Published:Updated:

காந்தி 150 - காந்தியிடமிருந்து எதைக் கற்றுக்கொள்வது?

காந்தி 150 - காந்தியிடமிருந்து எதைக் கற்றுக்கொள்வது?
பிரீமியம் ஸ்டோரி
காந்தி 150 - காந்தியிடமிருந்து எதைக் கற்றுக்கொள்வது?

ரீ.சிவக்குமார் - ஓவியங்கள்: ஆதிமூலம்

காந்தி 150 - காந்தியிடமிருந்து எதைக் கற்றுக்கொள்வது?

ரீ.சிவக்குமார் - ஓவியங்கள்: ஆதிமூலம்

Published:Updated:
காந்தி 150 - காந்தியிடமிருந்து எதைக் கற்றுக்கொள்வது?
பிரீமியம் ஸ்டோரி
காந்தி 150 - காந்தியிடமிருந்து எதைக் கற்றுக்கொள்வது?

காந்தியிடமிருந்து எதைக் கற்றுக்கொள்வது?

இந்திய அரசியல் வரலாற்றில் ‘தேசத்தந்தை’ என்று திருவுரு ஆக்கப்பட்டு அதிகமும் கொண்டாடப்பட்டவரும் காந்திதான்; இடதுசாரிகள், அம்பேத்கரிஸ்ட்கள், பெரியாரியவாதிகள், பெண்ணியவாதிகள், இந்துத்துவவாதிகள், முஸ்லிம் லீக் என சகல தரப்பினராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட வரும் காந்திதான்.

காந்தி 150 - காந்தியிடமிருந்து எதைக் கற்றுக்கொள்வது?

காந்தி பிறந்து 150 ஆண்டுகள் ஆகின்றன. அவர் இறந்து 70 ஆண்டுகள் ஆகின்றன. சரியாகச் சொல்லவேண்டுமானால் அவர் ‘கொல்லப்பட்டு’ 70 ஆண்டுகள் ஆகின்றன. அவர் ஏன் கொல்லப்பட்டார் என்பதிலிருந்தே காந்தியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களையும் அறிந்துகொள்ளலாம்.

சுதந்திரத்துக்குப் பின்னான இந்தியா எப்படி அமையவேண்டும் என்பதில் இருவேறு கருத்துகள் இருந்தன. பாகிஸ்தான் பிரிவினையையொட்டி, இந்தியா என்பது பெரும்பான்மை மதத்தின் அடிப்படையில் இருக்கவேண்டும் என்ற கருத்தை காந்தி மறுத்தார். எல்லா மதத்தினரும் எல்லாச் சாதியினரும் எல்லா மொழியினரும் இணைந்து வாழக்கூடிய ஒரு நிலப்பரப்பாகத்தான் இந்தியா இருக்கவேண்டும் என்பது காந்தியின் கருத்து. இதை ‘உள்ளடக்கும் தேசியம்’ (Inclusive
Nationalism) என்பார்கள். காந்தியோடு பலவகையில் முரண்பட்டாலும் ‘எல்லோரையும் உள்ளடக்கிய இந்திய தேசியம்’ என்பதை ஆதரித்த வகையில் நேரு, அவருக்குச் சரியான சீடராக விளங்கினார். அயோத்தி பாபர் மசூதியில் பிரச்னைகள் தொடங்கியபோது, நேரு உத்தரப்பிரதேச அரசுக்கு எழுதிய கடிதம் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

காந்தி தேச விடுதலைக்குப் பாடுபட்டாலும் தேசியம் என்பதைப் பகைமைக்குரிய ஒன்றாக மாற்றக் கூடாது என்றார். இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்த நேரம், எல்லோரும் அதைப் பகை நாடாகவே பார்த்தனர். ஆனால் காந்தியோ, ‘பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிதியை அளிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி, உண்ணாவிரதம் இருந்தார். இத்தகைய செயல்பாடுகள்தாம் காந்திமீது கோபம் வரக் காரணம் என்று கோட்சே தன் வாக்குமூலத்தில் கூறினார். தன் செயற்பாடுகள் தனக்கு மரணத்தை வரவழைக்கும் என்பதை காந்தி உணர்ந்திருந்தார் என்பதை அவரது கடைசிக்கால உரைகள் உணர்த்துகின்றன. ஏனெனில், காந்தி ஒரே முயற்சியில் கொல்லப்பட வில்லை; ஒரே ஒரு துப்பாக்கி மட்டும் அவரைக் குறிபார்க்கவில்லை. ஐந்தாவது கொலை முயற்சியில்தான் காந்தி கொல்லப்பட்டார். இந்திய அளவில் மட்டுமல்ல, பிறமொழி பேசுபவர்கள்மீது ‘வந்தேறிகளுக்கு எதிரான தமிழ்த்தேசியம்’ என்ற பெயரில் வெறுப்பை உமிழ்பவர்களை எதிர்கொள்ளவும் காந்தி நமக்கு உதவுவார்.

காந்தி தன் வாழ்க்கையைத் ‘திறந்த புத்தகம்’ என்று குறிப்பிட்டதைப்போலவே, மாற்றுக்கருத்துள்ளவர்களுடன் சாத்தியப்பட்ட வரை உரையாடத் தயாராக இருந்தார். அம்பேத்கர், பெரியார், ஜின்னா, ஆர்.எஸ்.எஸ் என எல்லாத் தரப்பினருடனும் உரையாடித் தன் கருத்தை முன்வைத்தார். தேவைப்பட்டபோது சில கருத்துகளை மாற்றியும்கொண்டார். ஆனால், இன்று நாடு முழுவதும் வெறுப்பரசியல் கட்டவிழ்க்கப்படுகிறது. தமிழகத்துக்கு ஒரு
ஹெச்.ராஜா என்றால் இந்தியா முழுவதும் ஏராளமான ஹெச்.ராஜாக்கள் எப்போதும் வெறுப்பை உமிழ்கின்றனர்; சமூக ஒழுங்கைக் குலைக்கின்றனர். ஆனால், ஹெச்.ராஜாவையோ எஸ்.வி.சேகரையோ கைதுசெய்யாத தனிப்படை கருணாஸை மட்டும் கைது செய்கிறது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி ‘நியாயங்களோடு’ செயல்படுவதால்தான் அதற்குப் பெயர் தனிப்படையோ? வெறுப்பின் விஷம் பரவும் இப்படிப்பட்ட காலத்தில்தான் காந்தியை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.

காந்தி தன் அரசியல் வாழ்க்கையில் சந்தித்த முக்கியமான சவால், சாதி குறித்த விவாதம். தொடக்கத்தில் ‘`ரோமானிய, எகிப்திய நாகரிகங்கள் வீழ்ச்சியடைந்துவிட்டன. இந்தியா வீழ்ச்சியடையாமல் இருப்பதற்குக் காரணம் வருணாசிரம அமைப்பே” என்றார். “சாதியமைப்பு இந்திய மக்களின் தேவையை நிறைவுசெய்கிறது” என்றார். முஸ்லிம்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கான தனிப்பிரதிநிதித்துவத்தை ஒப்புக்கொண்ட காந்தியால், அம்பேத்கர் தாழ்த்தப்பட்டோருக்குத் தனிப்பிரதிநிதித்துவம் கேட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், 1932-ல் அம்பேத்கருக்கும் காந்திக்கும் ஏற்பட்ட பூனா ஒப்பந்தம், காந்தியின் கருத்துகளிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தின.

காந்தி 150 - காந்தியிடமிருந்து எதைக் கற்றுக்கொள்வது?

கதர், மதுவிலக்கு என்பதைப்போல தீண்டாமை ஒழிப்புக்கும் காங்கிரஸ் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்றார். காந்தி தமிழகத்துக்கு வந்தபோது, ‘குற்றாலம் அருவியில் குளிப்பதற்குத் தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதியில்லை’ என்று கேள்விப்பட்டு, ‘குற்றாலத்தில் குளிக்க மாட்டேன்’ என்று திரும்பினார். 1934-ல் பீகாரில் பூகம்பம் ஏற்பட்டபோது, “தாழ்த்தப்பட்டோருக்கு மற்றவர்கள் இழைத்த கொடுமைக்கு இயற்கை கொடுத்த பரிசுதான் பூகம்பம்” என்று சொல்லி, பலரின் கண்டனத்தைச் சம்பாதித்தார். தன் இறுதிக்காலத்தில் சாதியமைப்பு, வருணாசிரமம் குறித்த அவர் கருத்துகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. பழைமைவாதிகளுக்கு எதிரான அவருடைய நிலைப்பாடுகளும் அவரது மரணத்துக்குக் காரணம். அதனால்தான், காந்தியைக் கடுமையாக விமர்சித்த பெரியார், காந்தி இறந்தபோது, ‘இந்தியாவுக்குக் காந்தி நாடு என்று பெயர் சூட்ட வேண்டும்’ என்றார்.

இன்றைய உலகமயச் சூழலில் நாம் காந்தியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், நுகர்வு குறித்த அவருடைய கருத்துகள். இன்று மனித வாழ்க்கையில் நுகர்வுக்கலாசாரம் வரம்பு மீறிவிட்டது. எல்லாமும் வணிகமாகிவிட்டது. இந்த வணிகச் சூழலில்தான் நம் வாழ்க்கையின் அற மதிப்பீடுகள் பலியாகின்றன. எல்லோரும் போட்டி நிறைந்த சந்தையில் நம்மை விற்பதற்காக, எந்த எல்லைக்கும் தயாராக இருக்கிறோம். தேவை இருக்கிறதோ இல்லையோ பொருள்களை வாங்கிக்குவித்துக்கொண்டே இருக்கிறோம். நம்மைச் சுற்றிலும் பொருள்கள். இயற்கையை அழித்துப் பொருள்களை உற்பத்தி செய்கிறோம். பொருள்களை வாங்க இயற்கையை அழிக்கிறோம். தேவைக்கான ‘ஷாப்பிங்’ என்பதுபோய் ஷாப்பிங் என்பதே தேவையாக மாறியிருக்கிறது.

காந்தி இந்த நுகர்வுக்கலாசாரத்துக்கு எதிராக இருந்தார். பிரமாண்டமான உற்பத்திக்குப் பதிலாக, அவரவர் தேவைக்கான சிறிய உற்பத்தி என்பதை முன்வைத்தார். ராட்டை என்பது அதன் குறியீடுதான். காந்தியின் கொள்கைகள் இன்று முழுக்கச் சாத்தியமா, காந்தி முன்வைத்த கிராமப்பொருளாதாரம் நம் இன்றைய தேவைகளை முழுமையாக நிறைவுசெய்யுமா, காந்தி புனிதம் என்று கருதிய கிராம அமைப்பில் சாதியும் நிலப்பிரபுத்துவமும் இருக்கிறதே என்று பல கேள்விகள் இருக்கத்தான் செய்கின்றன.

ஆனால், வரம்புகளைக் கடந்து நம் வாழ்க்கையை விழுங்கும் இந்த நுகர்வுக்கலாசாரம் குறித்து யோசிக்க, காந்தி நமக்கு உதவுவார். காந்தியை வழிபாட்டுக்குரியவராக மாற்றாமல், விமர்சனங்களுடன் காந்தியைக் கற்பதும் கற்றுக்கொள்வதும் இன்றைய தேவை. அதை அவரது 150வது பிறந்தநாளிலாவது தொடங்குவோம்.