
``சமூக வலைதளங்கள் பெருகிவிட்ட தால், இன்று ஒவ்வொரு தனி மனிதனுமே தன்னை ஓர் ஊடகமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான். இதில், யார் தருகிற செய்தி உண்மையானது, எது பொய்யான ஃபார்வேர்டு என்று பிரித்துணர முடியாத காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக் கிறோம். பத்திரிகையாளராக வேண்டுமென்ற உத்வேகத்தில் வந்திருக்கிற உங்களுக்கு, உண்மையான செய்திகளைத் தரும் திடத்துடன் கூடவே, உண்மையல்லாத செய்திகளை அடையாளம் கண்டறியவும் தெரிந்திருக்க வேண்டும்’’ என்று இளம் பத்திரிகையாளர்களுக்கான முக்கியமான சவாலை எடுத்துரைத்தார் ஊடகவியலாளர் ‘நீயா நானா’ கோபிநாத்.
இந்தக் கருத்து வெளிப்பட்ட இடம், மாணவர்களின் ஊடகக் கனவுகளை நிஜமாக்கும் `விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்ட'த்தின் பயிற்சிப் பட்டறை. உயிர்ப்புமிக்க இந்தத் திட்டத்தில் இந்த ஆண்டு 75 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையான பா.ஜ.க-வின் தமிழிசை செளந்தர ராஜன், ‘`இங்கு நிறமாக இருப்பவர்களும், அழகாக இருப்பவர்களும் கேலிக்குள்ளாவதில்லை. உருவம் குறித்த கேலிகள்தாம் அதிகமாக இருக்கின்றன. என் நிறம், கேசத்தைக் கேலி செய்து வருகிற மீம்ஸை நான் பொருட்படுத்துவதே இல்லை. அவை, அவற்றை உருவாக்குபவர்களின் மனதைக் காட்டுகின்றன என்றே நினைத்துக்கொள்வேன்’’ என்று அழுத்தந்திருத்தமாகச் சொன்னார்.
தியேட்டரில் சுடச்சுட ‘ஜுங்கா’ படம் பார்த்துவிட்டு, நடிகர் விஜய் சேதுபதியை உற்சாகத்துடன் பேட்டி எடுத்தார்கள் மாணவ நிருபர்கள். தொலைக்காட்சியில் பகல் நேரத்தில் ஒளிபரப்பப்படும் உள்ளாடைகள், ஆணுறைகளுக்கான கவர்ச்சியான விளம்பரங்களை குழந்தைகளுடன் சேர்ந்து பார்க்க நேரும் சங்கடத்தைக் குறிப்பிட்டுப் பேசியவர், அவற்றை இரவில் குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்னர் ஒளிபரப்பவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார் விஜய் சேதுபதி. ‘பெண்களுக்கு உங்களை ஏன் அவ்வளவு பிடிக்கிறது?’ என்கிற கேள்விக்கு, ‘அவர்களை நான் மதிக்கிறேன். அவர்கள் அன்பின் ஊற்று’ என்று நெஞ்சம் நிறையச் சொன்னவர், தன் அம்மா, மனைவி தன்னுடைய வாழ்வில் எவ்வளவு முக்கியமானவர்கள் என்று மனம் திறந்தார்.

கடந்த ஆண்டின் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில், ஒரு மாணவி உள்பட நான்கு மாணவர்கள் தலைசிறந்த மாணவப் பத்திரிகையாளர்களாக தேர்வானார்கள்.
``படிப்புக்கும் பத்திரிகைப் பணிக்கும் நேரம் ஒதுக்கி சமாளிக்கக் கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு முறை களப்பணிக்குச் செல்லும்போதும் புதுப்புது அனுபவங்கள் கிடைத்தன. என்னை நானே செதுக்கிக்கொண்டேன். இன்று நான் ஒரு பெண் பத்திரிகையாளர் என்பதை நினைக்கவே அவ்வளவு பெருமையாக இருக்கிறது’’ என்கிறார் மாணவி மா.அருந்ததி மனநிறைவுடன்.