Published:Updated:

`தவறு செய்தால் கேமராவில் சிக்குவார்கள்; யாரையும் விரட்டிப் பிடிக்க வேண்டாம்!’ - காஞ்சிபுரம் எஸ்.பி

`தவறு செய்தால் கேமராவில் சிக்குவார்கள்; யாரையும் விரட்டிப் பிடிக்க வேண்டாம்!’ - காஞ்சிபுரம் எஸ்.பி
`தவறு செய்தால் கேமராவில் சிக்குவார்கள்; யாரையும் விரட்டிப் பிடிக்க வேண்டாம்!’ - காஞ்சிபுரம் எஸ்.பி

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் அதிக அளவு காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். ஒழுங்கீனமாக நடந்து கொள்ளுதல், பொது இடங்களில் மது அருந்துதல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டுள்ளதாகக் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுற்றுலாத் தலங்கள் நிறைந்த பகுதி. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேளிக்கை விடுதிகள், மாமல்லபுரம், வண்டலூர் உயிரியல் பூங்கா, வேடந்தாங்கல், காஞ்சிபுரம் கோயில்கள் என மக்கள் அன்றைய தினம் குடும்பத்தினருடன் பொழுதைக் கழிப்பார்கள். இதனால் எல்லா சுற்றுலாத் தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இந்தநிலையில், புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் நள்ளிரவில் குடித்து விட்டு வாகனங்களில் செல்லுதல், ரேஸ் செல்லுதல் என இளைஞர்கள் சிலர் மக்களுக்குத் தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வது வழக்கமாகிவிட்டது. இதனால், புத்தாண்டை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி, “கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு, கோவளம், பூஞ்சேரி சந்திப்பு எனப் பல இடங்களில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபடுவார்கள். ஓ.எம்.ஆரிலும் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடைபெறும். ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், காஞ்சிபுரம் உட்கோட்டங்களில் அதிக அளவு சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் தீவிர கண்காணிப்பு பணி நடைபெறும். நாளை மாலை முதலே 55 இடங்களில் வாகன சோதனை இருக்கும். ரிப்ளக்ஷன் ஸ்டிக்கருடன் கூடிய 250க்கும் மேற்பட்ட பேரிகாடுகள் (தடுப்புகள்) அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் கூடும் பகுதிகளில் காவல்துறையினர் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். காவல்துறையினருக்கும் ரிப்ளக்ஷன் ஜாக்கெட் உள்ளிட்ட உபகரணங்கள் கொடுத்துள்ளோம். யாரையும் விரட்டக் கூடாது. பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் எனக் காவல்துறையினருக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். மக்களின் பாதுகாப்பிற்காக இவற்றையெல்லாம் செய்துள்ளோம். மக்களும் இதைப் புரிந்து கொண்டு காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கடந்த ஆண்டு விபத்துகள் எதுவும் நடைபெறவில்லை. அது போல் இந்த ஆண்டும் அமைய வேண்டும்” என்கிறார்.