ஏனெனில், ஸ்டெர்லைட் மட்டுமே தமிழகத்தின் ஜி.டி.பி-க்கு மூன்று சதவிகிதம் பங்களிக்கிறது. அது மட்டுமின்றி, நேரடியாக 4,000 பேருக்கும் மறைமுகமாக 25,000 பேருக்கும் கிடைத்துவந்த வேலைவாய்ப்பும் இப்போது பறிபோயிருக்கிறது. மேலும், தூத்துக்குடி மக்களுக்கு ஸ்டெர்லைட் செய்து வந்த நலத்திட்ட உதவிகளும் நின்றுபோயிருக்கின்றன. எங்கள்மீது எந்தத் தவறும் இல்லை. சோஷியல் மீடியாவைத் தவறாகப் பயன்படுத்தி இப்படி ஒரு சம்பவம் நடக்க சிலர் காரணமாக இருந்திருக்கிறார்கள். ஸ்டெர்லைட்டால் புற்றுநோய் பரவுகிறது என்பதிலும் உண்மையில்லை. அது உண்மை யென்றால், புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையில் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு 14-வது இடம் எப்படிக் கிடைக்கும்?” என்றார்.

அவருக்குப்பின் பேசவந்த நாகசைலா, ‘‘ஜப்பானில் ஃபுகுஷிமா அணு உலை விபத்து நிகழக் காரணமே, சுற்றுச்சூழலை முறைப்படுத்தும் அமைப்புகள் சரியாக இயங்காமல் போனதுதான். இதை ஜப்பானும் ஒப்புக்கொண்டது. எப்படியாவது, அணு உலை வேண்டுமென ஜப்பான் அரசு தந்த அழுத்தம்தான் ரெகுலேட்டேரி அமைப்புகளை அவசர அவசரமாக ஒப்புதல்களைத் தர வைத்தன. அந்தச் சிக்கல் இங்கேயும் நடக்கிறது” என்றார்.

ஸ்டெர்லைட்மீதும் அவர் பல கேள்விகளை முன் வைத்தார். அவற்றில் முக்கியமான சில கேள்விகள்:

1) ஸ்டெர்லைட் மருத்துவ முகாம்கள் பல நடத்துகிறது. ஆனால், செய்ய வேண்டியது மருத்துவ சர்வே (Health study). அதை ஏன் செய்யவில்லை?

2) தூத்துக்குடி மாவட்டம் புற்றுநோயில் 14-வது இடத்தில் இருக்கலாம். ஆனால், அது சரியான கணக்கா? ஸ்டெர்லைட் இருக்கும் பகுதியில் (Cluster) சர்வே எடுத்துப் பார்த்தால்தானே சரியான கணக்கு தெரியும்?

3) ஸ்டெர்லைட் வசம் 172 ஹெக்டேர் நிலம் இருப்பதாகவும், அதில் 43 ஹெக்டர் பரப்பை பசுமை பெல்ட் ஆக்கியிருப்பதாகவும் சொல்கிறீர்கள். ஆனால், மாசுக் கட்டுப்பாட்டு வாரியக் கணக்குப்படி, உங்களிடம் 102.3 ஹெக்டேர்தானே இருக்கிறது? இதைப் பற்றி ஏன் வெளிப்படையாகச் சொல்ல மறுக்கிறீர்கள்?

4) புகைப்போக்கியின் உயரத்திலும் சிக்கல் இருக்கிறது. உங்கள் உற்பத்தித் திறனுக்கேற்ற உயரத்துக்குப் புகைப்போக்கியை ஏன் அமைக்காமல் இருக்கிறீர்கள்?

இந்தக் கேள்விகளில் எதற்குமே ஸ்டெர்லைட் தரப்பிலிருந்து சரியான பதில் தரப்படவில்லை.

ஸ்டெர்லைட்... தொழில் வளர்ச்சி Vs சுற்றுச்சூழல்!

கடைசியாகப் பேச வந்தார் ராமநாதன். “போலீஸ் தங்கள் கடமையைச் சரியாகச் செய்ததாக நினைக்கிறேன். இதுபற்றி விசாரிக்க, தனி கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் முடிவு செய்யட்டும். காவல்துறையின் மனநிலையை விமர்சிப்பவர்கள், கூட்டத்தின் மனநிலையை யோசிக்க மறுக்கிறார்கள். அவர்களைக் கலைப்பது அவசியம். அதன் கடைசி முயற்சிதான் துப்பாக்கிச் சூடு” என்றார்.

மூவரும் பேசி முடித்தபின் பார்வையாளர்கள் கேள்வி கேட்டனர். அதில் சில கேள்விகளுக்கு வந்திருந்த விருந்தினர்கள் பதில் அளித்தனர். விகடன் சார்பாக முக்கியமான ஒரு கேள்வி கேட்டோம். “இந்தப் போராட்டத்தின்போது ஸ்டெர்லைட் நிறுவனம், ஊடகத்துடன் தொடர்பில் இல்லை. எல்லாவகையிலும் முயற்சி செய்தும், எப்போதுமே எங்களுக்குப் பதில் கிடைக்கவில்லை. ஏன்?” இந்தக் கேள்விக்குப் பதிலளித்த ராம்நாத், அதற்கு மன்னிப்பு தெரிவித்துக்கொண்டார்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆலைத் தரப்பு தகவல்கள் அதிகம் வெளிவராமலே இருந்தன. இந்தக் கருத்தரங்கு சில விஷயங்கள் வெளிவர உதவியது. ஆனால், ‘‘இன்னமும் வெளிப்படையாக இருக்க வேண்டியது அவசியம். அதுதான் எல்லா பிரச்னைக்குமான தீர்வாக இருக்க முடியும்’’ என்பதே கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களின் கருத்தாக இருந்தது.

- கார்க்கி பவா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு