Published:Updated:

கண்களுக்கு விருந்தளிக்கும் இந்திய நாட்டிய விழா! - களைகட்டும் மாமல்லபுரம்

கண்களுக்கு விருந்தளிக்கும் இந்திய நாட்டிய விழா! - களைகட்டும் மாமல்லபுரம்
கண்களுக்கு விருந்தளிக்கும் இந்திய நாட்டிய விழா! - களைகட்டும் மாமல்லபுரம்

மாமல்லபுரம் பகுதியில் வருடந்தோறும் நடைபெறும் இந்திய நாட்டிய விழா வரும் டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி ஜனவரி 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழக சுற்றுலாத்துறையினர் விழாவுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார்கள்.

டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கி ஒரு மாதம் வரை மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா நடைபெறுவது வழக்கம். வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பகலில் மாமல்லபுரம் பகுதியில் உள்ள சிற்பங்களைப் பார்த்து ரசிப்பார்கள். அதுபோல்  இரவில் நாட்டிய விழாவில் நடைபெறும் இந்திய பாரம்பர்ய நடனங்கள் அவர்களுக்கு நல்ல பொழுதுபோக்காய் அமையும்.

பரதம், குச்சுப்புடி, ஒடிசி உள்ளிட்ட நடனங்களும், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகளும் இதில் இடம்பெறும். பல்வேறு மாநிலங்களிலிருந்தும் கலைஞர்கள் இதில் கலந்துகொள்கிறார்கள். தினசரி மாலை 5.30-க்குத் தொடங்கி இரவு 8.30 வரை நாட்டிய விழா நடைபெறும். இதற்குக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. பாரம்பர்ய நடனங்களைக் காண்பதற்காகவே சுற்றுவட்டாரத்திலிருந்து மாமல்லபுரத்துக்கு நிறையபேர் வருகிறார்கள். சர்தார் வல்லபபாய் படேலின் 140-வது பிறந்ததினத்தையொட்டி ‘ஒன்றே பாரதம் ஒப்பிலா பாரதம்’ என்ற திட்டம் கடந்த 2016-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக மாமல்லபுரத்தில் நடக்கும் இந்திய நாட்டிய விழாவில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பாரம்பர்ய நடனமான டோக்ரி, காஷ்மீரி, லடாக்கி, சஜ்ஜா உள்ளிட்ட நடனக் கலை நிகழ்ச்சிகள் கடந்த வருடம் நடைபெற்றன.